

இன்றைய கல்விச்சூழலிலும் நம்பிக்கை தருகிற ஆசிரியர்களில் ஒருவர் பிரபாகர். மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரான இவர், அரசியலும் சேர்ந்ததுதான் கல்வி என்று உறுதியாக நம்பக்கூடியவர்.
1. கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில் அரசியல் பேசுகிறார்களா?
சுதந்திரப் போராட்டக் காலம் தொடங்கி இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலம் வரையில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்தும் ஆசான் களாக இருந்தார்கள். ஆனால் இன்று, ஆசிரியர்களே அரசியல் புரிதலோடு இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தவிர, வகுப்பறைகள் கண்காணிக்கப்படுகின்றன. நான் தமிழாசிரியன். இலக்கியம் பேசும்போது, அரசியல் பேசாமல் இருக்க முடியாது என்ற சலுகையைப் பயன்படுத்திக்கொள்கிறேன். இப்படி இலக்கியம், பொருளாதாரம், வரலாறுப்பாடம் எடுப்பவர்களில் சிலர் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் அரசியல் பேசுகிறோம்.
2. மாணவர்களாவது பேசுகிறார்களா?
முன்பெல்லாம் வகுப்பறைகளில் யாராவது அரசியல் பேசினால், வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்கும். ஆசிரியராலேயே கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இப்போது ஆசிரியரே அரசியல் பேச அனுமதித்தாலும் யாரும் வாய் திறப்பதில்லை.
3. கல்லூரி வளாகங்களில் அரசியல்?
பியுசியை ஒழித்து பிளஸ் 2 கொண்டு வரப்பட்டபோதே, கல்லூரிகளில் அரசியல் நீக்கம் ஆரம்பமாகிவிட்டது. பிறகு மாணவர் தேர்தலை நிறுத்தினார்கள். ஷிஃப்ட் முறை வந்த பிறகு, கல்லூரிகள் 100% அரசியல் நீக்கப்பட்ட வளாகங்களாகிவிட்டன. 5 மணி நேரம் வகுப்பறையில் உட்காருவதைத் தவிர, அவர்களுக்கு கல்லூரி வாழ்க்கை என்று தனியாக எதுவும் இல்லாமல் போய்விட்டது. முழுநேரமும் கல்லூரியில் இருந்தால்தானே, மாணவர்கள் ஒன்று கூடவும், அரசியல், சினிமா பற்றிப் பேசவும் முடியும்?
4. யார்தான் அரசியல் சொல்லித்தருவது?
சமூக வலைதளங்கள்தான் இப்போது அந்த இடத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றன. படித்து முடித்து வேலைக்குப் போகத் தொடங்குகிற இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக அரசியல் பேசுகிறார்கள். அவர்களுடன் கல்லூரி மாணவர்களும் இணைந்துகொள்கிறார்கள். ‘இயற்கையான தமிழகம்’, ‘ஊழலற்ற உலகம்’ என்று ஏதோ ஒரு ‘அதிசய’த்தை முன்வைத்து யாராவது ‘லட்சிய அரசியல்’ பேசினால், அது இளைஞர்களைச் சட்டென்று ஈர்க்கிறது.
5. ஜல்லிக்கட்டு இளைஞர்கள் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்களே?
இது ‘இன்ஸ்டன்ட் பாலிடிக்ஸ்’ யுகம். இந்த உடனடி அரசியல் யுகத்தில் இப்படியான அறிவிப்புகள் வெளியாவதில் ஆச்சரியம் என்ன? இப்போது எந்தக் கொள்கையைப் பற்றியும் யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பேரியல் அரசியலுக்கான (மேக்ரோ பாலிடிக்ஸ்) காலம் போய், நுண்ணியல் அரசியல் (மைக்ரோ பாலிடிக்ஸ்) வந்துவிட்டது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. பொதுவான பிரச்சினை என்றால் தங்கள் வேலை பாதிக்காதவாறு நேரடியாகவோ, சமூக வலைதளங்கள் வாயிலாகவோ ஒன்று கூடுவார்கள். ஆனால், உடனடி விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள். எதிர்கால அரசியல் இப்படித்தான் இருக்கும்போல!