Last Updated : 13 Jan, 2014 08:12 PM

 

Published : 13 Jan 2014 08:12 PM
Last Updated : 13 Jan 2014 08:12 PM

புதுக்கோட்டை: வழக்கொழியும் ‘வாசலில் பூ’ வைக்கும் கலாச்சாரம்

மார்கழி முதல் நாளில் தொடங்கி தைப் பொங்கல் வரை வீடுதோறும் வாசல்கள் விழாக் ‘கோலம்’ பூண்டிருக்கும். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்து மாக் கோலங்கள் இட்டு சாணப் பிள்ளையாரில் பூசணி, பரங்கிப் பூ வைப்பது வழக்கம். அதோடு தைப் பொங்கல் திருநாளில் தங்கள் வீட்டு தோட்டங்களில் உள்ள பரங்கி, பூசணி உள்ளிட்ட காய்கறிகளையும் போட்டு சாம்பார் வைப்பதும் இத்தகைய வழக்கங்களில் ஒன்றுதான்.

இதற்காகவே ஆடி பிறந்ததும் தரிசு நிலம், குப்பைக்கிடங்குகளில் விதைத்துப் பரங்கி மற்றும் பூசணியைப் பராமரிப்பது வழக்கம். மார்கழியில் அவை பூத்துக்குலுங்கும்போது அதன் பூவை கோலங்களை அலங்கரிக்கவும், அதன்பிறகு பொங்கலுக்கு காயையும் பயன்படுத்தினர்.

பரங்கிப் பூ இல்லாக் கோலம்

பத்தாண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காய்கறி மண்டியில் ஆயிரக்கணக்கான டன் காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். விலை குறைவு என்றாலும் தேவை அதிகம் என்பதால் அனைவரும் வாங்கிச் செல்வர். ஆனால், வீடுகளில் பரங்கி, பூசணிப் பூ வைத்துக் கோலமிடுவதெல்லாம் வழக்கொழிந்து, வாழ்க்கை இயந்திர மயமாகிப் போய்விட்டதால் வெறும் கோலம் போடுவதோடு நின்றுவிட்டது.

இதுகுறித்து விவசாயி சேந்தன்குடி செல்வம் கூறியது: ஒவ்வொரு வீட்டிலும் பரங்கி, பூசணி சாகுபடி செய்வோம். அதன் பூவைப் பறித்து மார்கழி முழுவதும் கோலத்தில் வைப்பார்கள். பொங்கல் நாளில் மற்ற காய்களோடு பரங்கிக்காய் மற்றும் பூசணிக்காயையும் சேர்த்து சாம்பாருக்கு பயன்படுத்துவோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 2 வருடமாக பரங்கி, பூசணி உற்பத்தியே இல்லாமல் போய்விட்டது என்றார்.

வரத்து குறைவால் விலை அதிகம்

கீரமங்கலம் வியாபாரி எம்.சிங்காரம் கூறியது: முன்பெல்லாம் பரங்கிக்காய் ரூ.5 முதல் 10 ரூபாய் வரையே விற்கும், இதையும் பொங்கலுக்கு மட்டும்தான் வாங்குவாங்க. அதனால நாங்களும் அவ்வப்போது வந்த காய்களை சேகரிச்சு மொத்தமாக பொங்கலுக்கு மட்டும்தான் விற்பனை செய்வோம். ஒரு நாளைக்கு ஒரு மண்டியில இருந்து ஒரு டன் வரைக்கும் ஏற்றுமதி செய்தோம். ஆனால், இப்ப மொத்தமா சேர்த்தால்கூட ஒரு டன் வராது. ரூ.5-க்கு விற்ற காய் இப்போது ரூ.60-க்கு விற்பனையாகிறது. காய் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. இது அடுத்த வருடம் மேலும் உயரும் என்றார்.

வாழைத்தார் ரூ.600

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, மாங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, ராசியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பண்டிகைக் காலங்களில் அறுவடை செய்யும் விதமாக விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு, கீரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

சாகுபடியை மாற்றிய விவசாயிகள்

கடந்த சில ஆண்டுகளாக மின்தடை, இடுபொருள் விலை உயர்வு, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனது உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழை சாகுபடி மேற்கொள்வதைத் தவிர்த்து இதர குறுகிய கால பயிர்கள் சாகுபடியிலும், மரம் வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வாழைத்தார்களை பண்டிகைக்கு 3 நாள் முன்னதாகவே விற்பனை செய்தால்தான் அதை பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பழுக்க வைத்து பண்டிகைக் காலங்களில் விற்பதற்கு வசதியாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்ட மண்டிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைக் கொள்முதல் செய்யும் உள்ளூர் வியாபாரிகள் பிற பகுதிகளில் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புளிச்சங்காடு கைகாட்டி வியாபாரி சி. சின்னத்துரை கூறியது: இப்பகுதியில் விவசாயிகள் பிரதான பயிராக வாழை சாகுபடி மேற்கொண்டதால் இப்பகுதி வாழைக்கு பிரதான சந்தையாகவும் திகழ்கிறது. இங்கிருந்துதான் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சாதாரண நாளில் வாழைத்தார் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 தார் அதிகபட்சமாக ரூ.650 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதை கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது விலை அதிகம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், வெளியூர் வியாபாரிகள் வாங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இருப்பினும் மற்ற பகுதிகளை விட இப்பகுதி வாழைப்பழம் ருசியாக இருக்கும் என்பதால் விற்பனை பாதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x