Published : 01 Feb 2014 08:31 PM
Last Updated : 01 Feb 2014 08:31 PM

நாகர்கோவில்: ஜொலிக்கும் கேரளம் தவிக்கும் கன்னியாகுமரி

கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பர். அதைத் தக்க வைக்க கன்னியாகுமரி மாவட்டத்தை பலி கடா ஆக்குவது வேதனை.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்ததாக நிலத்தின் மதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகம். கடந்த 2009-ம் ஆண்டு, தோவாளையில் மலரியல் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்க, அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சிய ராக இருந்த ராஜேந்திர ரத்னு, அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகின்றன. கேரளாவில் இருப்பது போல், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க கன்னியாகுமரி மாவட்டத்திலும் தடை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வீரபாண்டி ஆறுமுகம், “குமரி மாவட்டத்துக்கு மட்டும் அப்படியொரு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இப்போது, குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்குவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டுகிறார், மத்திய அரசின் முதுநிலை விஞ்ஞானி டாக்டர் லால்மோகன்.

அவர் கூறுகையில், “கேரளாவில் தடை சட்டம் இருக்கிறது என்பதால், அங்கு வசிக்கும் பலரும், குமரி மாவட்டத்தில் இடம் வாங்கிப் போடுகிறார்கள். ரியல் எஸ்டேட் வளத்துக்கு, எதிர் காலத்தில் கை கொடுக்கும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. இதனால் குமரியின் வளங்கள் முற்றிலும் சுரண்டப்படுகிறது” என்றார்.

நாகர்கோவில் இயற்கை ஆர்வலர் சாகுல் கூறுகையில், “கேரளாவில் குளம், நீர் ஆதாரங்களில் தாமரை வளர்க்க தடை உள்ளது. நீர் ஆதாரங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவே உள்ளது. அதே நேரத்தில் குமரி மாவட்ட குளங்களில் தாமரைகள் அதிகம் வளர்க்கப்பட்டு, அது முழுக்க, முழுக்க கேரள மாநில கோயில்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. குளங்களில் ரசாயன உரம் உள்ளிட்டவை தெளித்து, குமரி மாவட்ட நீர் ஆதாரங்களை சேதப்படுத்தி விட்டனர்.

கேரளாவில் இயற்கை வளம் பாழ்படும் என்ற நோக்கத்தில் ஆற்றுப்படுகைகளில் மண் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக குமரி மாவட்டத்தில் இருந்து தான் கொண்டு செல்கிறார்கள். களியல் உள்ளிட்ட பகுதிகளில் மலையை உடைத்து பாறைப்பொடி எடுக்கும் தொழிலை, சில கேரள முதலாளிகளே செய்கிறார்கள்,” என்றார்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு, குமரி மாவட்டத்தை சார்ந்திருக்கும் கேரளம், குமரி மாவட்ட இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x