Published : 19 Jun 2017 03:43 PM
Last Updated : 19 Jun 2017 03:43 PM

அறம் பழகு எதிரொலி: வீட்டு வேலை செய்பவரின் மகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்திய சங்கர்!

'தி இந்து' இணையதளத்தில் வெளியாகும் தொடர் 'அறம் பழகு'. இதில் ஏழை மாணவர்களுக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்களுக்கும், தேவை இருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட முன்னெடுத்து, தேவை குறித்த தகவல்களைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம்.

இந்நிலையில் 'அறம் பழகு' தொடரைப் படித்த சங்கர் என்னும் 'தி இந்து' வாசகர், உதவி தேவைப்பட்டால் தன்னைத் தயங்காமல் அணுகுமாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அப்போது சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் தன் மகளுக்காகக் கல்வி உதவி கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. 5 வீடுகளில் வீட்டு வேலை செய்து, தன் மகள் ஸ்வாதியைப் படிக்க வைக்கிறார் செல்வி. இந்த முறை கல்விக்கட்டணம் செலுத்த அவரின் பொருளாதாரம் இடையூறாக இருந்தது.

இந்நிலையில் செல்வியைப் பற்றிய தகவலை நாம் சங்கரிடம் பகிர, அவர் தனது சம்பளப் பணத்தில் இருந்து ரூ.10,000 தொகையை செல்வியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

'தனி மரம் தோப்பாகாது'

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர் 'உதவும் உள்ளங்கள்' (Helping minds) என்னும் அறக்கட்டளையை 2013-ல் தொடங்கியவர். நாம் மட்டும் உதவினால் போதாது, தன் நண்பர்களையும் உதவும் பணியில் இணைக்க வேண்டும் என்று எண்ணினார் சங்கர். தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள், சக ஊழியர்கள் என உதவும் எண்ணம் கொண்ட உள்ளங்கள் அனைவரையும் இதில் இணைத்தார்.

இதுவரை இந்த அறக்கட்டளையில் 41 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அறக்கட்டளை பதிவாளர் அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'உதவும் உள்ளங்களு'க்கு வங்கிக் கணக்கும், பான் கார்டும் கூட உண்டு.

ஹனிவெல், சிடிஎஸ், அசெஞ்சர், ஆரக்கிள், சிஸ்கோ, டவ் கெமிக்கல்ஸ், ஏபிபி என உலகளாவிய அளவில் பணிபுரியும் சங்கரின் தோழர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அளித்துவிடுகின்றனர். அவை அறக்கட்டளைக் கணக்கில் சேர்க்கப்பட்டு, தேவை இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

*

'அறம் பழகு' வாயிலாக நம்மிடம் என்ன படிக்கலாம் என்ற ஆலோசனையையும், கல்லூரியைத் தேர்ந்தெடுத்த பின்னர் பண உதவியையும் கேட்டிருந்தார் கோவையைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன்.

அவருக்கு 'உதவும் உள்ளங்கள்' அறக்கட்டளை ரூ.6,500 கொடுத்துக் கல்லூரியில் சேர உதவியுள்ளது. தற்போது மணிகண்டன் கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் படிக்கிறார்.

அறக்கட்டளை குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சங்கர், ''2013-ல் ஸ்ரீனிவாசன் என்னும் மாணவருக்குப் பொறியியல் படிக்க முத்தாயம்மாள் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கூலித் தொழிலாளியின் மகனைப் படிக்க வைக்க அவரின் தந்தைக்கு வசதியில்லை. 'உதவும் உள்ளங்கள்' அறக்கட்டளை சார்பில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீனிவாசனின் 4 வருட படிப்பு செலவையும் நாங்களே ஏற்றுக்கொண்டோம்.

இன்று அவர் நல்ல நிறுவனத்தில் பணிபுரியத் தேர்வாகி இருக்கிறார். 'என்னால் முடிந்த அளவு நிச்சயம் மற்றவர்களுக்கு உதவுவேன்' என ஸ்ரீனிவாசன் உறுதி கூறியிருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடும்'' என்கிறார் சங்கர்.

சங்கர், தொடர்புக்கு: 9994484577.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x