

மக்கள் நலக் கூட்டணியே உடைந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துத் துணிச்சலாகத் தனித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. என்னதான் இலக்கு? அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுடன் பேசினேன்.
இடைத்தேர்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்ட் எதை முன்வைத்துப் போட்டியிடுகிறது?
இன்று தமிழக மக்கள் சந்திக்கிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகள்தான். பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் எப்படி காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் வித்தியாசமில்லையோ, அதைப் போலவே அக்கொள்கைகளைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதிலும், ஊழலைப் பரவலாக்கியதிலும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வித்தியாசமில்லை. கனிமவளக் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை என்று எல்லாவற்றுக்கும் யார் காரணம்? ஆணவக் கொலைக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கடந்த சட்டசபையில் எங்கள் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தபோது, ‘தமிழகத்தில் ஆவணக் கொலையே நடக்கவில்லை’ என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார் என்றால், ஸ்டாலின் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இவர்களுக்கு மாற்று அரசியல் தேவை என்பதால்தான் இந்தச் சவாலான சூழலிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவின்றிப் போட்டியிடுவது, பாதிப்பை ஏற்படுத்தாதா?
மக்கள் நலக் கூட்டியக்கம் என்பது போராட்டக் களத்தில் உருவானது. இப்போதும் அதில் ஒற்றுமையுடன் இருக்கிறோம். அதேசமயம், தேர்தல் அரசியலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சசிகலாவுக்கு பன்னீரோ, அதிமுகவுக்கு திமுகவோ மாற்றில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் முன்வைத்த மாற்று அரசியலுக்கு இன்றும் தேவையிருக்கிறது என்பதால்தான் போட்டியிடுகிறோம். எல்லா நேரங்களிலும் வெற்றியை மட்டும் கணக்கிட்டே போட்டியிட முடியாது.
தாராளவாதிகள் இடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையின்மையே பாஜகவின் எழுச்சிக்கு இன்னொரு காரணம் என்கிறார்களே?
பாஜகவைத் தேர்தலில் எதிர்ப்பது மட்டும்தான் முற்போக்கு அரசியல் என்று சிலர் நினைக்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி எல்லாமே பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பார்களே தவிர, பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க மாட்டார்கள். பொருளாதாரத் தளம், பண்பாட்டுத்தளம், மதம்சார் தளம் மூன்றிலுமே பாஜகவை எதிர்க்க வேண்டும். தேர்தலில் மட்டுமே அவர்களை எதிர்ப்பது எப்படி மாற்று அணியாகும்? இந்தியாவில் இடதுசாரிகள் மட்டுமே பாஜகவை சித்தாந்தரீதியில் சரியாக எதிர்க்கிறோம். நாங்கள் பலமாக உள்ள மாநிலங்களில் அவர்களின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துகிறோம்.
அதனால்தான், பினராயி விஜயன், யெச்சூரி போன்றவர்களை வரவேவிடாமல் மத்திய பிரதேசம், நாக்பூர், கர்நாடகாவில் பாஜகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். எங்கள் தலைக்கு விலை வைக்கிறார்கள். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளோடு சேர்ந்துதான் பாஜகவை எதிர்க்க முடியும் என்பது சரியான கூற்றல்ல. இந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிடும் என்று தோன்றவில்லை. ஹைட்ரோ கார்பன், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுகிறபோது, பாஜகவால் தமிழகத்தில் வளரவே முடியாது.
அதற்குள்ளாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்கள் வருகின்றனவே?
தேர்தல் ஆணையத்திடமும் போதிய அதிகாரம் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று கூறி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களை ரத்துசெய்தார்களோ, அதே ஆதாரத்தின் அடிப்படையில் அந்த வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். பணம் கொடுத்த அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எந்தக் கட்சிக்கும் நிரந்தரச் சின்னம் வழங்கக் கூடாது என்று விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனவே...
சின்னத்தால் மட்டும்தான் ஒரு கட்சி ஜெயிக்கிறது, தோற்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. 1977-ல் புதிய சின்னத்துடன் எம்ஜிஆர் எப்படி ஜெயித்தார்? இன்றைய நடைமுறை சரியானதுதான்!