

பூந்தமல்லி ஆர்.கே.வி. சக்தி நகர் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. பின்னர் நள்ளிரவுக்கு பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கொசுக் கடிக்கும் ஆளாக வேண்டியுள்ளது. இதனால் பணிக்கு செல்லும் பெண்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் இரவில் மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
ஜ.பர்வீன், பூந்தமல்லி.
விபத்துகளைத் தடுக்க வேண்டும்
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அடுத்த குண்டலம் பகுதியில், பள்ளிகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அந்த நெடுஞ்சாலையை அதிக அளவில் மாணவர்கள் கடந்து செல்கின்றனர். அங்குள்ள போக்குவரத்து சிக்னல் முறையாக இயக்கப்படுவதில்லை. போக்குவரத்து போலீஸாரும் அங்கு இருப்பதில்லை. எனவே அங்கு அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்.
எம்.ராஜ்குமார், பூந்தமல்லி.
போக்குவரத்துக்கு இடையூறு
கேளம்பாக்கம், கமலா நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் சாலையில் அமர்ந்தபடி மது அருந்துகின்றனர். பின்னர் சாலையிலேயே மது பாட்டிலை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பெண்கள் அந்த சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இப்பகுதிக்கு காவல்துறையினர் ரோந்தும் வருவதில்லை. எனவே இப்பகுதியில் மது அருந்துவோரை விரட்ட போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர், கேளம்பாக்கம்.
பராமரிப்பில்லாத பஸ் நிலையம்
காஞ்சிபுரத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ்கள் மூலம் அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள், பஸ் நிலையம் போதிய பராமரிப்பின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் ரூ.2க்கு பதிலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றன. இருப்பினும் அந்த கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி, அசுத்தமாகவே இருக்கின்றன. ஆங்காங்கே குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே இந்த பஸ் நிலையத்தை தூய்மைப் பகுதியாக மாற்ற வேண்டும்.
என்.கலையரசன், காஞ்சிபுரம்.
குறைந்த அழுத்தத்தில் மின்சாரம்
சைதாப்பேட்டை மேற்கு, காரணீஸ்வரர் கோயில் அருகில், குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அண்மையில் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பிறகுதான், அழுத்தம் குறைவான மின்சாரம் வருகிறது. அந்த அடுக்கு மாடி குடியிருப்புகளிலேயே மின் மாற்றியை வைக்கத் தவறிய மின் வாரியம், ‘மின் மாற்றி அமைக்க இடம் இல்லை; அதனால் அழுத்தம் குறைவாக மின்சாரம் வருவதை எதுவும் செய்ய முடியாது’ என்று பதில் அளிக்கிறது. எனவே இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கிட்டு, சைதாப்பேட்டை.
நிழற்குடை அமைக்க வேண்டும்
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. அதனால் பயணிகள் மழை, வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
எச்.பாஷா, அரும்பாக்கம்.
செயல்படாத டிக்கெட் கவுன்ட்டர்
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், தில்லை கங்காநகர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், ரயில்கள் கடற்கரை மார்க்கமாக செல்லும் பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் உள்ளே வர முடியும். அப்பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த டிக்கெட் கவுன்ட்டர் தற்போது மூடிக் கிடக்கிறது. இதனால், ரயில் நிலையத்தின் மற்றொரு முனையில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்ட்டரில்தான் டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே செயல்படாமல் உள்ள டிக்கெட் கவுன்ட்டரை மீண்டும் திறக்க வேண்டும்.
எஸ்.மோகன், பழவந்தாங்கல்.
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |