Published : 08 Jul 2017 11:13 AM
Last Updated : 08 Jul 2017 11:13 AM

பழசுக்கு இங்கே இன்னமும் மவுசு!- காலத்தை வென்ற டூரிங் டாக்கீஸ்

புதுப்படங்கள் வெளியாகும் தினத் திலேயே அவற்றை ஆன்லைனில் வெளியிட்டு சினிமா தயாரிப்பாளர் களின் வயிற்றில் கிலியையும் புளி யையும் சேர்த்தே கரைக்கிறார்கள்.

இதுமாத்திரமல்ல, திருட்டு வி.சி.டி., புதுப்படங்களை ஒளிபரப்பும் லோக்கல் சேனல்கள் இவைகளாலும் பிரம்மாண்ட திரையரங்குகளே மூடுவிழா கண்டு வரும் காலம் இது. ஆனாலும், தூத்துக்குடி சத்யா டூரிங் டாக்கீஸ் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காலத்தை வென்ற எம்.ஜி.ஆர், சிவாஜி காவியங்களே ‘சத்யா’வை இன்னமும் துடிப்புடன் வைத்திருக்கும் இன்பாக்ஸ் ரகசியம்.

சத்யா பயோகிராஃபி

தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருக்கிறது மாப்பிள்ளையூரணி ஊராட்சி. இதன் முகப்பிலேயே உள்ளது சத்யா டாக்கீஸ். தமிழகத்தில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கிப் போன டூரிங் டாக்கீஸ் மிச்சங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் டூரிங் டாக்கீஸ்களில் தார்ப்பாய்களை மேல்கூரையாகப் போட்டிருப்பார்கள். இப்போது கொஞ்சம் முன்னேற்றம்.. சத்யா இப்போ தகர ஷீட்டுக்கு மாறிட்டாங்க!

ரசிகர்கள் காற்றோட்டமாய் இருக்க ஆங்காங்கே மின் விசிறி வசதி செய்யப் பட்டுள்ளது. தரை பெஞ்ச், பெஞ்ச் என அரங்கிற்குள் செல்ல தனித்தனி வழிகள். வெளிப்பகுதியில் சர்க்கஸ் கூடாரம்போல் கம்புகளை முட்டுக் கொடுத்து அரங்கை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அரங்கத்தின் பக்கச் சுவர்கள் மூன்றடி உயரம் மட்டுமே அதற்கு மேல், அட்டைகளால் அரண் அமைத்திருக்கிறார்கள். ஒரே மூச்சில் மொத்த அரங்கையும் தனித் தனியாக பிரித்து அடுக்கிவிடக் கூடிய அளவுக்கு ஒரு ‘மினியேச்சர்’ கணக்காய் நிற்கிறது சத்யா.

முன்பு போல இப்போது இங்கே தரையில் மணலைக் குவித்து ஹாயாக காலை நீட்டி மடக்கி படம் பார்க்க முடியாது. அரசு ஆணைக்கினங்க எல்லாமே பெஞ்சுதான்! ஆதிகாலத்து வழக்கப்படியே, இங்கே இரண்டு கூம்புக் குழாய் கட்டி பாட்டெல்லாம் போட்டு மக்களை திரட்டுகிறார்கள். எந்தப்பாட்டுப் போட்டால் டிக்கெட் கொடுப்பார்கள், எந்தப்பாட்டுப் போட்டால் ஷோ தொடங்கப் போகிறது என்பதை எல்லாம் சத்யா ரசிகர்கள் கணக்காய் தெரிந்து வைத்திருக்கிறார்கள் தினசரி இரண்டு காட்சிகள். சனி - ஞாயிறுகளில் மட்டும் எக்ஸ்ட்ரா ரெண்டு பகல் காட்சிகள். இதுதான் சத்யா பயோகிராஃபி.

