Published : 20 Jun 2017 09:58 am

Updated : 20 Jun 2017 09:58 am

 

Published : 20 Jun 2017 09:58 AM
Last Updated : 20 Jun 2017 09:58 AM

சும்மா இருக்குமா சுந்தரம் படை?- உஷாராகும் போலீஸ்

கடந்த 30 ஆண்டுகளாக போலீஸை எதிர்த்து நின்ற ஒரு புரட்சி ஆயுதம் மண்ணில் புதைந்துவிட்டது. ஆம், தமிழர் விடுதலைப் படையினரால் ‘சு’ என்று அழைக்கப்படும் அதன் தலைவர் சுந்தரம் கடந்த ஜூன் 9-ல் காலமாகிவிட்டார்.

சுந்தரத்தின் இயற்பெயர் அன்பழகன். காட்டுமன்னார் கோவில் அருகே நத்தமலை கிராமத்தைச் சேர்ந்த இவரை, இயக்கத் தோழர்கள் ’பெரியவர்’ என பவ்யமாக அழைப்பார்கள். பொறியியலில் பட்டயப் படிப்பாளியான இவர், அரியலூரில் இருந்தபடி, முதலாளித்துவம், நில பிரபுத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த புலவர்.

தமிழர் விடுதலைப்படை

1983-களில் பொன்பரப்பி தமிழரசன் ’தமிழர் விடுதலைப் படை’யைத் தொடங்கியபோது அவரது ஆயுதப் போராட்டங்களுக்கு அதிரடித் திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் சுந்தரம். அப்போது, ஆயுதப் போராட்டங்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வங்கிகளைக் கொள்ளையடிக்க களமிறங்கியது தமிழர் விடுதலைப்படை. அப்படி, 1987-ல் பொன்பரப்பியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டபோது பொதுமக்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் தமிழரசன். இதையடுத்து, தமிழர் விடுதலைப் படையின் தலைவரானார் சுந்தரம்.

இந்த நிலையில், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு சுப.இளவரசனுக்கும் கூவாகம் ராமசாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு தமிழர் விடுதலைப்படையை விட்டு பிரிந்தனர். அதன் பிறகும் அவர்கள் இருவருக்குள்ளும் மோதல்கள் தொடர்ந்ததால் இருதரப்பிலும் ஏழு கொலைகள் விழுந்தன. இருதரப்பையும் சமாதானப்படுத்த சுந்தரம் எடுத்த முயற்சிகள் தோற்றன. முள்ளை முள்ளால் எடுக்கத் திட்டமிட்ட போலீஸும் கொலைகள் விழுவதை கைகட்டி வேடிக்கை பார்த்தது.

போலீஸ் மீது ஆத்திரம்

இதனால், ஆத்திரம் கொண்ட சுந்தரம், போலீஸுக்கு பாடம் புகட்டக் கிளம்பினார். அதன்படி, 1998-ல் ஆண்டிமடம் காவல் நிலை யத்தை தாக்கி அங்கிருந்த 5 துப்பாக்கிகள், 150 தோட்டாக்கள், 7 கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்தது சுந்தரத்தின் படை. மிரண்டுபோன போலீஸ், தமிழர் விடுதலைப் படையை வேட்டையாடப் புறப்பட்டது. அப்போதுதான், ஆண்டிமடம் தாக்குதலையும் தமிழகத்தில் நடந்த சில வெடிகுண்டு தாக்குதல்களையும் பின்னால் இருந்து இயக்கியது சுந்தரம் எனத் தெரிய வருகிறது.

என்றாலும், சுந்தரத்தின் ஒளிப்படமோ அவரைப் பற்றிய வேறு குறிப்புகளோ அதுவரை கைவசம் இல்லாததால் அவரை அடையாளம் காண்பதே போலீஸுக்குச் சவாலாகிப்போனது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட எல்லையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் 7 பேரை போலீஸ் சுற்றி வளைத்தது. அதில் சுந்தரமும் இருந்தார்; ஆனால், அது போலீஸுக்குத் தெரியவில்லை. போலீஸ் தங்கள் பாணியில் விசாரணையை முடுக்கிய போது, ‘பெரியவரை மட்டும் அடிக்காதீங்க’ என்று மற்ற ஆறு பேரும் போலீஸைக் கெஞ்சினார்கள். அப்போதுதான், ‘பெரியவர்’ சுந்தரத்தை அடையாளம் கண்டது போலீஸ்.

