Published : 30 Jan 2014 21:07 pm

Updated : 06 Jun 2017 18:57 pm

 

Published : 30 Jan 2014 09:07 PM
Last Updated : 06 Jun 2017 06:57 PM

புதுக்கோட்டை: வறட்சியால் வைக்கோல் தட்டுப்பாடு: கால்நடை வளர்ப்பு பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை எதிர்கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்வதே பெரும் சவாலாக உள்ள சூழலில் வைக்கோல், தண்ணீர் பற்றாக்குறையால் கால்நடைகளைப் பராமரிப்பது கூடுதல் சுமையாக இருப்பதாக கால்நடை பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாகவும் விவசாயம் சார்ந்த சூழலைக் கொண்டுள்ளதுமான புதுக்கோட்டையில் மழை, ஆழ்குழாய், காவிரி நீரைக்கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுவதால் அதைச் சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பிலும் மக்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

சொட்டுத் தண்ணீரில்லை…

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாகக் கிடைக்க வேண்டிய மழையளவு 328 மி.மீட்டருக்குப் பதிலாக 101 மி.மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 5,800 குளங்களிலும் சொட்டுத்தண்ணீர் கூட இல்லை. மேலும், இம்மாவட்டத்துக்கு முறையாகத் திறந்து விடாததால் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கறம்பக்குடி வட்டாரத்தில் 25,000 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட சம்பா நெல் சாகுபடியோடு மாவட்டத்தில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முளைவிட்டுக் கருகியதால் விவசாயிகள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 25 ஆயிரம் ஹெக்டேரிலான காவிரிப் படுகைப் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வைக்கோல் இம்மாவட்டத்தின் கால்நடைகள் தேவைக்கு பயன்பட்டது போக எஞ்சியவை விற்பனைக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பராமரிப்பாளர்கள் பெரும் அவதி

தற்போது கடும் வறட்சியால் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு மேய்ச்சல் நிலங்களெல்லாம் பாலைவனமாக மாறுவதால் வைக்கோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாடுகளைப் பராமரிக்க இரண்டு மடங்கு விலை கொடுத்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வைக்கோல் வாங்கி வந்து கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த விலை கொடுத்து வாங்க முடியாத விவசாயிகள் மாடுகளைச் சந்தையில் விற்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாடுகளை விற்கின்றனர்…

இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறியது: “டெல்டா பகுதியில் ஆண்டுக்கு சுமார் 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும். இந்தவருஷம் காஞ்சுபோனதால் இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. 80 விழுக்காடு நெல், விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்ளப்படுவதால் அறுவடையின்போது நெல்லை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடைகளுக்கும், இயற்கை உரத்துக்கும் வைக்கோலை வயலிலேயே விட்டுச்செல்வதால் இப்பகுதியினர் சிரமம் இல்லாமல் மாடு வளர்த்தனர்.

ஆனால், தற்போது வயல் வெளியில் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரியும் மாடுகள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படுகின்றன. சிலர் நமக்கே குடிக்கத் தண்ணீர் இல்லை இதுகளுக்கெல்லாம் எங்கெ போய் தண்ணீர் கொண்டுவருவது என விரக்தி அடைந்து மாடுகளை விற்கின்றனர்” என்றார்.

இருமடங்கு விலை உயர்வு

குளமங்களம் உழவர் மன்ற அமைப்பாளர் முத்துராசு கூறிய போது, “மாவட்டத்தின் டெல்டா அல்லாத பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு டெல்டா பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு ஒரு டிராக்டர் கொள்ளளவு உள்ள வைக்கோலை ரூ.5 ஆயிரத்துக்கும், சரக்கு ஆட்டோ என்றால் ரூ.3 ஆயிரம் கொடுத்தும் வாங்கிப் பயன்படுத்தினோம். ஆனால், இந்த வருடம் டெல்டாவில் சாகுபடி கருகினதால் வைக்கோல் விலை ரெண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

அரசு ரூ.10 லட்சத்தில் 125 தீவனக் கிடங்குகள் அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் சோளத் தட்டை, வைக்கோல் உள்ளிட்ட தீவனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் கிடப்பிலேயே உள்ளது. இத்திட்டம் தொடங்கினாலும் விவசாயிகளிடம் இருந்தால்தானே கொள்முதல் செய்து அவுங்களும் கொடுக்க முடியும். அதனால ஆடு, மாடு எல்லாத்தையும் வித்துப்புட்டு நாமளும் டவுன் பக்கம் போய் ஒரு வேலை பார்த்து பிழைச்சுக்க வேண்டியதுதான்” என்றார்.

சட்டப்பேரவையில் வலியுறுத்தப்படும்

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) எஸ்.லாசர் கூறியது: “புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கால்நடைகளைப் பாதுகாக்கவும், குடிநீர்த் தேவைக்கும் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது முதல்வரிடம் வலியுறுத்தப்படும்” என்றார்.


வறட்சிவைக்கோல் தட்டுப்பாடுகால்நடைகள் பாதிப்புதண்ணீர் பற்றாக்குறைவறட்சி மாவட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author