Last Updated : 27 Jun, 2017 10:08 AM

 

Published : 27 Jun 2017 10:08 AM
Last Updated : 27 Jun 2017 10:08 AM

திக்கெட்டும் மணக்கும் திடீர் நகர்

திடீர் நகர் - தூங்கா நகரமாம் மதுரைக்குள் இருக்கும் குட்டி கிராமம். அச்சு அசலான மதுரைத் தமிழை கேட்கணுமா? ஒரே ஒருமுறை திடீர் நகருக்கு திக்விஜயம் செய்யுங்கள்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தங்கம் தியேட்டர் கட்டுவதற்காக மேலப்பெருமாள் மேஸ்திரிவீதிக்கும், காக்காத்தோப்புக்கும் இடையே இருந்த நிலம் 1949-ல் கையகப்படுத்தப்பட்டது. இதனால், அங்கே வீடுகளை இழந்த மக்கள் எல்லாம் இப்போதைய பெரியார் பேருந்து நிலையம் அருகே புறம்போக்கு நிலத்தில் இரவோடு இரவாக குடிசை போட்டுக் குடியேறினார்கள். அதுதான் இப்போதைய திடீர் நகர்.

இது வேறு உலகம்

குடிசைகள், சாக்கடை, குப்பை, பன்றிகள் போன்ற அடையாளங்களுடன் அரசியல் கொலைகள், குற்றவாளிகளின் புகலிடம் என்ற அவப்பெயரும் கொண்டிருந்த ஏரியா இது. இப்போது, எல்லாம் படிப் படியாக மாறிவிட்டாலும், இன்

றைக்கும் அது மதுரையின் சுவாரசியமான பகுதிதான். பெரியார் பேருந்து நிலையத்துக் கும், போக்குவரத்துக் கழக பணிமனைக்கும் நடுவே சுமார்

8 அடி அகலத்தில் பிரதான சாலை. அதன் வழியே நுழைந் தால், மாநகரத்தில் இருந்து வழுக்கி கிராமத்துக்குள் விழுந்துவிட்ட பிரமை.

தெருவில் மேயும் கோழிகள், ‘கண்ணீர் தொழில்நுட்பம்’ தெரியாததால் அவற்றை காதலிக்க வட்டமிடும் சேவல்கள், வீட்டுக் கொரு நாய், அவைகளுக்குப் பயந்து வீட்டுக்

கூரையிலும், ஆட்டோ மீதும் உட்கார்ந்து புலி போலப் பார்க்கும் பூனைகள், பத்து வீட்டிற்கு ஒரு கொம்பு வளர்த்த செம்மறி ஆடு, ஜட்டிகூட போடாமல் மண்ணை அலையும் குழந்தைகள், வாசலில் உட்கார்ந்து பேன் பார்க்கும் பெண்கள். மொத்தத்தில், வேறு உலகம் இது.

வீடெல்லாம் மல்லிகை வாசம்

8 அடிப்பாதை. உள்ளே போகப்போக இன்னும் சுருங்கிவிடுகிறது. சில சந்துகள் சற்று பருத்த உடல்வாகு கொண்டோருக்கு எலிப்பொறி. குடிசைகள் எல்லாம் இப்போது, அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிகள் போல இரண்டு, மூன்று மாடிக் கட்டிடங்களாக மறுபிறவி எடுத்துவிட்டன். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே சந்தின் வால் பகுதிக்குப் போனால் அங்கே, வைகைக்குப் போட்டியாக ஒரு சாக்கடை ஆற்றைப் பார்க்கலாம். ஒரு காலத்தில் கூடலழகர் பெருமாளுக்கு தீர்த்தம் எடுத்துச்சென்ற கிருதுமால்நதி தான் அது. இதன் கரையோரத்தில் மாட்டுத்தொழுவங்களும், பன்றிக்கொட்டகைகளும் ’கமகம’க்கின்றன.

