

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 117 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பழமையான கட்டிடத்தை ரூ.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிப்பது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இங்கு, 117 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, தற்போது ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்றவர்கள் பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், கல்வியாளர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்களாகவும் உருவாகியுள்ளனர்.
இந்தப் பள்ளியில் பிரதான கட்டிடம் தரைத் தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 38,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 3.5.1914-ம் ஆண்டில் திறக்கப்பட்டு, இன்றும் அதில் வகுப்பறைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டிடம் உரிய பராமரிப்புகள் இல்லாததால் பல இடங்களில் சிதிலமடைந்திருந்தது. இதையறிந்த இந்த பள்ளியில் 1961-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி கட்டிடத்தைச் சீரமைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் எஜூகேஷன் சொசைட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கிய முன்னாள் மாணவர்கள், நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைக்க முடிவு செய்து, சக மாணவர்களைத் தொடர்பு கொண்டனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவரும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் என்.ஜி. கண்ணன் கூறியது: “இந்தக் கட்டிடம் நல்ல உறுதியுடன் உள்ளது. எனவே, இதை அதன் பழமை மாறாமல் சீரமைக்க முடிவு செய்தோம். இதற்கு மொத்தம் ரூ.50 லட்சம் தேவைப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.25 லட்சம் கட்டிட சீரமைப்புப் பணிக்கும், ரூ.25 லட்சம் வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடப் பொருள்களும் வாங்கப்படவுள்ளன. சுதந்திரத்துக்கு முன்பே 1896-ம் ஆண்டில் தொலைநோக்கோடு ஆசிரியர் ஆர். வீரராகவாச்சாரியாரால் நிறுவப்பட்ட பெருமைக்குரியது இந்தப் பள்ளி.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், நூற்றாண்டுகளைக் கடந்து கல்விக் கேந்திரமாகச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியின் பழமையான கட்டிடத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள், இந்த பணிக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியை அளித்து வருகின்றனர். இன்னும் 2 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, 2014 மே மாதம் 3-ம் தேதி இந்தக் கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.
ஏதேனும் உதவி செய்ய விரும்பும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 98408 82542 அல்லது 94449 66977 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொண்டு, இந்த மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்” என்றார் அவர்.