Last Updated : 03 Jan, 2014 06:39 PM

 

Published : 03 Jan 2014 06:39 PM
Last Updated : 03 Jan 2014 06:39 PM

சேலம்: விலை சரிவால் செங்கரும்பு விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

செங்கரும்பு விளைச்சல் இந்த ஆண்டு அமோகமாக இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சாகுபடிப் பரப்பளவு குறைந்திருந்தாலும் விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளது. இதனால் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலைக்கு விவசாயிகளும், வியாபாரிகளும் தள்ளப்பட்டு சோக பொங்கலை கொண்டாடும் நிலையில், வேதனையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல லட்சம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலைகளுக்கு ஆலை கரும்புகளையும், பொங்கல் உள்ளிட்ட விசேஷங்களுக்கு செங்கரும்பையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆலைகரும்பு டன்னுக்கு 2500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கரும்பு ஏக்கருக்கு 40 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

செங்கரும்பு சாகுபடி

கரும்பு வெட்டுக் கூலி மட்டும் ஏக்கருக்கு 700 ரூபாய் முதல் 800 ரூபாய் செலவாகிறது. இதனை விவசாயிகள் கொடுக்க வேண்டும். மேலும், கரும்புக்கு உரம், ஆள் கூலி என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆலை கரும்புக்கு போதுமான விலை கிடைக்காததால் விரக்தியடைந்த ஏராளமான விவசாயிகள் பயிர் சாகுபடியை மாற்றினர்.

ஆனால், செங்கரும்புக்கு நல்ல விலை கிடைத்து வந்ததால் பல விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக செங்கரும்பு விலை குறைந்துள்ளது. இதனால் செங்கரும்பு விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 400 ஹெக்டேர் நிலப்பரப்பில் செங்கரும்பை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். செங்கரும்பு சீசன் தொழில் என்பதால் பண்டிகை முடிந்ததும் அதற்கான விலை பல மடங்கு சரிந்து விடும். அதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பண்டிகைக்கு முன்னதாகவே, செங்கரும்பை கிடைத்த விலைக்கு விற்பனை செய்ய முன் வருகின்றனர்.

பரப்பளவு குறைவு, விளைச்சல் அதிகம் கடந்த ஆண்டு கரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இதனால் செங்கரும்பு ஜோடி 80 ரூபாய் வரை விற்பனையானது. ஜோடி 40 ரூபாய் முதல் அதன் உயரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. இதனால் கரும்பு விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தாண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் கரும்பு விவசாயிகள் பயிர் செய்வதை கணிசமாகக் குறைத்துக் கொண்டனர்.

இருப்பினும், கரும்பு பயிர் விவசாயிகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக விளைந்துள்ளது. செங்கரும்பு பயிரிட ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவாகிறது. சில விவசாயிகள் கரும்பை நேரடியாக விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்திலேயே ஏக்கர் கணக்கில் வியாபாரிகளிடம் விற்று விடுவார்கள். அவற்றை வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.

ஏக்கருக்கு 60 டன் அதிக விலைக்கு விற்கும் போது விவசாயிகளிடம் பேசிய தொகையை வியாபாரிகள் உடனடியாக கொடுத்துவிடுவார்கள். ஆனால், விலை குறைந்து வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும்போது அவர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தாண்டு செங்கரும்பு ஏக்கருக்கு 60 டன் வரை விளைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரம் உள்ள நிலையில் அதிக விளைச்சல் காரணமாக மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது.

விலை வீழ்ச்சியால் இழப்பு

இதனால், தொழில் போட்டி ஏற்பட்டு வியாபாரிகள் விலையை குறைத்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஒரு ஜோடி கரும்பு 50 ரூபாய் வரை விலை போகிறது. சிறிய மற்றும் நடுத்தர கரும்பு ஜோடி 20 ரூபாய், 30 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து விட்டால் கரும்பு விற்பனை இருக்காது.

இதனால் வியாபாரிகள் கிடைத்த விலைக்கு கரும்பை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கரும்பு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சோக பண்டிகையாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அரசு கொள்முதல் செய்யவேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விலை குறைவால் இந்த ஆண்டு செங்கரும்பு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரொக்கம் ரூ.100 வழங்குவதைப் போல விவசாயிகளிடம் செங்கரும்பு கொள்முதல் செய்து, அதனையும் இலவசமாக வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் செங்கரும்பு விவசாயிகள் பயிர்த் தொழிலில் ஈடுபட முடியும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x