Published : 25 Feb 2014 04:56 PM
Last Updated : 25 Feb 2014 04:56 PM

திருச்சி: ஆட்சியரகத்தில் சங்கடத்தில் நெளிந்த குழந்தைகள்

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட வர்களின் குழந்தைகளுக்கு முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10,11,12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த குழந்தைகளில் 33 பேருக்கு உதவித்தொகை வழங்க திருச்சி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு அந்த மாணவ, மாணவிகளை முகமூடி அணிந்து அழைத்து வந்திருந்தனர் அந்தந்த குழந்தைகள் பயிலும் பள்ளிகளின் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்.

இவர்களை காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கண்டுகொள்ளவேயில்லை. ஹெச்.ஐ.வி பாதித்தவர்களின் குழந்தைகளை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முகமூடி அணிவிப்பது வழக்கம். பொதுமக்கள் குறைதீர்க்கும் தினத்தன்று அழைத்து வந்து வரிசையில் காத்திருக்க வைத்ததால் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுக்கொள்ளக் கூடாதே என்கிற கவலையில் சற்றே விவரம் தெரிந்த பிள்ளைகள் சங்கடத்தில் நெளிந்தனர்.

மனு அளிக்க வந்தவர்களில் பலர் முகமூடி அணிந்திருந்த இவர்களை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தனர். சிலர் இவர்கள் எதற்காக முகமூடி அணிந்து வந்திருக்கின்றனர் என கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினர். முதல்வரின் பிறந்த தினத்தையொட்டி இவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். உதவித் தொகை வழங்குவதை ரகசியமாக நடத்தியிருக்கலாம். அதைவிடுத்து நூற்றுக்கணக்கில் மக்கள் கூடும் மனுநீதி நாளன்று வரச்சொல்லி காத்திருக்க வைத்து அவர்களைச் சங்கடப்படுத்தி வழங்கியது மனசாட்சி உள்ள பலருக்கும் உறுத்தலாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x