Published : 11 Jul 2017 10:12 am

Updated : 11 Jul 2017 10:23 am

 

Published : 11 Jul 2017 10:12 AM
Last Updated : 11 Jul 2017 10:23 AM

சொல்லி அடிக்கும் கில்லி ஆசான்! - எண்பதிலும் கம்பு சுற்றும் தெம்பு

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் இறங்கி ‘செண்பகலிங்கம் ஆசான் வீடு எங்கே இருக்கு?’ என்று கேட்டால், சின்னக் குழந்தையும் வழிகாட்டுகிறது. ஆசான் அங்கே அவ்வளவு பிரபலம்!

வயது எண்பதைக் கடந்தாலும் அதற்கான சாயல் கொஞ்சமும் இல்லை. இளமைத் துடிப்புடன் கைகளில் நரம்பு புடைக்க, இளவட்டங்களுக்குச் சிலம்பம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் செண்பகலிங்கம் ஆசான். இன்று நேற்றல்ல.. கடந்த நாற்பது ஆண்டுகளாக இவரது இந்த இலவச சேவை தொடர்கிறது.

காத்திருக்கும் இளைஞர் பட்டாளம்

இவரிடம் சிலம்பம் படிப்பதற்காக தினமும் அதி காலையில் சொத்தவிளை கடற்கரையில் ஒரு இளைஞர் பட்டாளமே காத்திருக்கிறது. ‘‘மற்ற பகுதிகள்ல இருக்கிற சிலம்பம் மாதிரி வெறும் கம்பு சுத்துறதோட மட்டுமில்லாம குமரி மாவட்ட சிலம்பம் கொஞ்சம் வித்தி யாசமா ஆயுதங்களும் பயன்படுத்துற விதமா இருக்கும். இதுக்கு ‘தெங்கன் களரி’ன்னு எங்க முன்னோருங்க பேரு வெச்சிருக்காங்க.

அதாவது, சிலம்பக் கம்போட வாள், கேடயம், கத்தி, ஒத்தைக் கத்தி, அரிவாள், மான் கொம்புன்னு நிறைய வரும். அந்தக் காலத்துல இந்தக் கலையை ஊருக்கு ஒதுக்குப் புறத்துல குழி தோண்டி அதுக்கு மேல கூடாரம் போட்டு அதுக்குள்ள ரகசியமா வெச்சுத்தான் சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப, அப்டி இல்லைன் னாலும் அதைச் சொல்லிக் குடுக்க சரியான ஆட்கள் இல்லை.

கலைக்கு காசு வாங்குறதில்ல..

குமரி சிலம்பத்துல யோகா உள்ளிட்ட ஆசனங்களும் வரும். ரெண்டாம் கிளாஸ் வரைக்கும்தான் நான் படிச்சுருக்கேன். அதுக்கு மேல படிக்கல. ஆனா, 14 வயசுலயே சிலம்பாட்டம் கத்துக்கிட்டேன். அளந் தங்கரை வெங்கடாச்சலம், மின்னல் திரவியம், புதூர் செல்லம், மணவாளக்குறிச்சி செல்லையா இவங்களெல்லாம் எனக்கு சிலம்பம் சொல்லித் தந்த ஆசான்கள். எந்தக்காலத்திலும் இந்தக் கலையைக் காசுக்கு விற்கக்கூடாதுன்னு என்னோட ஆசான்கள் சொல்லிருக்காங்க. அதனால, சிலம்பம் கத்துக்குடுக்குறதுக்காக நான் யாருக்கிட்டயும் காசு வாங்குறதில்லை.’’ என்கிறார் செண்பகலிங்கம் ஆசான்.

தனியார் கல்லூரி ஒன்றில் பம்ப் ஆபரேட்டராக இருக்கும் ஆசானின் பொருளாதார நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. என்றாலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கன்னியாகுமரி ஸ்பெஷல் சிலம்பத்தை இலவசமாகவே சொல்லித் தந்திருக்கிறார்.

இவரிடம் சிலம்பம் கற்கும் சூரப்பள்ளம் கவாஸ்கர், ‘‘என் தலைமுறைப் பிள்ளைகள் அலைபேசிக்குள்ளும் தொலைக் காட்சிக்குள்ளும் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி எதிலும் சிக்கிக் கொள்ளாமல் நமது வீர விளையாட்டான சிலம்பத்தைக் கற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கலையை இலவசமாக எதிர்கால தலைமுறைக்கு கடத்தும் ஆசானை அரசு ஊக்குவிக்க முன்வர வேண்டும்’’ என்கிறார்.

ஆரோக்கியத்தைச் சம்பாதிச்சிருக்கேன்

பயிற்சிகளை முடித்துவிட்டு மீண்டும் நம்மிடம் வந்தார் ஆசான். ‘‘ஆளப் பாத்தீங்கள்ல.. இத்தனை வயசாகியும் சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்புன்னு எதுவும் அண்டாம இருக்கேன்னா அதுக்குக் காரணம் சிலம்பம் தான். காய்ச்சல் தலைவலின்னு ஆஸ்பத்திரிப் பக்கம் தலைவெச்சுப் படுத்ததில்லை. எங்க வீட்டுல மண்பானையில வடிச்ச சம்பா அரிசிச் சாப்பாடுதான். அம்மியில் தான் மிளகாய் அரைக்குறோம். எதையும் ஃபிரிட்ஜ்ல வெச்சுச் சாப்பிடமாட்டோம்.

இப்படி வாழ்றதாலதான் நாலு காசு சம்பாதிக் காட்டியும் நல்ல ஆரோக்கியத் தைச் சம்பாதிச்சிருக்கேன்’’ என்று சொல்லி விட்டு, தனது கைகளின் மேல் முழு உடலையும் பதித்து கடற்கரை மணலில் தலைகீழாக நின்ற செண்பகலிங்கம் ஆசான், தனக்கு பென்ஷன் வழங்க அரசு இன்னமும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை பெரும் குறையாகச் சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.


கவாஸ்கர்


செண்பகலிங்கம் ஆசான்சிலம்பாட்ட வீரர்சிலம்பாட்ட கலைஞர்சிலம்பாட்டம் பயிற்சிசிலம்பம் வகுப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author