Published : 18 Mar 2014 08:02 PM
Last Updated : 18 Mar 2014 08:02 PM

திண்டுக்கல்: புகைந்துபோன புகையிலை விவசாயம்: விலையில்லாததால் விவசாயிகள் விரக்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் அறுவடை நாளைக் கடந்தும் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் விளைநிலத்திலேயே புகையிலைச் செடிகள் காய்ந்து சருகாகி வருகின்றன. இதனால், விவசாயிகளே அவற்றை அறுவடை செய்து பதப்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு பகுதிகளில் புகையிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. புகையிலை விவசாயத்துக்குத் தேவையான உப்பு தண்ணீர், நல்ல மண்வளம், காலநிலை காணப்படுவதால், திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது.

ஆராய்ச்சி மையம்

வேடச்சந்தூரில், புகையிலை விவசாய ஆராய்ச்சிக்காக மத்திய புகையிலை ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு ஆராய்ச்சி முறையில் உற்பத்தி செய்யப்படும் புகையிலை நாற்று, விதைகளை வாங்கி, விவசாயிகள் புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடி செய்த 4 மாதங்களில் புகையிலைச் செடிகள் அறுவடைக்கு வந்து விடுகின்றன.

முன்பிருந்த வரவேற்பு இல்லை

புகையிலைச் செடியின் தழைகள் மட்டுமின்றி, அவற்றின் தண்டு உள்பட செடியின் அனைத்து பாகங்களும் பல்வேறு புகையிலைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுகின்றன.

புகையிலைச் செடி தண்டைப் பொடியாக்கி, அவற்றில் இருந்து மூக்குப் பொடி தயாரிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் புகையிலைச் செடிகள், பல்வகைப் பொருள்கள் தயாரிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியானதால், புகையிலை சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில் புகையிலைப் பொருள்கள் தயாரிப்புக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்ததால் புகையிலை விவசாயத்துக்கு முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லை. அதனால், தற்போது போதிய விலை சந்தைகளில் கிடைப்பது இல்லை.

போதிய ஆர்வம் இல்லை

புகையிலை சாகுபடிக்கு தண்ணீர் முக்கிய அடிப்படைத் தேவையாகிறது. அதனால், புகையிலைச் செடிகளுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். தற்போது, மாவட்டத்தில் பருவமழைகள் பொய்த்து வறட்சி தாண்டவம் ஆடுவதால், புகையிலை சாகுபடியில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.

சாகுபடி பரப்பு குறைவு

அதனால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புகையிலை சாகுபடி பரப்பு குறைந்து தற்போது பெயரளவுக்கு வெறும் 500 ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் புகையிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலத்தில் அறுவடைக்கு வருவதற்கு முன்பே, கோவை, ஈரோடு, கேரளம், திருப்பூர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், ஏக்கர் கணக்கில் புகையிலைச் செடிகளை விலைபேசி எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களே கூலித்தொழிலாளர்களை அழைத்து வந்து புகையிலைச் செடியின் தழைகளை வெட்டி எடுத்து குழிகளில் போட்டு 20 நாள் முதல் 30 நாள் வரை பதப்படுத்தி புகையிலைப் பொருள்களைத் தயார் செய்ய ஏற்றுமதி செய்வார்கள். தற்போது, புகையிலைப் பொருள்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் மதிப்பு குறைந்ததால் புகையிலை செடி தழைகளை வியாபாரிகள் அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றனர். அதனால், விளைநிலத்திலேயே புகையிலைத் தழைகள் சருகாகி வருகின்றன.

புகையிலையை `கை'விடும் விவசாயிகள்

இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விவசாயி தாமோதரன் கூறியதாவது:

குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் டிராக்டரில் தண்ணீரை ஒரு லோடு 1,500 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி நான்கு மாதமாக புகையிலை செடிகளைக் காப்பாற்றினோம். ஆனால், தற்போது ஒரு கிலோ புகையிலை 80 ரூபாய்க்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால், சாகுபடி செய்த செலவைக்கூட எடுக்க முடியவில்லை.

வியாபாரிகள் வராததால் விளைநிலத்தில் கருகிய புகையிலை செடி தழைகளை நாங்களே வெட்டி, பதப்படுத்தி வருகிறோம். அதனால், கூடுதல் செலவு ஏற்படுவதால் புகையிலை விவசாயத்தை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x