

அக்காலத்தில் ஹசன் என்ற சூபி ஞானி ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். அவரது சீடர்களில் ஒருவர் ஹசனிடம் வந்து, அவரது குரு யார் என்று கேட்டனர்.
அதற்கு ஹசன், “எனக்கு ஆயிரக் கணக்கான குருக்கள் இருக்கிறார்கள். இப்போது அத்தனை பேரைப் பற்றியும் உங்களிடம் சொல்வதற்கு அவகாசம் இல்லை” என்றார். அப்படியும் விடாப்பிடியாக அவர்களது பெயர்களை மட்டுமாவது சொல்ல வேண்டும் என்று கோரினார்.
“ அத்தனை பேரின் பெயர்களை மட்டும் சொல்வதற்குக்கூட எனக்கு மாதங்கள் பிடிக்கும். எனது மூன்று குருக்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். அது அவசியமானதும்கூட” என்றார். ஹசனின் அருகில் இருந்தவர்கள் ஆர்வமாகக் கேட்கத் தயரானார்கள்.
“ அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்துபோனேன். அருகில் உள்ள கிராமத்தைத் தேடிப் போவதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டது. கடைகள் அனைத்தும் மூடிவிட்டன. சாலைகள் வெறிச்சோடி இருந்தன. அப்போதுதான் ஒரு வீட்டின் சுவரில் ஒரு மனிதன் துளை போடுவதைப் பார்த்தேன். அவனிடம், தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று கேட்டேன். அவன் தன்னை ஒரு திருடன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். “ நீங்கள் சூபி துறவியைப் போல இருக்கிறீர்களே?” என்றும் கேட்டான். தற்போதைக்குத் தங்குவதற்கு எங்கும் இடம் இல்லையென்றும், தன் வீட்டில் தங்குவதற்கு விருப்பம் இருந்தால் தங்கிக்கொள்ளலாம் என்றான்.”
“நான் முதலில் தயங்கினேன். ஒரு துறவியைப் பார்த்துத் திருடனுக்கு அச்சமில்லாத நிலையில், துறவி எதற்கு திருடனுக்குப் பயப்பட வேண்டும் என்று எண்ணிப்பார்த்தேன். திருடனுடன் அவன் வீட்டில் தங்கவும் சம்மதித்தேன். அவன் மிகவும் பிரியத்துடன் நடந்துகொண்டான். நான் அவனுடனேயே ஒருமாதம் தங்கினேன். ஒவ்வொரு நாள் இரவும் கிளம்பும்போது அவன் என்னிடம் வந்து, “ பணிக்குப் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டு ஓய்வெடுங்கள்.” என்று சொல்லிவிட்டுப் போவான். அவன் வீடு திரும்பும்போது ஏதாவது கிடைத்ததா என்று கேட்பேன். “இன்று இரவு எதுவும் கிடைக்கவில்லை. நாளை நிச்சயம் முயல்வேன் ” என்பான். நான் இருந்த ஒரு மாதமும் அவன் வெறுங்கையுடனேயே திரும்பினான். ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை விடவேயில்லை. தனக்கு ஏதாவது கிடைப்பதற்காகக் கடவுளிடம் என்னைப் பிரார்த்தனையும் செய்யச் சொல்வான்.”
கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மறுபடியும் ஹசன் பேசத் தொடங்கினார். “நான் அன்றாடம் தியானித்துப் பிரார்த்தனை செய்து ஒருகட்டத்தில் இந்த முட்டாள்தனத்தையெல்லாம் ஏன் நிறுத்தக் கூடாது என்று நினைத்தேன். கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வந்தது. அப்போது அந்தத் திருடனைத்தான் நினைத்துக் கொண்டேன். அந்தத் திருடனைப் போன்றே இன்னொரு நாள் முயல்வேன். ஒருநாள் அந்த அற்புதத் தருணம் வந்தது. அவன் இருந்த திசையை நோக்கிக் கும்பிட்டு நன்றியைச் செலுத்தினேன்.” என்றார்.
“எனது இன்னொரு குருவாக இருந்தது ஒரு நாய்தான். நான் நீரருந்தச் சென்ற ஆற்றுக்கு என் பின்னாலேயே ஒரு நாயும் வந்தது. தண்ணீரைக் குடிப்பதற்கு நீரை நோக்கிச் செல்லும்போதெல்லாம் அது தன் நிழலைப் பார்த்துப் பயந்து கரைக்குப் பின்வாங்கியது. அது தன் பிம்பத்தைப் பார்த்துக் குரைத்தது. ஒரு கட்டத்தில் அதற்குத் தாகத்தைத் தாங்க முடியவில்லை. தண்ணீரில் உடனடியாகக் குதித்தேவிட்டது. தண்ணீரில் அதன் பிம்பம் மறைந்துவிட்டது. நாய் நீரைப் பருகியது. ஆனந்தமாய்க் குளித்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். பயத்திலிருந்து ஒருவர் தப்பிக்க அதற்குள் இறங்கிவிட வேண்டும். பயம் காணாமல் போய்விடும். இதுவே அந்த நாய் மூலம் நான் கற்றுக்கொண்டது.”
“எனது மூன்றாவது குருவோ சின்னஞ்சிறு குழந்தை. ஒரு நகரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தை, ஒரு மெழுகுவர்த்தியுடன் வந்தது. அது எரியும் மெழுகுவர்த்தி. மசூதி ஒன்றில் அந்த மெழுகுவர்த்தியை ஏற்றப்போவதாக என்னிடம் கூறியது. அந்தப் பையனிடம் அவனாகவே மெழுகுவர்த்தியை ஏற்றினானா? என்று கேட்டேன். ஆம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அந்தப் பையன். அவனிடம் ஒளி எங்கிருந்து வருகிறது என்று கேட்டேன். அந்தப் பையன் சிரித்துக்கொண்டே, மெழுகுவர்த்திச் சுடரை வாயால் ஊதி அணைத்தான். ஒளி போன இடம் எங்கே என்று என்னிடம் கேட்டான். எனது அகந்தை நொறுங்கியது. எனது மொத்த அறிவும் சிதறிப்போனது போல உணர்ந்தேன். அதிலிருந்து அறிவார்த்தம் அனைத்தையும் நான் கைவிட்டேன்” என்றார்