

கலாமின் 22 ஆண்டு தனிச்செயலாளர் ஷெரிடன்
ரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளைவிட அதிகமாக பொதுமக்களை சந்தித்த ஒரே குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்கிறார் அவரது தனிச்செயலாளர் ஹேரி ஷெரிடன்.
ஷெரிடன், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் குடியரசு தலைவராகவும் அப்துல் கலாம் பதவி வகித்த காலத்தில் அவருக்குத் தனிச்செயலாளராகச் செயல்பட்டவர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், கலாமுடன் இருப்பதற்காக தனது பதவிக்காலம் முடிந்த பின்பு, அரசு பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றார்.
தனது வாழ்க்கையில் சுமார் 22 வருட காலத்துக்குத் தன்னுடன் இருந்த நண்பர் ஷெரிடன் என ‘A.P.J.ABDUL KALAM: My Journey’ எனும் நூலில் கலாம் குறிப்பிட்டுள்ளார். கலாம் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஹேரி ஷெரிடன்:
நாடு முன்னேற வழி
‘குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற கலாமிற்கு அரசியல் அனுபவம் இல்லை எனப் பலரும் எண்ணுவது தவறு. இதற்கு முன்பாக அவர் வகித்த அரசு பதவிகள் பலவற்றின் மூலமாக அரசின் செயல்பாடுகளை அறிந்திருந்தார். பிரதமர் வாஜ்பாய் உட்பட பல மத்திய அமைச்சர்களிடம் துறை ரீதியான தொடர்பு மூலம் நன்கு அறிமுகமாகி இருந்தார். இந்தப் பின்னணியில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அவரிடம் கேட்டபோது, கலாம் உடனடியாக சம்மதிக்கவில்லை. பொறுமையுடன் யோசித்தே முடிவு எடுத்தார்.
அவரது பதவிக்காலத்தில், வளரும் நாடாக இருக்கும் இந்தியா, 2020-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென எண்ணினார். ‘இந்தியா 2020’ என்கிற நூலையும் எழுதியுள்ளார். இதற்கானப் பாதையையும் வகுத்துக் கொடுத்தார். தொழில்நுட்பம், வேதியியல், உணவு, விவசாயம் உட்படப் பல துறைகளில் முன்னேறுவது என்பதற்கான ஆலோசனைகளை முன் வைத்தார்.
கிராமங்கள் வளர்ச்சியடைவதே முக்கிய தீர்வு எனக் கருதினார். அங்கு அனைத்து வகையான வசதிகளை உருவாக்கினால், கிராமவாசிகள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர மாட்டார்கள் என்பது கலாமின் எண்ணம். லட்சத்தீவு தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்தார்.
சாமானியருக்கு விருந்து
குடியரசுத தலைவராக இருந்த காலத்தில் பல வித்தியாசமான வழக்கங்களை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆகஸ்டு 15, ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் தேநீர் விருந்துகளில் அரசு, அரசியல், தொழில் துறைகளில் முக்கிய மானவர்களை விருந்தினர்களாக அழைப்பது உண்டு. ஆனால், கலாம் அவர்களுடன் சேர்த்து தபால்காரர்கள், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களையும் அழைத்தார். மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட அவர்களது எண்ணங்களை அறிந்து செயல்படுவதே அவரது நோக்கமாக இருந்தது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்லுயிர் பூங்கா, மூலிகைப் பூங்கா, பார்வை இல்லா மாற்றுத்திறனாளிகள் தொட்டு உணரக் கூடிய பூங்கா ஆகியவற்றை உருவாக்கினார். இத்துடன் குழந்தைகளுக்காக ‘குழந்தைகள் காட்சிக் கூடத்தை’ அமைத்தார். குடியரசுத் தலைவருக்கு நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் அனுப்பிய ஓவியங்கள், கடிதங்கள், பரிசுப் பொருட்களை இதில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.
குழந்தைகள் சந்திப்பு
குழந்தைகள், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது கலாமின் உயிர்மூச்சாக இருந்தது. இதற்காக, தான் செல்லும் பயணங்களில் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெளிநாட்டுப் பயணங்களிலும் இதைப் பின்பற்றினார். இதில், கலாமின் நீண்ட தலைமுடி மீது பலமுறை எழுந்த கேள்விகளுக்கு சலிக் காமல் பதில் அளித்து வந்தார். அந்த வகையில், அவரது இறப்புக்கு முன்பான கடைசி விஜயம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் பள்ளியாக இருந்தது. அப்போது, தனக்கு பாடம் எடுத்த இயற்பியல் ஆசிரியர் ரெவரண்ட் ஐய்யாதுரை சாலமனை திண்டுக்கல்லில் சந்தித்தார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளைவிட அதிகமாக மக்கள், பள்ளி குழந்தைகள், மாணவர்களை சந்தித்த ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவர்கள் தம்மைச் சந்திக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும்போது வாயில் பாதுகாவலர்களால் எந்தவிதத் தடையும், சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். விளையாட்டு மற்றும் திரையுலக பிரபலங்களைவிட அதிகமானவர் கள் கலாமிடம் ஆட்டோகிராப் பெற்றார்கள்.
நிறைவேறாத விருப்பம்
தென்இந்திய உணவு வகைகளையே அதிகம் விரும்பிய கலாம், முட்டை உட்பட எதையும் உண்ணாத சுத்த சைவமாக இருந்தார். இதை வெளிநாடுகளிலும் தொடர்ந்தார். தென் இந்திய உணவு வகைகளை செய்வதற்காக சமையல்காரர் உட்பட எந்த பணிக்காகவும், யாரையும் அவர் பணியமர்த்தியதில்லை.
பணிகளுக்கு ஏற்றபடி அதிகாலை எழுந்துகொள்ளும் வழக்கம் கொண்ட கலாமிற்கு இரவில் தூங்குவதற்கு குறிப்பிட்ட நேரம் கிடையாது. குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் சக முஸ்லீம் களுடன் இணைந்து கலாம் தொழுகை நடத்தச் செல்வது உண்டு. தனது பதவிக் காலத்தில் செய்ய தவறியதாக கலாம் எண்ணிய ஒரே பணி, குடியரசுத் தலைவர் மாளிகை முழுக்க சூரிய ஒளி மின்சாரப் பயன்பாடுதான்.