செகண்ட் ரிலீஸ் தியேட்டர்

எல்லாம் சரி, டாக்கீஸ்காரங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போமா? ‘‘1983-ல் இந்த டாக்கீஸை நாங்க வாங்கினோம். நல்லா ஞாபகம் இருக்கு.. அன்னை வேளாங்கண்ணி தான் நாங்க போட்ட முதல் படம். அப்போல்லாம் முழுக்க கட்டாந்தரை தான். இப்பத்தான் டூரிங் டாக்கிஸ்லயும் பெஞ்ச் போடணும்னு கவுருமென்டுல சொல்லிட்டாங்க. கால ஓட்டத்துல தூத்துக்குடியிலயும் நவீன தொழில் நுட்ப வசதிகளோட பெரிய, பெரிய திரையரங்குகள் வந்துடுச்சு. அதனால, எங்க டாக்கீஸை செகண்ட் ரிலீஸ் தியேட்டரா மாத்துனோம்.

ரஜினி நடிச்ச ‘மாப்பிள்ளை’ தூத்துக்குடியில் 100 நாள் ஓடுச்சு. நாங்க செகண்ட் ரிலீஸ் பண்ணி மேற்கொண்டு 27 நாள் ஓடவெச்சோம். தூத்துக்குடியில 115 நாள் ஓடுன விஜயகாந்தின் ‘வானத்தைப் போல’ படத்தை நாங்க செகண்ட் ரிலீஸா போட்டு, 24 நாள் ஓட்டுனோம். டூரிங் டாக்கீஸ்ல ஒரு படம் இத்தனை நாள் ஓடுறதெல்லாம் அபூர்வம்!

முதலில் தமிழகத்தில் 1,300 டூரிங் டாக்கீஸ்கள் இருந்துருக்கு. ஆனா, இன்னிக்கு தூத்துக்குடி மாவட்டத்துலயே இது மட்டும் தான் இருக்கு. டூரிங் டாக்கீஸ்கள் 5 வருசம் படம் ஓட்டுனா 90 நாள் பிரேக் விடணும். அந்த சமயத்துல பக்காவா மராமத்து பண்ணி தகுதிச் சான்று வாங்கிட்டுத்தான் மறுபடியும் படம் ஓட்டமுடியும்’’ என்கிறார் சத்யா டாக்கீஸ் உரிமையாளர் பாலகிருஷ்ணன்.

கணேஷ்

டி.டி.எஸ் ஒலித்திறன், க்யூப், வெஸ் டெக்ஸ் புரஜெக்டர் வசதி என காலத்துக்கு ஏற்ப தன்னையும் நவீனப் படுத்திக் கொண்டிருக்கிறது சத்யா டாக்கீஸ். ஆனாலும், பழைய புரஜெக்டரில் ஓடும் பழைய படங்களுக்குத்தான் இங்கே இன்னமும் மவுசு அதிகம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மவுசு

‘‘சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி படம் போட்டுருவோம். எம்.ஜி.ஆர். படங்களுக்கு அதிகமா கூட்டம் வரும்கிறதால தொடர்ச்சியா 259 ஞாயிற்றுக் கிழமைகள் எம்.ஜி.ஆர் படம் போட்டோம். சாதாரண நாள்களில் சராசரியா 60 பேர் வந்தாங்கன்னா எம்.ஜி.ஆர், சிவாஜி படம் ஓடுறப்ப, 200 பேர் வரை வருவாங்க. சின்ன பட்ஜெட் படங்களுக்கும் புதுமுக நடிகர்கள் படங்களுக்கும் பெரிய தியேட்டர்கள்ல திரையிட இடம் கிடைக்காதப்ப அந்தப் படங்களையும் எங்களுக்குத் தருவாங்க. அப்பவும் ஓரளவுக்கு கூட்டம் இருக்கும்

இப்போ எங்க டாக்கீஸ்ல, டிக்கெட் கொடுக்க, போஸ்டர் ஒட்ட, துப்புரவு வேலை செய்யன்னு மூணு பேரு தான் சம்பளத்துக்கு இருக்காங்க. நாங்களே ஆபரேட்டர் வேலையைப் பார்த்துப்போம். போதிய வருமானம் இல்லாததால கூடுதல் ஆட்களை வேலைக்கு வெச்சுக்க முடியலைங்க.’’ என்கிறார் பாலகிருஷ் ணனின் மகன் கணேஷ்.

எத்தனையோ கேளிக்கைகள் வந்தாலும் பொழுது போக்கின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதை நிரந்தரமாக தக்கவைத்திருக்கிறது சினிமா. அது கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று சொல்லிக் கொண்டிருக்கின்றன எஞ்சி இருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x