

கிராமத்தில் நியாயவிலைக் கடைக்காக கட்டப்பட்ட கட்டிடம், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத காரணத்தால் கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அரும்பனூர் ஊராட்சியில் அரும்பனூர், தீயனேரி, அ.புதூர், கருங்கல், தேத்தான் குளம், இந்திரா காலனி, பொய்கை, முனியாண்டிபுரம் உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. இதில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் மொத்தம் 7000 பேர் வசிக்கின்றனர். சுமார் 5000 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆனால், இந்த ஊராட்சியில் இரண்டு நியாய விலைக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எனவே, ஒரே ஊராட்சியில் தொலைவில் பல கிராமங்கள் இருப்பதால் அப்பகுதியினர் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நரசிங்கம் ஊராட்சி அருகில் உள்ள இந்திரா நகர், சுப்ரமணியபுரம், யா.குவாரி ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் யா.குவாரி பகுதியில் கடந்த 2005-06 ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.
ஆனால், கட்டிடம் கட்டி 7 ஆண்டுகள் ஆன நிலையிலும், பல்வேறு காரணங்களால் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, நியாய விலைக் கட்டிடத்தை தற்போது கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதி மக்கள் எப்போதும் போலவே நரசிங்கம் கிராமத்துக்குச் சென்று அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: யா.குவாரி, இந்திரா நகர், சுப்ரமணியபுரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 400 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தப் பகுதிகள் எல்லாம் தொலைவில் இருப்பதால், மக்கள் பயன்பெறும் வகையில் யா.குவாரியில் பல ஆண்டுகளுக்கு முன் நியாயவிலைக் கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால், பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, நாங்கள் எப்போதும் போலவே நரசிங்கம் கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறோம். மேலும், கடைசி நாள்களிலேயே எங்களுக்கு பொருள்கள் வழங்குவதால், தரமற்ற பொருள்களையே பெற்று வருகிறோம். இதுகுறித்து, பலமுறை ஊராட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்.
இங்கே நியாயவிலைக் கடை இருந்தால் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறி, இதுவரை கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. இதை நியாய விலைக் கடை அல்லது திருமண மண்டபம் அல்லது மக்களின் வேறு ஏதாவது பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். ஆனால், எந்த பயன்பாட்டுக்கும் வராத காரணத்தால் தற்போது கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றனர்.
இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் எஸ்.கணபதி (72) கூறியது: கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆன காரணத்தால் மோசமான நிலையில் உள்ளது.
எனவே, இந்தக் கட்டடத்தில் மராமத்து வேலைகளை மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் செய்துவிடுவோம். அதன்பிறகு, நியாய விலைக் கடை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.