இங்கே எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும், மல்லிகை வாசம் மூக்கைத் துளைக்கிறது. காரணம், வியாபாரத்துக்காக வீட்டுக்கு வீடு பெண்கள் பூ கட்டுகிறார்கள். சில தெருக்களில் பழக்கம் பேசியபடி, ஏழெட்டு பெண்கள் கும்பலாக உட்கார்ந்தும் பூ கட்டுகிறார்கள். “யாவாரிங்க காலை யிலேயே வீடு வீடா வந்து, ஒரு கிலோ ரெண்டு கிலோன்னு நெறுத்து பூவைத் தந்திட்டுப் போயிடுவாங்கண்ணே. பெரும் பூன்னா கிலோவுக்கு 16, 18 முழம் வரும். பொடிப்பூவுன்னா 20, 21 முழம் வரும். கிலோவுக்கு 60 ரூபா கூலி. நல்லாக்கட்டுனா ஒரு நாளைக்கு வீட்ல இருந்துக்கிட்டே 300 ரூபா சம்பாதிச்சிடலாம்” வியாபாரத் தந்திரம் சொல்கிறார் மலர்க்கொடி.

திடீர் நகர் போல வருமா?

சாந்தியும் மணிமேகலையும் ஒரே வீட்டுக்குள் வாழ்க்கைப்பட்டு வந்த சகோதரிகள். “வசதி வாய்ப்பு வந்ததும் டவுனுக்குள்ள போன சில பேருங்க கொஞ்ச நாள்லயே ‘திடீர் நகர் போல வருமான்’னு திரும்பி வந்திட்டாய்ங்க. ரெண்டு எட்டு எடுத்து வெச்சா பெரியார் பஸ் ஸ்டாண்ட், கூட ரெண்டு எட்டு வெச்சா ரயில்வே டேசன், வெரசலா நடந்தா மீனாட்சியம்மன் கோயில். இந்த வசதி வேறெங்க இருக்கு?

சண்டை சச்சரவுள்ள ஏரியாதான். ஆனா, இங்க மாதிரி உறுத்தான ஆளுகள எங்கிட்டும் பாக்க முடியாது. புருஷன் பொண்டாட்டிச் சண்டைன்னா விலக்கிவிட பத்தாளு வருவாக. நோய் நொடின்னு விழுந்தா, கஞ்சி காய்ச்சிக் கொண்டு வருவாக. ஆஸ்பத்திரியில யாரையாச்சும் சேத்துட்டா ஊரே திரண்டு பார்க்க வரும்” பூத்தட்டின் ஓரத்திலிருக்கும் திராட்

சையை ருசித்தப்படியே திடீர் நகர் பெரு மையில் திளைக்கிறார் மணிமேகலை.

“வீட்ல ஆம்பளைங்க கைய எதிர்பார்க்காம நாங்களும் நாலு காசு வெச்சிருக் கோம்னா அதுக்கு காரணம் இந்த பூதான் ஆனா, வருசம் பூராம் பூவுக்குள்ளயே புழங்குறதால, பூ ஆசையே விட்டுப் போச்சு. விசேஷ வீடுகளுக்குப் போறப்பக் கூட வேண்டா வெறுப்பாத்தான் பூ வெச் சுக்குவோம்” என்று இழுக்கிறார் சாந்தி.

நாங்க மாறிட்டோம்ல..

52 வயதாகும் தேவி பிறந்து, வளர்ந்து, வாழ்க் கைப்பட்டது எல்லாமே திடீர் நகரில் தான். “ஒரு காலத்துல திருட்டுப்பய ஏரியா தம்பி இது. திடீர் நகர்ல திடீர் திருவிழான்னா, பெரியார் பஸ் ஸ்டாண்டுல எவனோ பெரிய சூட்கேஸா அடிச்சிட்டான் போலன்னு சந்தேகத்தோட போலீஸ் ஏரியாக்குள்ள புகுந்திடும். திடீர் நகருக்குன்னு தனி போலீஸ் ஸ்டேஷன், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புன்னு இருக்கும். இப்ப அப்படியில்லை. எங்க பிள்ளைகளும் காலேஜ் படிக்குது. நிறைய பேரு கவுருமென்ட்டு ஊழியர்களா கிட்டாங்க. 300 பேருக்கு மேல ஆட்டோ வெச்சிருக்காங்க.’’ என்று பெருமை கொள்கிறார் தேவி.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வங்கிகளில் பெண்கள் கூட்டம் கும்மியது. அதில் பெரும்பாலானவர்கள் திடீர் நகர் மக்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இதேபோல், சென்னை கூவம்

ஆற்றங்கரையிலும் ஒரு திடீர் நகர் இருக்கிறது. அதுதான் ’டோபி கானா’ என்று சொல்லப்படும் சலவையாளர் துறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x