

சென்னை மகாகவி பாரதி நகரில் வீடுகளை இழந்து 7 ஆண்டுகளாகத் தவிக்கும் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது சமூகக் கூடத்தில் வசிக்கும் அந்த மக்கள் அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் அவலத்தின் உச்சத்தை அனுபவித்து வருகின்றனர்.
வெளியேற்றப்பட்ட மக்கள்
சென்னை வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் 2-வது பிரதான சாலை சந்திப்பில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 70 குடும்பத்தினர் குடிசைகள் போட்டு வசித்து வந்தனர்.
இங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிந்தது. அதனால், அங்கிருந்து இடத்தை காலி செய்யும்படியும், விரைவில் மாற்று இடம் தருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மகாகவி பாரதி நகர் மத்திய நிழற்சாலையில் பயனற்று இருந்த வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான சமூகக் கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
மூன்றே நாட்களில் மாற்று இடம் தருகிறோம் என்று உறுதியளித்து எங்களை வெளியேற்றி, 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் வீடு கிடைத்தபாடில்லை என்கின்றனர் அந்த மக்கள்.
ஆரம்பத்தில் 70 குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது 173 குடும்பங்களாக பெருகி விட்டனர். இந்த குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வெறும் ஒரு கிரவுண்ட் பரப்பளவில் ஓலைக்குடிசைகளில் வசிக்கின்றனர்.
வேதனையான வாழ்க்கை
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத தங்கள் வாழ்க்கையின் அவலம் குறித்து கூலி வேலை பார்க்கும் எல்லம்மா கூறியது:
“கழிப்பறைகள் எதுவும் இல்லாததால் எங்கள் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்கள் படும் வேதனைகளும், அவமானங்களும் சொல்லி மாளாது.
சாக்கடைகள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் இங்கேயே தேங்கிக் கிடப்பதால் மலேரியா, சிக்கன்குனியா என அத்தனை நோய்களும் எங்களைத் தாக்குகின்றன” என்று புலம்பியவரின் கண்கள் குளமாயின.
அவலத்தின் உச்சம்
இங்குள்ள வீடுகளில் வாளியில் கழிவுநீரை சேகரித்து அது நிரம்பியதும் மெயின் ரோட்டுக்கு எடுத்துச் சென்று ஊற்றி விட்டு வருவது அவலத்தின் உச்சம்.
“ஐயா ஆட்சி போய், அம்மா ஆட்சி வந்த பிறகும் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை” என்கிறார் 65 வயது பாட்டி கருப்பாயி.
அங்கு வாழும் பலரது நிலைமையும் இப்படித்தான். ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு சோகம் இருக்கிறது.
தேர்தல் புறக்கணிப்பு
அங்கு குடியிருக்கும் வேலுச்சாமி கூறுகையில், “சாலை மறியல் செய்தபிறகே வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தனர். பாழடைந்த சமூகக் கூடம், சித்ரவதைக்கூடமாக இருக்கிறது. இங்கு மரண பயத்திலே வாழ்கிறோம்.
கடந்த ஆட்சியில் தரப்பட்ட இலவச டி.வி. எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் தரப்படும் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் எதுவும் இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை.
எங்களின் இந்த அவல நிலையைப் போக்க இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்றார் அவர்.