Last Updated : 27 Jul, 2017 03:27 PM

 

Published : 27 Jul 2017 03:27 PM
Last Updated : 27 Jul 2017 03:27 PM

கலாம் நினைவு: இந்தியாவும் இளைஞர்களும் விண்ணைத் தொட வழிகாட்டியவர்

கனவு நாயகன் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இந்த மண்ணில் விதைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் வரலாறாகிவிட்டார். ஆனால் அவர் வரலாறு அல்ல, அவர்தான் இந்தியாவின் எதிர்காலம், இளைஞர்களின் எதிர்காலம்.

பறக்கத் தூண்டிய கனவு

அறிவு ஒன்றுதான் மகானாக்கும் என்ற மகோன்னதத்தை புரிந்துகொண்டவராக அப்துல்கலாம் திகழ்ந்தார். அதனால்தான் அவரது 10 வயதில் அவருக்கு வந்த பறக்க வேண்டும் என்ற கனவு, பைலட் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கொடுத்தது. 1954-ல் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது, ஏனென்றால், அன்றைக்கு ஒரு விமான தயாரிப்பு நிறுவனம் இல்லை, ஏவுகணை தயாரிக்கும் நிறுவனம் இல்லை, ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமும் இந்தியாவில் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் 1954-ல் அதைப் படித்தார் என்றால், வேலைக்காக அல்ல தனது லட்சியத்திற்காகவே படித்தார்.

படித்து முடித்ததும், பைலட் ஆக முடியவில்லை, பறக்க வேண்டும் என்ற கனவு நனவாகவில்லை. ஆனால் இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி, வளர்ச்சித் துறையில் சேர்ந்து தண்ணீரில் இருந்து ஒரு அடி, தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் பறக்கும் நந்தி ஹோவர் கிராப்ட் உருவாக்கினார்.

அதேநேரம், அது தொடர்ந்து செயல் படுத்தப்படவில்லை. ஆனால் இன்றைக்கு இந்தியாவின் கடற்கரையை இந்திய கப்பற்படை ஒரு இயந்திரத்தை வைத்து பாது காத்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது அப்துல்கலாம் அறிவில் உதித்த ஹோவர் கிராப்ட்தான்.

விண்ணைத் தொட்ட சாதனை

1960-70-களில் இந்தியா பஞ்சத்தில் வறண்டபோது, ஒரு விஞ்ஞானி கனவு கண்டார், இந்தியாவை விண்ணை அளக்கும் நாடாக மாற்றினால்தான், வளர்ந்த நாடாக உருவாக்க வித்திடமுடியும் என்று நம்பினார். இந்த கனவை நனவாக்கினார் டாக்டர் அப்துல் கலாம், அவர் தலைமையில் SLV3 ராக்கெட்உருவானது, இந்தியா விண்ணை அளந்த நாடுகளில் 5-வது நாடானது. ரோகிணி செயற் கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இன்றைக்கு நிலவில் தண்ணீர் இருப் பதைக் கண்டறிந்த முதல் நாடு இந்தியா; செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற மூன்றாவது நாடு இந்தியா; ஒரே ராக்கெட்டில் 27 செயற்கைக்கோள்களை ஏவிய நாடு அமெரிக்கா, ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை ஏவிய நாடு ரஷ்யா, ஆனால் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை ஏவிய நாடு இந்தியா. இத்தனை சாதனைகளையும் இந்தியா சாதித்ததற்குக் காரணம், தனது 10 வயதில் பறக்க வேண்டும் என்ற கனவை கண்ட அப்துல் கலாம்தான்.

இன்றைக்கு இந்தியாவின் மையப் புள்ளி யில் இருந்து 5000 கி.மீ. சுற்றுவட்டப் பாதை போட்டால், அதில் எந்த நாடும் ஏவுகணை என்ன, அணுகுண்டே வைத்து ஏவினாலும் அதை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற நாடாக மாற்றினார் கலாம்.

வல்லரசாக்கும் திட்டம்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றினால் தான், அறிவில் சிறந்த வல்லரசாக மாற்றினால் தான் 64 கோடி இந்திய இளைஞர்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு உருவாகும். இந்தியா வாங்கும் சந்தையாக அல்ல, உற்பத்திப் பொருளாதார மையமாக மாறவேண்டும் என்றால்  விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, 10 சதவீத பொருளாதார வளர்ச்சியடைந்தால்தான் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ‘இந்தியா 2020’ என்ற தொலைநோக்குப் பார்வை திட்டத்தை இந்தியாவுக்குக் கொடுத்தார் அப்துல்கலாம்.

கிராமப்புறம் தனது பசுமை மாறாமல், சுத்தமான, சுகாதாரமான, சிக்கலில்லா சாக்கடை கொண்ட கிராமமாக, சுத்தமான தண்ணீர் கிடைக்கும் கிராமமாக, தனது

எரிசக்தித் தேவையை தானே உருவாக்கிக் கொள்ளும் கிராமமாக, மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை விவசாயத்தில், கிராமப்புற தொழில்துறையில் உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க ‘புரா’ என்ற திட்டத்தை கலாம் கொடுத்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கையை எந்த ஒரு நாடு கடைப்பிடிக்கிறதோ, அந்த நாடுதான் வளர்ந்த நாடாகும். இந்த லட்சியங்களைக் கொடுத்த அப்துல் கலாம், வரலாறு மட்டுமல்ல, அவர்தான் இந்தியாவின், இளைஞர்களின் எதிர்காலம், நம்பிக்கை, முன்னுதாரணம்.

உனது கனவு, இலட்சியமாக மாறவேண்டும். அந்த லட்சிய சிகரத்தை நீ அடைய அறிவையும் மதிநுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த லட்சிய சிகரத்தில் நீ தொடர்ந்து இருக்க வேண்டுமென நினைத்தால் எளிமையாக இரு, அன்பாக இரு, அடுத்தவர்களை மதித்து நடக்க கற்றுக்கொள், நேர்மையாக உழை, நேர்மையாக வெற்றி பெறு, இதுதான் அப்துல் கலாமின் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

- கட்டுரையாளர், அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர்

alosagarjpg 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x