Last Updated : 14 Jun, 2017 10:57 AM

 

Published : 14 Jun 2017 10:57 AM
Last Updated : 14 Jun 2017 10:57 AM

என்னடா இந்த இலைக்கு வந்த சோதனை..

என்னதான் சிந்தட்டிக் இலையும், பாக்கு மட்டைத் தட்டுகளும் வந்தாலும் விருந்துகளில் வாழை இலைக்கு இருக்கும் மரியாதையே தனிதான். ஆனால், இப்போது அதுக்கும் சோதனைக் காலம் போலிருக்கிறது. அட, ஒரு சாப்பாட்டு இலை ஏழு ரூபாய்ன்றாங்கப்பா!

விலை அதிகம் என்பதைவிட கடந்த சில நாட்களாக எந்த மார்க் கெட்டில் போய் கேட்டாலும்

‘இலை இல்லையேண்ணே..’ என்று தான் கைவிரிக்கிறார்கள் வியாபாரிகள். யாரையாவது சிபாரிசுக்குப் பிடித்து மடக்கித்தான் வாழை இலையை வளைக்க வேண்டி இருக்கிறது. தலை வாழை இலைக்கு பேர்போன டெல்டா பகுதியிலேயே இதுதான் நிலை.

அப்படி என்னதாம்பா ஆச்சு இந்த வாழை இலைக்கு? கொள்ளிடம் குமிளங்காடு சாமிநாதன் சொல்றத கேளுங்க.

“ஜூன் ஏழாம் தேதி எந்தம்பிக்கு கல்யாணம். முதல் நாள் சாயந்தரம் காய்கனி, மளிகை சாமான்கள வாங்கிட்டு கடைசியா இலை வாங்க சீர்காழி மார்க்கெட் டுக்குப் போனா, ஒரு வியாபாரிட்டயும் இலையே இல்ல. இம்புட்டும் வாங்கிட்டு இலை இல்லாம போனா கொன்னுபுடுவாங்களேன்னுட்டு சிதம்பரம் மார்க்கெட்டுக்கு ஓடுனோம். அங்கயும் ஒரே ஒருத்தர்கிட்டத்தான் இலை இருந்துச்சு. அவரும்,

‘டிபன் இலை இல்லை சாப்பாட்டு இலை மட்டும்தான் இருக்கு அதுவும் ஒரு இலை ஏழு ரூபாய்’னாரு. வெலைய கேட்டதும் அரண்டுட்டோம். ஆனாலும், இலை இல்லாம ஃபங்ஷன் நடத்த முடியாதேனுட்டு அவரு கேட்ட காசைக் குடுத்து சாப்பாட்டு இலையாவே வாங்கிட்டு வந்தோம்’’ என்கிறார் சாமிநாதன்.

சிதம்பரத்துக்கும் சீர்காழிக்கும் கட்டு 500 ரூபாய்க்கு வந்த இலைக் கட்டு இப்ப 2500 ரூபாய் வரைக்கும் போயிருச்சு. அதனாலதான், இரண்டு ரூபாய்க்கு விற்ற சாப்பாட்டு இலை இப்ப ஏழு ரூபாய். டிபன் இலைக்காக துண்டு போட்டால் அவ்வளவா லாபம் இருக்காது என்பதால் டிபன் இலையே இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள் வியாபாரிகள்.

“வாழை இலைக்கு இந்த சோதனை வந்ததுக்கும் வறட்சி தாங்க காரணம். என்னதான் தண்ணி இறைச்சாலும் மேல் மழை பெய்ய ணும். மழை இல்லாததாலயும் கோடை கொதிக்கிறதாலயும் வாழைக் கொல்லையெல்லாம் வறண்டு நிக்கிது. முன்ன ஒரு ஏக்கர் கொல்லையில ஒருநாள் விட்டு ஒருநாள் 500 இலை அறுப்போம். ஆனா இப்ப, வாரத்துக்கு 500 இலைகூட அறுக்க முடியல” இப்படிப் புலம்புகிறார் கொள்ளிடம் ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த வாழை விவசாயி சக்திவேலு.

தஞ்சாவூர் தாட்டெலை உலக பிரபலம். சென்னை வரைக்கும் இலைகளை அனுப்பி வைக்கும் தஞ்சாவூர் இலை மார்க்கெட்டிலும் தற்போது இலை வரத்து ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிட்டதாகச் சொல்கிறார் அங்கே இலை மொத்த வியாபாரம் செய்யும் வெங்கடேசன்.

“இலை வரத்து குறைஞ்சதோட மட்டுமில்லாம முன்பு போல பெரிய இலைகளும் வரத்து இல்லை. வாழை விவசாயிகளே சாப்பாடு, டிபன் இலைகளை தனித்தனியாக அறுத்து எடுத்து வந்துடுறாங்க. அவங்களே ஒரு இலை ஏழு ருபாய்க்கு விக்கிறப்ப அதை வாங்கி நாங்க எங்க லாபம் பார்க்கிறது?’’ என்கிறார் வெங்கடேசன்.

வறட்சி ஒருபுறமிருக்க.. அதிகப்படியான திருமணங்கள் நடப்பதும் இலை விலை ஏற்றத்துக்கு காரணம் என்கிறார்கள். எனினும் எந்தக் காலத்திலும் வாழை இலை இந்த அளவுக்கு உச்சம் தொட்டதில்லை என்கிறார்கள் வாழையை நம்பி வாழ்க்கையை நகர்த்துகிறவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x