

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வாழைத்தார் சந்தையில் ஒரு தார் ரூ.900 வரை கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. அதனால், ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் விற்ற காலம் மலையேறிப்போய், 10 ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் என விற்பனையாவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வத்தலகுண்டு நகரில் வாழைத்தார் விற்பனைக்கு பெரிய சந்தை செயல்படுகிறது. இந்த சந்தை வாரத்தில், திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள் கூடுகிறது. திண்டுக்கல், தேனி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, இங்கு வாழைத்தார் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து கேரளம், கர்நாடகம், ஓசூர், மதுரை, ராமநாதபுரம், சென்னை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வாழைத்தார் ஏற்றுமதியாகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வாழை விவசாயம் அழிந்தது. அதனால், தற்போது திருச்சி, குளித்தலை, லால்குடி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமே வத்தலகுண்டு வாழைத்தார் சந்தைக்கு வாழைத்தார் வருகிறது. சாதாரணமாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாழைத்தார்கள், இந்த சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. தற்போது வறட்சியால், வெறும் 1,000 முதல் 2000 வாழைத்தார் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அதனால், வாழைத்தார் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வத்தலகுண்டு வாழைத்தார் கமிஷன் மண்டி வியாபாரி தாமஸ் கூறியது:
ரூ.300-க்கு விற்ற ரஸ்தாலி வாழைத்தார் தற்போது 3 மடங்கு விலை அதிகரித்து ரூ.600 முதல் ரூ,900 வரை விற்பனையாகிறது. செவ்வாழை ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது. பச்சை வாழைத்தார் ரூ.500 முதல் 600 ரூபாய் வரையும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்பனையாகிறது.
பூவன்பழம் வாழைத்தார் சாதாரண காலத்தில் ரூ.100-க்குக்கூட விற்பனையாகாது. தற்போது, ரூ.400 ரூபாய் முதல் 500 ரூபாய் விற்பனையாகிறது. நாட்டு வாழைத்தார் மட்டும் வத்தலகுண்டு, தேனி பகுதிகளில் சாகுபடி செய்யப்படுவதால், அவற்றின் விலை அதிகளவு உயரவில்லை. இந்த வாழைத்தார் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. மழை பெய்து மீண்டும் வாழை சாகுபடி அதிகரித்தால் மட்டுமே இந்த விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் என்ற நிலை போய், தற்போது 10 ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் என சில்லறைக் கடைகளில் விற்பனையாவதால், ஏழை, நடுத்தர மக்கள் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர்.