

காதலர் தின வர்த்தகத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால், ஓசூர் பகுதி ரோஜா சாகுபடியாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ரோஜா உள்ளிட்ட கொய்மலர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒப்பந்த ரோஜா பண்ணையான டேன்ஃப்ளோரா மூலம், சுமார் 250 ஏக்கரில் ரோஜா சாகுபடி நடைபெறுகிறது. மேலும், சுமார் 1,200 ஏக்கர் பரப்பில் ரோஜா, ஜெரிபரா உள்ளிட்ட கொய்மலர்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர்.
பெரும்பாலான இடங்களில் பசுமைக்குடில் மூலம் ரோஜா சாகுபடி நடைபெறுகிறது. ரோஜா மலர் உற்பத்தியாளர்களின் முக்கிய இலக்கே, காதலர் தின வர்த்தக மாகும். பெரிய அளவில் பண்ணை கள் அமைத்த விவசாயிகளுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலர் தினத்தில் நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக இடுபொருள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, ஏற்றுமதி வாய்ப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
முன்பு ஒரு ரோஜாவுக்கு ரு.7 முதல் ரூ.9 வரை விலை கிடைத்தது. ஆனால், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகபட்சமாக ரூ.2-க்கு ரோஜாவை விற்றதால், ஏற்றுமதி வர்த்தகமும் பெருமளவு பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வரும் காதலர் தினத்தையொட்டி அறுவடையாகும் வகையில், பல விவசாயிகள் ரோஜா மலர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், ‘டவ்னி மில்டியூ’ என்ற பனிக் கால நோய் பாதிப்பு, ரோஜா விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.
இதுகுறித்து ரோஜா சாகுபாடியாளர்கள் கூறியது: ஜனவரி இறுதி வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை அறுவடைக்கு வரும் வகையில், தற்போது ரோஜாவை சாகுபடி செய்துள்ளோம். அப்போதுதான், ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் எங்களிடம் ரோஜாவை வாங்கி, அவற்றைப் பதப்படுத்தி மலேசியா, துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வர். ஆனால், தற்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னதாகவே மலர்கள் அறுவடையை எட்டிவிடும் வகையில், சமநிலையில்லாத தட்பவெப்பம் நிலவுகிறது. இரவில் அதிகப்படியான பனியும், பகலில் அதிக உஷ்ணமும் உள்ளதால், முன்கூட்டியே மலர்களை அறுவடை செய்ய வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், டவ்னி மில்டியூ என்ற பூஞ்சான் நோய் தாக்குதலும், விவசாயிகளை மிரட்டும் வகையில் உள்ளது. இதனால், மலர்கள் மற்றும் இலைகளில் சிறுசிறு கரும்புள்ளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி விளையும் ரோஜா மொட்டுக்களின் தரம், ஏற்றுமதிக்கு உகந்ததல்ல. பிற நாடுகளின் போட்டி மட்டுமன்றி, தட்பவெப்பம் மற்றும் நோய் தாக்குதலும் ரோஜா விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.