

அறுவடை செய்யப்படும் பயிர்களைக் காய வைக்கும் இட மாகவும், கதிரடிக்கும் களமாகவும் சாலைகளை பயன்படுத்தவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் போதிய மழை இல்லாததால், மானாவாரி பயிர்கள் மட்டுமே பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகின்றன. கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் மட்டுமே, அதன்மூலம் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதிய வசதி இல்லை
நெல் மட்டுமின்றி சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, வரகு, இரும்புச்சோளம் போன்றவைகளும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. ஆனால், விளைந்த பயிர்களை காயவைக்கவும், கதிரடிக்கவும் கிராமப்புறங்களில் போதிய அளவு இடமோ, சிமெண்ட் தளம் அமைக்கப்பட்ட களமோ இருப்பதில்லை. கிராமப் பகுதிகளில் அரசால் அமைக் கப்பட்ட களமும் பராமரிப்புகளின்றி பெயர்ந்து கிடக்கின்றன. மேலும், வயல்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை குறிப்பிட்ட களம் இருக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல போதிய வசதிகள் இல்லாதது, பயிர்களைக் கொண்டு செல்ல செலவாகும் கூலி, ஒரே சமயத்தில் பல வயல்களில் அறுவடை செய்யப்படுவதால் இட வசதியின்மை, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வயல்களில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் அருகில் உள்ள சாலைகளிலேயே காய வைக்கப்பட்டு கதிரடிக்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலை, அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலை, விருதுநகர்- சிவகாசி சாலை, விருதுநகர்- செங்குன்றாபுரம் சாலை, திருவில்லிபுத்தூர் சாலை- சாத்தூர் பிரிவு சாலை, மம்சாபுரம் சாலை, நரிக்குடி சாலைகளில் சில அடி தூர இடைவெளியில் அடுத்தடுத்து ஏராளமான விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட கதிர்களை சாலைகளில் பரப்பி காய வைக்கின்றனர்.
அதில் வாகனங்கள் ஏறிச் செல்லும்போது எளிதாக பயிர்களில் இருந்து கதிர்கள் பிரிந்து கொட்டி விடுகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் பயிர்களை திருப்பிப் போட்டும், தூத்தியும் கதிர்களை மட்டும் விவசாயிகள் தனியாகப் பிரித்து சேகரிக்கின்றனர்.
செலவு குறைகிறது
இதுகுறித்து, அருப்புக் கோட்டையைச் சேர்ந்த விவசாயி பரமசிவம் கூறுகையில், ஊருக்கு வெளியில் எனக்கு வயல் உள்ளது. பயிரை அறுவடை செய்து களத்துக்குக் கொண்டுவர அதிக நேரமாகும், டிராக்டரில் ஏற்றிவந்தாலும் வாடகை அதிகம். இரண்டு மூன்று வயல்களைத் தாண்டி உள்ளதால் இயந்திரத்தைக் கொண்டு வந்தும் அறுவடை செய்ய முடியாது.
அதனால் வேலையாட்கள் வைத்து அறுவடை செய்து, ரோட்டில் கொண்டுவந்து போட்டு பரப்பி விடுவோம். அதிகபட்சமாக 3 அல்லது 4 மணி நேரத்தில் வேலை முடிந்து விடும். கதிர்களைக் கூட்டியள்ளி தூற்றி, அதில் இருக்கும் தூசுகளையும், குச்சிகளையும் அகற்றி மூட்டைகளில் கட்டி விடுவோம். இதனால் செலவு பாதிக்குமேல் குறைகிறது என்றார்.
ஆனால், சாலைகளில் அடுத்தடுத்து இதுபோன்று பயிர்களை காயவைப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
வேகமாக வரும் வாக னங்கள் உடனடியாக வேகத்தைக் கட்டுப்படுத்தி குறைக்க வேண்டியுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சாலைகளில் காயவைக்கப்பட்டிருக்கும் கதிர்களில் செல்லும் போது பிரேக் பிடித்தாலும் வாகனம் நிற்பதில்லை. சக்கரங்கள் வழுக்கிச் செல்வதால் சாலையில் பலர் தடுமாறி விழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியபோது, சாலைகளில் இதுபோன்று பயிர்களைக் காய வைப்பது கூடாது. ஆனாலும், விவசாயிகள் பலர் இந்தத் தவறை தொடர்ந்து செய்கிறார்கள். விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள். மேலும், ஒரு பகுதியில் சென்று ஆய்வு நடத்தி விவசாயிகளை எச்சரித்தால், மற்றொரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்றனர்.