Last Updated : 04 Feb, 2014 09:24 PM

 

Published : 04 Feb 2014 09:24 PM
Last Updated : 04 Feb 2014 09:24 PM

ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?: கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்திக்கும் தரமான அரிசி உற்பத்திக்கும் புகழ்பெற்ற நகரம். கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தியில் நேர்த்தியான நெசவு, சிறந்த வடிவமைப்பு, உலக அதிசய சின்னங்களை ஒரே சேலையில் வடிவமைப்பது, மிகவும் நீளமான கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்திக்கான மத்திய மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளனர் ஆரணி கைத்தறி நெசவாளர்கள்.

கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தி தொழிலில் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நெசவாளர்களும், அதைச் சார்ந்த தொழிலான சாயமிடுதல், வடிவமைத்தல், பட்டு இழை முறுக்கேற்றுதல், டிசைனிங், ஜாக்காட் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களிலும் நெசவாளர்கள் குடும்பத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தி தொழிலைச் சார்ந்த விவசாய தொழிலான பட்டு புழு வளர்த்தல், பட்டு கூட்டிலிருந்து பட்டு இழை பிரித்தெடுக்கும் ரீலிங் கம்பெனிகள், உள்ளிட்டவைகளும் இத் தொழிலை சார்ந்துள்ளன.

ஆரணித் தொகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கைத்தறிப் பட்டு சேலை வியாபாரிகள், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் கைத்தறிப் பட்டு சேலைகள், தமிழகம் மட்டு மின்றி வடமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் விற்பனை செய்யப் படுகிறது. மத்திய அரசின் சார்பில் ஆரணி பகுதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால், அறிவிப்போடு நின்று போனது. பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையைத்தான் காணோம்.

இது குறித்து கைத்தறிப் பட்டுச் சேலை வியாபாரிகள் சங்க தலைவர் டி.எச். குருராஜராவ் கூறுகையில், ‘‘ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆரணி பகுதியில் ஆய்வு செய்தனர். 40 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைய வேண்டும்.

அதற்கு போதிய அரசு இடம் இல்லாவிட்டால், தனியார் இடங்களை அரசு கையகப்படுத்தி பட்டு ஜவுளி பூங்கா அமைத்திட வேண்டும். இங்கு கைத்தறி நெசவாளர் களின் பங்களிப்பு 40 சதவிகிதம் எனவும் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவிகிதம் எனவும் விதிமுறை உள்ளது.

கைத்தறி நெசவாளர்கள் பங்களிப்பு 25 சதவிகிதமும், மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவிகிதம் என அரசு விதிமுறையை திருத்தி அறிவிக்க வேண்டும். கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைவதால் பாரம்பரியமிக்க கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிலைத்து நிற்கும்.

நெசவாளர்களின் குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இன்றைய சூழ்நிலையில் விசைத்தறி மூலம் பட்டுச் சேலை உற்பத்தி தொழில் 60 சதவிகிததிற்கு மேல் உள்ளதால் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். விசைத்தறி தொழிலின் சதவிகி தத்தை அதிகரிக்காமல், மத்திய, மாநில அரசுகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x