Published : 25 Feb 2014 04:34 PM
Last Updated : 25 Feb 2014 04:34 PM

திண்டுக்கல்: சிறுவன் மரணத்தால் வந்தது `ஜல்லிக்கட்டுக்கு சிக்கல்: காற்றில் பறந்த உச்சநீதிமன்ற நிபந்தனைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய் அதிகாரிகள், போலீஸார் கண்துடைப்பு ஆய்வு மூலம் ஒப்புதல் வழங்கியதால் இதுவரை நடைபெற்ற 9 ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் காற்றில் பறந்தன. இதனால் சிறுவன் உயிரிழந்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிராணிகள் நல அமைப்பினர், ஜல்லிக்கட்டு விதிமுறை மீறல்களை வீடியோ பதிவு ஆதாரத்துடன் எடுத்து வழக்கு தொடரவுள்ளதால் வரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்வெட்டு ஆதாரங்கள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில் இருந்தே நடப்பதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரபலம்.

பட்டிதொட்டிகள் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வரை, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்க்க குவிவதால், மாடுபிடி வீரர்கள் வீரத்தை நிரூபிக்க உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்குவர். வீரர்களின் ஆர்வத்தைத் தூண்ட விழா ஏற்பாட்டாளர்கள், மோட்டார் சைக்கிள், தங்கக்காசு முதல் அண்டா, குண்டா வரை பரிசுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவர்.

கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறல்களால் உயிர் பலி ஏற்பட்டதால் கடந்த 2008-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த 74 நிபந்தனைகளை அமல்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தமிழகத்தில் 2009-ம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை ஆய்வு நடத்தி போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறிய விதிமுறைகள் ஓரளவு கடைப்பிடிக்கப்படுகின்றன.

திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுகளை வருவாய்த் துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கண்துடைப்பு ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.

75 சதம் பின்பற்றப்படவில்லை

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு நத்தம் வாடிப்பட்டி, பெரியகலையம்புதூர், கொசுவப்பட்டி, மரவப்பட்டி, புகையிலைப்பட்டி, வெள்ளோடு, பில்லம்மநாயக்கன்பட்டடி, தவசிமடை, ஏ.குட்டத்துப்பட்டி ஆகிய 9 ஜல்லிக்கட்டுகள் நடத்துள்ளன.

இந்த இடங்களில், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் 75 சதவீதம் பின்பற்றப்படவில்லை. சனிக்கிழமை நடைபெற்ற திண்டுக்கல் தவசிமடை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சிறுவன், பார்க்க இடவசதியில்லாமல் டிராக்டரில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளான்.

மாடு தாவி குதித்ததால் சிறுவன் பீதியில் கீழே விழுந்து மாடி முட்டியதில் இறந்துள்ளான். இந்த விதிமுறை மீறல்களை பிராணிகள் நல அமைப்பினர் வீடியோ, புகைப்பட ஆதாரத்துடன் எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால், அடுத்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு “சிக்கல்' ஏற்படும் அபாயம் உள்ளது.

காலரி வசதியில்லை

ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமத்தில் திறந்தவெளிக் கிணறுகளைச் சுற்றி தடுப்புவேலி அமைக்கப்படாததால் மாடுகள் கிணற்றில் விழுந்து உயிரிழக்கின்றன. பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க காலரி வசதியில்லை.

அதனால், பார்வையாளர்கள் டிராக்டர்கள், வீட்டு மாடிகளில் அமர்ந்து ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டை பார்க்கின்றனர். மாடுகள் தீவனம், குடிநீர் கிடைக்காமல் சோர்வடைகின்றன. அவற்றைத் துன்புறுத்துவதால் மிரண்டு ஓடும்போது பார்வையாளர்கள் பகுதியில் புகுந்து விடுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் சொல்வ தென்றால், உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் ஜல்லிக்கட்டில் பின்பற்றப்படுவதில்லை என்றார்.

பெயரளவுக்கு இரட்டை தடுப்புவேலி

இதுகுறித்து திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த கௌரவ விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ரமேஷ் கூறியது:

ஜல்லிக்கட்டு அரங்கில் பார்வையாளர்கள் பாதுகாப்பாக பார்வையிட மாடுகளை கட்டவிழ்த்துவிடும் இடத்தில் இருந்து வெளியேறும் இடம் வரை, எட்டு அடி உயரத்தில் இரட்டை தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும். ஆனால் அனைத்து ஜல்லிக்கட்டுகளிலும் 5 அல்லது 6 அடி உயரம் மட்டும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறிது தூரம் வரை பெயரளவுக்கு தடுப்பு வேலி அமைக்கின்றனர். அதனால் மாடுகள் எளிதாக பார்வையாளர்களின் பகுதியில் தாவிக்குதித்து புகுந்து விடுகின்றன. எந்த திசையில் மாடு வருகிறது என்ற அச்சத்திலேயே ஜல்லிக்கட்டு முடியும்வரை பார்வையாளர்கள் இருக்க வேண்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x