Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

60 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ‘கிலி’ ஏற்படுத்திய புலி!

நீலகிரியை, கடந்த சில நாட்களாக மனித வேட்டை புலி குறித்த அச்சம் சூழ்ந்துள்ளது. ஐந்து நாட்களில் மூவரை தன் கோரப் பசிக்கு புலி கொன்றுள்ளதால், புலி உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க வனத்துறையினர் முதல் அதிரடிப்படையினர் வரை வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது வரை புலி சிக்கவில்லை.

நீலகிரியில் கடந்த 1954ம் ஆண்டுதான் மனிதர்களை புலி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதை நினைவுகூர்கிறார் நீலகிரி ஆவண மையத்தின் இயக்குநர் வேணுகோபால்.

1950களில் சீகூர் வனப் பகுதியில் மனிதர்களைக் கொன்ற புலியை பிரபல வேட்டைக்காரரும் பின்னர் இயற்கை ஆர்வலராக மாறிய கென்னத் அண்டர்சன் சுட்டுக்கொன்றார்.

சீகூரில் வலம் வந்த இளம் ஆண் புலி மலபார்-வயநாட்டை சேர்ந்தது. சீகூர் மற்றும் ஆனைகட்டி பகுதியில் வேட்டைக் கும்பலால் கண்ணில் காயமுற்றதால் மனித வேட்டை புலியாக மாறியது.

சீகூர் ஆற்றில் ஒரு இளம் பெண்ணைக் கொன்றது, பின்னர் ஒரு வாரம் கழித்து மாடுகளை மேய்த்து வந்தவரை அது கொன்றதால், அண்டர்சன் புலியை வேட்டையாடத் தொடங்கினார். அதன் கால் தடங்கள் கண்டறிந்து சீகூர்-ஆனைகட்டி வழித்தடத்தில் ஒரு வாரம் காத்திருந்தார். ஆனால், புலி தென்படவில்லை. ஏழாம் நாள் தேன் சேகரிக்கச் சென்ற குரும்பர் இனத்தவர் காணாமல் போனார். ஆனால், கரடி அவரை கொன்றது தெரியவந்தது. இந்நிலையில், இரு நாட்கள் கழித்து தெப்பக்காடு பாலம் அருகில் வனவிலங்கு தாக்கி ஒரு பெண் கொல்லப்பட்டார். இதனால், அடர்ந்த வனப் பகுதியினுள் ஆண்டர்சன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சிதைந்து கிடந்தன. அதனை சேரித்து அந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைத்தார்.

மேலும் இரு நாட்களுக்கு பிறகு சீகூர் பகுதியில் தந்தையுடன் உணவு உட்கொண்டிருந்த ஒரு குழந்தை கொல்லப்பட்டது.

தந்தையிடம் அந்த குழந்தையின் உடலை அப் பகுதியிலேயே விட அதன் தந்தையிடம் பேசி சம்மதிக்க வைத்தார் ஆண்டர்சன். இரவு 9 மணி அளவில் மனித வேட்டை புலி குழந்தையை கொன்ற பகுதிக்கு திரும்பியது.

ஆனால், உடலை தொடாமல் திரும்பி விட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு ஆனைகட்டியில் பணியிலிருந்த வனவரின் 18 வயது மகனை புலி கொன்றது. மூன்று நாட்களுக்கு பிறகு ஆன்டர்சன் மற்றும் குரும்ப மக்களுடன் சீகூர் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது திடீரென மான் உள்ளிட்ட விலங்குகளின் சப்தம் கேட்க, சப்தமில்லாமல் கண்காணிக்க மனித வேட்டை புலி மூங்கில் புதர்களிலிருந்து வெளியேறி ஆற்றில் இறங்கியது. கவனமாக புலியின் நடவடிக்கையை கவனித்து அதன் இடது தோளில் ஆன்டர்சன் சுட்டதில் புலி இறந்தது.

புலியின் உடலை பரிசோதித்த போது, அந்த விலங்கிற்கு ஒரு கண் மட்டுமே இருந்தது. மற்றொரு கண்ணில் தோட்டா பாய்ந்த காயமிருந்தது.

அமைதி பள்ளத்தாக்கில் அதனை வேட்டைக் கும்பல் தாக்கியதில் அந்த விலங்கு தனது கண்ணை இழந்து, இரையை வேட்டையாட முடியாததால் மனிதர்களை வேட்டையாடியுள்ளது தெரியவந்தது.

நீலகிரியில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் புலி மனிதர்களை வேட்டையாடி வருகிறது. எனவே, வனத்துறையினர் கவனமாகச் செயல்பட்டு புலியை தேடி பிடிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x