Published : 04 Feb 2014 08:08 PM
Last Updated : 04 Feb 2014 08:08 PM

திருப்பூர்: உதவித்தொகைக்காக நீடிக்கும் போராட்டம்

திருப்பூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை தங்களது மகனுக்கு பெற 4 ஆண்டுகளாக மனு கொடுத்து போராடி வருகிறது ஓர் இளம் தம்பதி குடும்பம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மகனுக்கு வழங்கக் கோரி ஒரு முறை, 2 முறை அல்ல; நான்கு முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், உதவித்தொகை மட்டும் கிடைத்தபாடில்லை. எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை என திங்கள்கிழமை மனு அளிக்க வந்தபடி புலம்பத்தொடங்கிவிட்டனர்.

அந்தோனி ஜான்சன் கூறுகையில், நாங்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்துகொண்டோம். குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக, திருப்பூரில் தங்கி, பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையால், மகனின் படிப்பு செலவிற்காவது உதவித்தொகை பயன்படும் என 4 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை.

மகன் குருபிரசாத்திற்கு 5 வயது. பிறக்கும்போதே, வலது கை இல்லை. மருத்துவ அறிக்கையின்படி மகனுக்கு 95 சதவீத ஊனம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றபடி குரல் கலங்குகிறது அந்தோனி ஜான்சனுக்கு.

எனவே, தனது மகனின் மருத்துவத் தேவைகள் மற்றும் கல்விச் செலவிற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மகனின் நிலையை பார்த்து அதிகாரிகள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மனு அளிப்பதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அந்தோனிஜான்சன் தம்பதியினர் திருப்பூர் ஆட்சியர் கோவிந்தராஜிடம் தனது மகனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிதொகை வழங்க கோரி மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். ஆனால், இந்த முறையாவது கருணையோடு மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என காத்திருக்கிறது அந்தோனி ஜான்சன் குடும்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x