Published : 26 Jul 2017 08:11 AM
Last Updated : 26 Jul 2017 08:11 AM

குஜராத்துக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரண நிதி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குஜராத் மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

குஜராத் முதல்வர் விஜய் ருபானி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, வட குஜராத்தில் பனஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மெகசானா ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து எடுத்துரைத்தார்.

இதையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட முடிவு செய்த பிரதமர் நேற்று பிற்பகல் அகமதாபாத் சென்றடைந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ள பாதிப்பு குறித்து அவரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்துக்கு மத்திய அரசு சார்பில் உடனடி நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

குஜராத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 82 பேர் இறந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து 36,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறப்ப டுத்தியுள்ளனர். ராணுவம், விமானப் படை மற்றும் பேரிடர் மீட்புப் படை உதவியுடன் 1600-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளத்தால் மும்பை டெல்லி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில் பலன்பூர் என்ற இடத்தில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட குஜராத்தை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஹிம்மத் நகர், பலன்பூர், மெகசானா அகமதாபாத், பதான் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 913 பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத் வெள்ள நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வர் ருபானி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “அண்டை மாநிலமான ராஜஸ்தானில் பெய்யும் கன மழை யால் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்டி வாடா, சிபு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் அவற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து தாழ் வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப் புறப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x