Published : 01 Jul 2017 10:59 AM
Last Updated : 01 Jul 2017 10:59 AM

மனிதம் காக்கும் மாணவர் படை!

நெல்லை மாநகரத்து வீதிகளில் அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் சூதானமாய் பறக்கிறது அந்த மாணவர் குழாம். - கண்களால் சாலையோரத்தை மேய்ந்தபடியே! எங்காவது, மனநலம் பாதித்தோரை பார்த்து விட்டால் நின்று அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கும் இவர்கள், இளைய தலைமுறையின் மீது நம்பிக்கையை விதைக்கிறார்கள்.

இவர்கள் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் மாணவர்கள். மனநலம் பாதித்தவர்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்வதற்கென்றே இந்தக் கல்லூரியில் ‘மனிதம் அறக்கட்டளை’யை வைத்திருக்கிறார்கள். இதை உருவாக்கியவர் கல்லூரி முதல்வர் முகமது சாதிக்.

ஒரு இயக்கமாக..

மனிதம் அறக்கட்டளையும் மாணவர் குழாமும் செயல்படும் விதம் குறித்து நம்மிடம் பேசினார் முகமது சாதிக். ‘‘சாலையோரம் கேட்பாரற்று சுற்றித் திரியும் மனநலம் பாதித்தோருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவு. தொடக்கத்தில் என்னால் முடிந்த உணவு, உடைகளை அவர்களுக்கு கொடுத்து வந்தேன். ஒருகட்டத்தில், இதை நாம் ஒருவராக செய்வதைவிட ஒரு இயக்கமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. அதில் உதயமானது தான் ’மனிதம் அறக்கட்டளை.’ தமிழ்த்துறையின் முனைவர் சாதிக்கை மனிதம் பொறுப்பாளராக நியமித்தோம்.

சமூக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்களே இதன் அங்கத்தினர்கள். இவர்களைக் கொண்டு நெல்லை மாநகராட்சி பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 35 பேரையும் அவர்களின் சாலையோரத்து இருப்பிடத்தையும் அடையாளப்படுத்தி உள்ளோம். இவர்களுக்கு மாணவர்கள் தினமும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள். இதற்கான தொகையை மனிதம் வழங்கும். சமூகப்பணி என்பதால் கல்லூரி நிர்வாகமும் எங்களை முழுமையாக ஊக்கப்படுத் துகிறது.

வாட்ஸ் அப் குழு

மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக இலவச இல்லம் ஒன்றை அமைக்க திட்டமிட்டோம். அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால் முதல் கட்டமாக இந்த பணியை செய்கிறோம். இதில்லாமல், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களை சேர்த்து ’மனிதம் வாட்ஸ் அப் குழு’ ஒன்றும் அமைத்துள்ளோம்.இதில் உள்ளவர்கள், மனநலம் பாதித்தவர்களை எங்காவது பார்த்தால், அந்த நபரின் புகைப்படம், இருக்குமிடம் இவற்றைப் பதிவிடுவார்கள். அடுத்த சில நிமிடங்களில் மனிதம் மாணவர் படை அங்கு நிற்கும்.’’ என்று சொன்னார் முகமது சாதிக்.

களத்தில் இருந்த மனிதம் மாணவர்கள் ராமகிருஷ்ணன், முத்து மகேஷ், வெங்கடேஷ், ஆனந்த், பிரகாஷ், முன்னாள் மாணவர் சரவணவேல் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், “பசியுடன் இருக்கும் மன நலம் பாதித்தோருக்கு உணவிடுவது பெரிய சேவை. குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் சிலரும் மனநலம் பாதித்தவர்களைக் கொண்டுவந்து இங்கே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார்கள். இப்படி விடப்படுபவர்கள் தங்களது சொந்த ஊர்கூடத் தெரியாமல் இங்கே சாலையோரங்களில் கிடந்து அல்லல்படுகின்றனர்.

நாங்கள் கொடுக்கும் சாப்பாட்டை பலர் வாங்கிச் சாப்பிடுவார்கள். சிலர், எங்களை திட்டவும், கல்லால் தாக்கவும் முயற்சிப்பார்கள். இதையெல்லாம் அவர்கள் சுயநினைவோடு செய்வதில்லை என்பதால் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்படி பொறுமை காத்துத்தான் 35 பேரின் விவரங்களை ஓரளவு பேசி தெரிந்துகொண்டோம். கட்டபொம்மன் நகர் பாலத்தின் கீழே 6 பேர் சில நாட்களாக இருக்கிறார்கள். இந்தி மட்டுமே பேசும் இவர்களது விவரங்களைப் பெற இப்போது முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x