ராஜ்கோட்டில் இருந்து சென்னை வரை 1: லிஃப்டில் மாட்டி முகம் சிதைந்த இளம்பெண் வைசாலி!

ராஜ்கோட்டில் இருந்து சென்னை வரை 1: லிஃப்டில் மாட்டி முகம் சிதைந்த இளம்பெண் வைசாலி!
Updated on
2 min read

விபத்தில் சிக்கிய தன் மகளின் சிகிச்சைக்காக ராஜ்கோட்டில் இருந்து குஜராத், ஆந்திரா, ஹைதராபாத், சென்னை வரை பயணித்த ஒரு மராத்திக் குடும்பத்தின் உண்மைக் கதை இது.

ஜூன் 6, 2017.

செவ்வாய்க்கிழமை மாலைப் பொழுது. அலுவலகத்தில் வேலையாய் இருந்தேன். வரவேற்பில் இருந்து துர்கா அழைத்தார்.

''குஜராத்ல இருந்து யாரோ வந்துருக்காங்க...எடிட்டர் உங்களப் போய் பார்க்க சொன்னாரு..!''

குழப்பத்துடன், ''என்னையா துர்கா, யார் அவங்க?''

''தெரியல.. நீங்களே வந்து பாருங்க..''

யோசனையுடன் வெளியே சென்றேன். ஒரு பெரியவர், அம்மா, இளைஞர், ஓர் இளம்பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

அந்த இளம்பெண் நல்ல நிறம். அவரின் ஒரு கண் மூடியிருந்தது. மற்றொரு விழி அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் உள்ளே அமர்த்தலாய் இருந்தது.

தயக்கத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். பெரியவர் பேசத் தொடங்கினார். ''என் பேரு கரீம்பாய்ங்க. நான் சென்னைலதான் ஆட்டோ ஓட்டறேன். ஒரு நாள் இவங்க என் ஆட்டோல வந்தாங்க. நிறைய பாஷை தெரியுங்கறதால இவங்களாண்ட பேசிட்டே வந்தேன்.

விபத்தால பாதிக்கப்பட்ட பொண்ணோட பேரு வைசாலி மனோகர் பவார். மகாராஷ்டிராகாரங்க. 20 வருஷமா குஜராத்ல இருக்காங்க. ஒரு வருசத்துக்கு முன்னாடி, இந்தப் பொண்ணு ராஜ்கோட்டுல கட்டிட வேலை செஞ்சுகிட்டு இருந்துது. வேலைக்கு அவங்க மர லிஃப்டதான் பயன்படுத்துவாங்க.

அப்போ சரியா ஒரு வருசம் முன்னாடி, இதே ஜூன் மாசம் அந்த சம்பவம் நடந்துச்சி. வேலையா இருந்த வைசாலி யாரோ கூப்டறாங்கன்னு, லிஃப்டுக்குள்ள இருந்து வெளியே எட்டிப் பார்த்துருக்கு.

அப்போ அங்க இருந்த பீமுக்கும், லிஃப்டுக்கும் இடையில வைசாலியோட தலை மாட்டிக்கிச்சு. லிஃப்ட் சடக்குனு இறங்குனதால தலைக்கு மேலயும், கீழயும் வேகமா அமுக்கிடுச்சி. அதனால தாடை மேல இடிச்சு, வாய்க்குள்ள இருக்கற திசுக்கள் உடைஞ்சுடுச்சு. ஒரு கண் மூடிக்கிச்சு.

மேல் தொண்டல இருக்கற சதை பிஞ்சு வந்துருச்சு. கன்னம் கிழிஞ்சி, வாய் மூடிக்கிச்சு. அவங்களால இப்ப சாப்பிட முடியாது. சம்பவம் நடந்த உடனேயே ஒரு ஆபரேஷன் பண்ணிருக்காங்க. கன்னத்துல பிளேட் வச்சு தச்சுருக்காங்க.

இப்போ அவங்க வாயத் திறக்கவும், தொண்டைய சரி பண்ணவும் ரூ.6.5 லட்சம் தேவைப்படுதுங்க மேடம். உங்க பேப்பர்ல செய்தி போட்டு முடிஞ்சத செய்யுங்க!'' என்றார்.

சிகிச்சைக்காக காத்திருக்கும் இளம்பெண் வைசாலி. படம்: எல்.சீனிவாசன்

நிகழ்வைக் கேட்கக் கேட்க பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. நாங்கள் பேசிக்கொள்ளும் பாஷை புரியாவிட்டாலும், வைசாலியின் அம்மா அவரின் வாயைத் திறந்து காண்பிக்கச் சொன்னார். பார்த்ததும் அதிர்ந்தே போனேன்.

வாய்க்குள் மேல்பகுதியில் இருக்கும் எலும்பும், மூடியிருக்கும் தோலும் இல்லாமல் காலியாக இருந்தது. வாய்க்குள் இருக்கும் திசுக்கள் உடைந்திருந்தன. எப்படிச் சாப்பிடுகிறார் என்று அவரின் அம்மாவிடம் சைகையில் கேட்டேன்.

உடனே மேலாடையைத் தூக்கி வயிற்றுப் பகுதியைக் காண்பித்தார். அங்கே குழாய் ஒன்று வயிற்றோடு இணைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாகத்தான் பழச்சாறை ஊற்றி, பசியாறிக் கொள்கிறார் வைசாலி. ஏனோ தானாகவே கண்களில் நீர் சுரந்தது.

மெல்லத் துணியைக் கீழிழுத்துவிட்டு, அவரின் கைகளைப் பற்றிக்கொண்டேன். கதகதப்புடன் இருந்த கையும், அவரின் உடலும் அவரைப் பழைய நிலைக்கு மீட்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

முந்தைய அறுவை சிகிச்சை, தற்போது என்ன சிகிச்சை செய்யப்பட வேண்டும், அதற்கு எவ்வளவு செலவாகும், எங்கே தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களைக் கேட்டு வாங்கி, கவனமாகக் குறித்துக் கொண்டேன். நடந்த சம்பவங்களை ஆசிரியரிடம் விவரமாகக் கூறினேன். பொறுமையாக கேட்டுக்கொண்ட அவர் முகச்சீரமைப்பு நிபுணர் பாலாஜியைச் சென்று பார்க்கச் சொன்னார்.

- பயணம் தொடரும்...

தொடர்புக்கு: 7401297413

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in