Last Updated : 23 Mar, 2017 09:45 AM

 

Published : 23 Mar 2017 09:45 AM
Last Updated : 23 Mar 2017 09:45 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: கோடையில் நெல் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்!

தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் காலங்களில் குறுவை நெல் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும் என்கிறார், தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நலஉரிமைப் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளரான மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். அவருடன் ஒரு பேட்டி:

வறட்சியை எதிர்கொள்வதற்கான உடனடிப் பணியாக எதைச் சொல்வீர்கள்?

கரும்பு சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும்தான் அதிக அளவில் தண்ணீர் தேவை. அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்வதை வறட்சிக் காலத்தில் விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலம் எனக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பது தெரியும். ஆனால், இந்தக் கோரிக்கையை என்னால் வலியுறுத்தாமல் இருக்க முடியாது. குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் ஆபத்தான சூழல் உள்ளது. இந்நிலையிலும், 400 அடி, 500 அடி ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சி நெல்லுக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தால், குடிநீருக்கு எங்கே செல்வது?

ஆகவே, கோடையில் நெல் சாகுபடி வேண்டாம். அதேபோல் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் காலங்களில் குறுவை நெல் சாகுபடியையும் தவிர்க்கலாம். நெல்லுக்குப் பதிலாக உளுந்து சாகுபடி செய்யலாம். இதற்கு அதிகபட்சம் 65 நாட்கள்தான் தேவை. மேலும், மிகக் குறைந்த அளவு தண்ணீரும் போதும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை ஆணையரிடம் இது பற்றி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். இதையும் மீறி கோடையிலும், வறட்சியின்போதும் குறுவை நெல் சாகுபடி செய்வோருக்கு அரசு சாகுபடி கடன் வழங்கக் கூடாது. அரசின் அறிவுறுத்தலையும் மீறி, நெல் சாகுபடி செய்து நஷ்டம் அடைவோருக்கு நிவாரணம் வழங்கக் கூடாது. மாறாக, வறட்சிக் காலங்களில் உளுந்து உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வோருக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க இதுதான் நிரந்தரத் தீர்வா..?

தீர்வுக்கான வழிகளில் இதுவும் ஒன்று. இதையெல்லாம்விட தீவிரமான குடிமராமத்துப் பணியைச் செயல்படுத்தினால்தான் நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1989-1991 திமுக ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய அளவில் ஆறுகள், கால்வாய்களைத் தூர்வாரும் பணி நடைபெற்றது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரும் தூர்வாரும் பணி அதுவாகத்தான் இருக்கும். அதேபோன்று, மாநிலம் எங்கும் இருக்கும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி இப்போது நடைபெற வேண்டும். கடுமையான வறட்சியைச் சந்திக்கும்போதுகூடத் தூர்வாரும் பணியைச் செய்யாவிட்டால், வேறு எப்போது செய்வது?

மாநிலம் எங்கும் ஒரே நேரத்தில் தீவிரமான நீர்நிலை குடிமராமத்துப் பணிகள் சாத்தியம்தானா?

பெரிய அளவிலான குடிமராமத்துப் பணிக்கு அதிக அளவில் நிதி ஆதாரம் இல்லாமல் இருக்கலாம். எனினும், திட்டமிட்டுச் செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், அதே வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு யாரும் எந்த நிவாரணமும் தருவதில்லை. ஆகவே, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களை இந்தக் குடிமராமத்துப் பணிகளில் முழுமை யாக ஈடுபடுத்த வேண்டும். நீர்நிலை தூர்வாரும் பணிகளில் மண்ணை வெட்டும் வேலைக்கு இயந்திரங்களையும், வெட்டிய மண்ணைக் கரைக்குக் கொண்டுசேர்க்கும் பணிக்கு இந்தத் தொழிலாளர்களையும் பயன் படுத்தலாம்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க இந்நடவடிக்கைகள் மட்டும் போதுமா?

போதாது. தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ள குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரையிலாவது தடை விதிக்க வேண்டும். அவ்வாறு தடை விதித்தால், நிலத்தடி நீர்மட்டமும் நீர்நிலைகளும் பெருமளவில் மேம்பாடு அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x