Last Updated : 07 Feb, 2017 11:08 AM

 

Published : 07 Feb 2017 11:08 AM
Last Updated : 07 Feb 2017 11:08 AM

இஸ்லாமியர்களுக்கு இந்துக்களே துணை நிற்கிறார்கள்!

இன்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 'மனிதநேய மக்கள் கட்சி'. 2009 பிப்ரவரி 7-ல் தொடங்கப்பட்ட அக்கட்சி, தன் இலக்கை எட்டும் முன்பாகவே பிளவுபட்டுவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்துவா சக்திகள் எழுச்சியடைந்துள்ள சூழலில், மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுடன் ஒரு பேட்டி.

* 'தை எழுச்சி', சமூக விரோதிகள் முத்திரைபற்றி...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழக இளைய சமுதாயம் மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறது. இது பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடு. இங்கே ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்க முடியாது என்று உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய தோல்வியை மறைப்பதற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்காக சங்கப் பரிவாரங்கள்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைச் சொல்வார்கள். அந்தச் சூழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வமும் பலியானதுதான் துரதிர்ஷ்டவசமானது.

* முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகத் தனித்தே போராட வேண்டியிருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. ஆரம்ப காலத்திலிருந்தே, திராவிட இயக்கங்கள் இடதுசாரிகள், மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். 1997-ல் கோவையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, தொப்பி, தாடி வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டபோது, இதுபோன்ற முற்போக்குவாதிகள்தான் எங்களுக்கு அரணாக இருந்தார்கள். பல தருணங்களில் இந்துக்கள் எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்! அதேபோல், எங்கள் கட்சியின் துணை பொதுச் செயாலாளராக ஜோசப் நொலாஸ்கோ என்ற கிறிஸ்தவரும், அமைப்புச் செயலாளராக சரவண பாண்டியன் என்ற இந்து வழக்கறிஞரும் இருக்கிறார்கள். இதேபோல மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் பலரைப் பட்டியலிட முடியும்.

* இஸ்லாமியர் அல்லாத பிரச்சினைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை மற்றும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தோம். சட்டமன்றத்தில் நான் விரிவாகப் பேசிய பிறகுதான், மீத்தேன் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது. இலங்கையில் நடைபெற்ற இனஅழிப்பைக் கண்டித்ததுடன், ராஜபக்சேவைக் கைதுசெய்து, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதன்முதலில் குரல் எழுப்பியதும் நாங்கள்தான். மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திலும் எங்கள் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. சென்னை வெள்ளம், வார்தா புயலின்போது களப்பணியாற்றியவர்கள் நாங்கள்.

* வெளிநாட்டு நிதிஉதவியுடன், சமூகசேவை என்ற பெயரில் மதத்தைப் பரப்புகிறீர்கள் என்ற புகார்கள் பற்றி..

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்தும் நிதி பெறவில்லை. 'நீ ஒரு பாதையில் நடந்து சென்றால், அதில் கிடக்கும் முட்களையும் கற்களையும் எடுத்துப் போட்டுவிட்டுச் செல்வது கூட இறை நம்பிக்கையின் வெளிப்பாடே'. 'அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ புசித்திருக்கக் கூடாது' என்று நபிகள் சொல்லியிருக்கிறார். இறைவனின் திருப்தியைப் பெற வேண்டும் என்பதைத்தாண்டி, எந்த உள்நோக்கமும் எங்களுக்குக் கிடையாது.

* பன்னீருக்குப் பதில் சசிகலா...

ஒரு கட்சிக்கு யார் சட்டமன்றக் குழுத் தலைவராக இருக்க வேண்டும் என்று தேர்வுசெய்யும் உரிமை அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கிறது. அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், மத்திய அரசின் போக்குக்கு இதுவரையில் தமிழக அரசு ஒத்துப்போயிருக்கலாம். இனியும் அது தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x