வரிசைகட்டிய வழக்குகள்

பிடிபட்ட சுந்தரத்தின் மீது, கொடைக்கானல் டி.வி. டவருக்கு குண்டு வைத்த வழக்கு, கடலூர் மாவட்டம் புத்தூர் மற்றும் ஆண்டிமடம் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்த வழக்குகள், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை தாக்கியது மற்றும் விழுப்புரம் காந்தி சிலையை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்குகள், அதியமான் கோட்டை மின் கோபுரம் தகர்ப்பு வழக்கு என வழக்குகள் வரிசை கட்டின.

இதில், ஆண்டிமடம் வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. மற்ற சில வழக்குகளுக்காக பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டு, 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலையானார் சுந்தரம். சிறைக்களம் சுந்தரத்துக்கு நிறையவே அனுபவங்களைச் சொல்லித் தந்திருந்தது. விடுதலையானதும், ‘போராடியது போதும்; பேசாமல் நத்தமலைக்கு வந்துவிடுங்கள்’ என உறவுகள் மன்றாடின. அதை மறுத்தவர், அரியலூரிலேயே தங்கினார்.

திருமணம் செய்துகொள்ளாத சுந்தரம்

அரியலூர் வட்டத்தில் நண்பர்கள் இயக்கத் தோழர்கள் இல்லங்களில் மாறி மாறித் தங்கியபடி நாட்களை நகர்த்திய சுந்தரம், இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்தவர் அவ்வப்போது அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அவரை இயற்கையிடம் அழைத்துக் கொண்டுவிட்டது.

சிறை மீண்டதும், அரியலூர் மாவட் டத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிமென்ட் ஆலைகளுக்கு எதிராக போராட இளைஞர் களை திரட்டிய சுந்தரம், இயக்கத் தோழர்கள் சிலரே சில சிமென்ட் ஆலை நிர்வாகங் களுக்கு விலைபோய்விட்டது அறிந்து மன வெதும் பியதாகச் சொல்கிறார்கள். என்றாலும் சிமென்ட் ஆலைகளுக்கு எதிரான கோபம் இறுதிமூச்சு வரை அவருக்கு இருந்தது.

விண்ணைத் தொட்ட வீரவணக்கம்

உயிரோடு இருக்கையில் சொந்த ஊருக்குச் செல்ல மறுத்தார் சுந்தரம். இறந்த பின் சொந்த ஊரான நத்தமலை கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் திரளாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைப்படையினர் விண்ணைத் தொடு மளவுக்கு ‘வீரவணக்கம்’ போட்டனர்.

சுந்தரத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் செங்கொடியை நட்ட அவரது இயக்கத்தினர், ‘இந்தக் கொள்கை வீரனை நமக்குத் தந்தவர் இவர் தான் அவரைப் போற்றி வணங்குவோம்’ என்று சொல்லி, நூறு வயதைக் கடந்த சுந்தரத்தின் தாயார் கௌரி அம்மாளை முன்னிறுத்தினர். முடிவில், ‘பெரியவர் இறக்கவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார். அவர் காட்டிய வழியில் இயக்கத்தைக் கொண்டு செலுத்தி, அவரது லட்சியத்தை வென்றெடுக்க சபதம் ஏற்போம்’ என சுந்தரம் படை சூளுரைத்துக் கலைந்திருப்பது காவல்துறையை உஷார் படுத்தியிருக்கிறது.

சாமிக்கண்ணு ’வின்சென்ட் சாலை’

தென்னிந்தியாவில் முதன்முதலில் சலனப் படத்தை மக்களுக்கு திரையிட்டுக் காண்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இவர் பிறந்த கோவை, கோட்டைமேடு பகுதியின் பிரதான சாலை ‘வின்சென்ட் சாலை’ என இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author