

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியான பேச்சிப்பாறை அணையை ஒட்டிய மலைப் பகுதிகளில், காணி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்விடங்களில் அடிப்படைத் தேவைகள் பலவும் நிறைவேறாத நிலையில், இருக்கும் இடத்தையும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
திருவிதாங்கூர் சமஸ்தான த்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர் மாவுக்கும், அவரது எதிரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. காட்டுக்குள் தஞ்சம் புகுந்த மன்னரைக் காத்து, சேவகம் புரிந்தனர் `காணி’ மக்கள். அதற்கு பிரதிபலனாக மன்னர் மீண்டும் அரியணை ஏறியதும், இம்மக்களுக்கு மலைப் பகுதியில் உள்ள இடங்களை, ‘கரம் ஒளிவு பண்டார வகை காணிச்சொத்து’ என்ற பெயரில் செப்புப்பட்டையம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
காணி மக்கள் யார்?
மன்னர் கொடுத்த காணிக்கு (இடம்) சொந்தக்காரர்கள் ஆனதால், இவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படுவதாக வரலாற்றுப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. பேச்சிப்பாறையையொட்டி, தச்சமலை, தோட்டமலை, மாறாமலை உள்ளிட்ட 48 குடியிருப்புகளில் காணி மக்கள் வசிக்கிறார்கள்.
மொத்தம் 7,500 காணிக்காரர் களே இருக்கும் சூழ்நிலையில், மன்னர் ஆட்சிக் காலத்தில் மரியாதையுடன் வாழ்ந்து வந்த இவர்களை, இப்போது கானகத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அம்மக்கள் புலம்பி வருகிறார்கள்.
உரிமைகள் மறுப்பு
பேச்சிப்பாறை பேரூராட்சித் தலைவர் ராஜன் காணி கூறியதாவது: பழங்குடி மக்களுக்கான மத்திய அரசின் வரலாற்று வன உரிமைககள் சட்டம் 2006-ல் குறிப்பிட்டுள்ள அனைத்து உரிமைகளும், இந்தியாவின் அனைத்து பழங்குடி மக்களுக்கும் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டு ள்ளது. ஆனால், தமிழகத்தில் உரிமைகள் வழங்காமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன.
வாழ்வாதாரத்துக்காகவும், உறைவிடத்துக்காகவும், பயிர் செய்து வாழவும் ஒவ்வொரு காணியின நபரும் அதிகபட்சம் பத்து ஏக்கர் வன நிலம் வைத்துக் கொள்ளவும், அதில் வாழ்கின்ற உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குமரி மாவட்டத்தில் மேற்படி சட்டத்தைக் காட்டி விண்ணப்பித்தும், 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காணியின மக்கள் வனப்பகுதிகளில் பாரம்பரியமாக வசித்து வருவதால், அவர்களின் போக்குவரத்து, வாழ்வாதாரம், உணவுத் தேவைக்காக நீர் நிலைகளை கையாள்வது, வன விளைச்சல் பொருள்களை சேகரம் செய்து விற்பனை செய்து பொருளீட்டுவது, கால்நடைகளை மேய்ச்சல் செய்து பொருளீட்டுவது முதலிய பாரம்பரிய உரிமைகளை, வன உரிமைகள் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், குமரி மாவட்ட காணியின மக்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது.
ஓரவஞ்சனை
வனத்துறையிடம் குத்தகையாக நிலம் எடுத்து, பல ஆண்டுகளாக அரசு ரப்பர் கழகம், ரப்பர் பயிரிட்டுள்ளது. அவர்கள் முதிந்த மரங்களை நீக்கி விட்டு, மறு நடவு செய்யவும், வாழை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்கள் செய்யவும், யானைகள் வராமல் இருக்க அகழி வெட்டவும், கனரக இயந்திரங்களை பயன்படுத்தவும் வனத்துறை அனுமதிக்கிறது. ஆனால், இதே பணியை விவசாயம் செய்யும் காணி மக்கள் செய்ய உரிமையில்லை என்றால் என்ன நியாயம்? என்றார் அவர்.
அடிப்படை வசதி தேவை
தச்சமலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் காணி கூறியதாவது:
காணி மக்களின் பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றி, குரங்கு, மிளா ஆகிய விலங்குகளை, வன உயிரின பாதுகாப்புச் சட்டம்-1972 பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காணி செட்டில்மென்டுகளையும் இணைக்க, இணைப்புச் சாலை இல்லை.
காணி மக்கள் அவசர மருத்துவ உதவிக்கு மலையில் இருந்து இறங்கி பேச்சிப்பாறைக்கு வர வேண்டிய நிலையுள்ளது. மோதிரமலை, ஆலம்பாறை ஆகிய காணி செட்டில்மென்ட்களில் துணை சுகாதார மையங்கள் அமைத்தால், காணி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும். வனத்துறையினர் காணி மக்களின் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.
பின் தங்கிய கிராமங்கள் பல வளர்ச்சி பெற்ற நிலையில், பின்னமூட்டுதேரி, களப்பாறை, நடனம் பொற்றை, மாறாமலை, சிலங்குன்று, முகளியடி, வெட்டம் விளை, பெருங்குருவி ஆகிய காணி செட்டில்மென்ட்களில் இன்னமும் கூட மின்சாரம் இல்லை.
கோரிக்கை மாநாடு
இத்தனை சிக்கல்கள் போதாது என, மத்திய அரசும் புதிதாக, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை அமல்படுத்த இருக்கிறது. திரும்பிய திசையெல்லாம் காணி மக்களுக்கு அடி விழுகிறது என்றார் அவர்.
காணி மக்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து, வரும் 5ம் தேதி பேச்சிப்பாறையில் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதிலும் உள்ள முன்னோடி பழங்குடி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.