

துப்புரவுத் தொழிலாளர்களின் கொடூர வாழ்க்கையை முகத்தில் அறைந்து சொல்கிறது ‘கக்கூஸ்’ ஆவணப் படம். இயக்குநர் திவ்யா பாரதியுடன் பேசினேன்.
எல்லா துப்புரவுப் பணியாளர்களுமே மலத்தோடு பணிபுரிய நேர்கிறதா?
நிச்சயமாக. நேரடியாக அன்றாடம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மாதம் ஒரு நாளாவது குப்பை அள்ளும்போது கூசி மலத்தை அள்ளும் துப்புரவுப் பணியாளர்களும் இருக்கிறார்கள். நவீன வாழ்க்கை மலத்தைக் காட்டிலும் மோசமான கழிவுகளை அவர்களை அள்ளவைத்திருக்கிறது என்பது நாம் இன்னும் உணர்ந்துகொள்ளாதது. திறந்தவெளிக் கழிப்பறைகளைக் காட்டிலும் கதவடைக்கப்பட்ட கழிப்பறைகள் மூச்சடைக்கக் கூடியவை என்கிறார்கள். கழிப்பறைகளில் விடப்படும் சானிட்டரி நாப்கின்களை அகற்றுவது சவாலான வேலை என்கிறார்கள். மருத்துவக் கழிவுகள் அதைவிட மோசம் என்கிறார்கள். கண்ணாடி, உலோகப் பொருட்கள் கீறிய வடு இல்லாத கைகளை என்னால் பார்க்க முடியவில்லை.
இடஒதுக்கீடும் உலகமயமாதல் சூழ்நிலையும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லையா?
பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை. சரியான சாதிச் சான்றிதழ் பெறுவதிலிருந்து பள்ளிக் கல்வியை முடிப்பது வரை அவர்களுக்கு ஏராளமான தடைகள் இருக்கின்றன. இந்தியாவில் துப்புரவுப் பணியில் இருப்பவர்களில் 90% பேர் பெண்கள். எனது ஆவணப்படத்தில் பேட்டியெடுத்த பெண்கள் நிறையப் பேர் கருப்பை சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். சாதி அடையாளம் சார்ந்த அவமானத்திலிருந்து தப்பிப்பதற்காக இடையில் பள்ளியை விட்டுவந்த கதையைச் சொல்கிறார்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள் வேறு வேலை கேட்டுச் செல்லும்போதும் நாகரிகமாக ‘ஹவுஸ் கீப்பிங்’வேலை செய்கிறீர்களா என்று கேட்கும் நிலை உள்ளதையும் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளைப் போலத் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்க இங்கு வழியில்லையா?
சட்டம், 40-க்கும் மேற்பட்ட உபகரணங்களைத் தர வேண்டும் என்கிறது. ஆனால், வெறும் ஜட்டியோடு புதைசாக்கடையில் மனிதர் இறக்கப்படும் அவலம்தான் இங்கு இருக்கிறது. தமிழ்நாட்டு நிலைமை என்ன தெரியுமா? அரசு, முன்பு துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுத்துவந்த சோப்பைக் கூட கடந்த 18 ஆண்டுகளாகக் கொடுப்பதில்லை. குப்பையை அள்ளுவதற்குக் கரண்டிகள், கோப்பைகள்கூட இல்லாமல்தான் வெறுங்கையுடன் இறங்குகிறார்கள் பல இடங்களில். அரசு சார்பில் கொடுக்கும் கையுறையைப் போட்டால், ஒரு மணி நேரத்தில் கை எரிய ஆரம்பித்துவிடும் என்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கான உந்துதல் எப்போது ஏற்பட்டது?
மதுரையில் 2015-ல் புதைசாக்கடை அடைப்பை நீக்க இறங்கி, இரு துப்புரவுத் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கிப் பலியானார்கள். அவர்களது மரணத்தைப் பதிவுசெய்வதற்கே காவல் துறையினர் அலைக்கழித்தார்கள். அதற்காகவும் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கவும் மூன்று நாட்கள் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இந்த ஆவணப்படத்துக்கான முதல் உந்துதல். மனிதக் கழிவை மனிதனே அள்ளுவது குற்றம் என்கிறது நம் சட்டம்.
வெளிநாடுகளைப் போல துப்புரவுப் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிலை இங்கு எப்போது ஏற்படும்?
உற்பத்தி உறவுகள் மாறும்போதும் மனிதர்களுக்கு இடையிலான அதிகார உறவுகளும் மாறும். பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில், ஆண்களும் சமையல் கட்டில் கை வைக்கும் நிலை ஏற்பட்டபோதுதான் மிக்ஸி, கிரைண்டர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதுபோல, இது தலித் மக்களுக்கான வேலை; யாரோ என்னவோ இழிவுகளைச் சுமக்கிறார்கள் எனும் பொதுச் சமூகத்தின் மனநிலை மாறும்போதுதான் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை மாறும்.