

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் இல்லாததால் கடந்த 3 மாதங்களாக பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் 3 மாதம் முன்பு வரை மிதிவண்டிகள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி இருந்து வந்தது. ஆனால் வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்த காலம் முடிந்ததால் அந்த வசதி தற்போது இல்லை.
இதனால் ரயில் நிலையத்துக்கு பலர் ஆட்டோக்களிலும் நடந்தும் வருகின்றனர். வழக்கமாக கிளம்பும் நேரத்துக்கு முன்பே அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய நிலையோ, ஆட்டோக்களுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலையோ உள்ளது என்று பொது மக்கள் கூறுகின்றனர். சிலர் வேறு வழியில்லாமல் பாதுகாப்பு இல்லையென்றாலும் வாகனங்களை சொந்த பொறுப்பில் அங்கேயே நிறுத்து கின்றனர்.
இது குறித்து, பாலவாக்கத்தி லிருந்து பாரிமுனை செல்லும் பழனியாண்டி கூறுகையில், “பாலவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில் வருவதற்கு தாமதமாகும். எனவே இருசக்கர வாகனத்தில் வந்து அதனை இங்கு நிறுத்தி வைக்கிறேன். அடுத்த ரயில் நிலையமான கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் உள்ளது. ஆனால் இங்கிருந்து அங்கு செல்ல யூ-டர்ன் எடுத்து போக்குவரத்து நெரிசலில் செல்ல வேண்டும்” என்றார்.
திருவான்மியூரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்லும் ரமேஷ், “வாகன ஒப்பந்தம் முடிந்த முதல் 15 நாட்களுக்கு வாகனத்தை இங்கு நிறுத்தாமல் இருந்தேன். ஆனால் இப்போது பலர் நிறுத்துகின்றனர். எனவே நானும் நிறுத்துகிறேன். ஆனால் வாகனம் தொலைந்துவிடுமோ என்று பயமாகத்தான் உள்ளது” என்றார்.
அந்த வழித்தடத்தில் பயணிக்கும் லக்ஷ்மி கூறுகையில், “முன்பு, மிதிவண்டியில் திருவான்மியூர் ரயில் நிலையத்துக்கு வருவேன். ஆனால் இப்போது இங்கு மிதிவண்டியை நிறுத்த பயமாக உள்ளது. எனவே வீட்டிலிருந்து சீக்கிரமே கிளம்ப வேண்டியுள்ளது” என்றார்.
வாகன நிறுத்தத்துக்கான டெண்டர்விடப்பட்டது. ஆனால் டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால்தான் தாமதாகி வருகிறது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.