Published : 18 Jan 2014 08:44 PM
Last Updated : 18 Jan 2014 08:44 PM

தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேலூர் மருத்துவக் கல்லூரி: காவிரி குடிநீர் கல்லூரிக்கு வருமா? நோயாளிகள், ஊழியர்கள் அவதி

வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் காவிரி குடிநீர் திட்டத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் ஒரே குடிநீர் ஆதாரமாக இருந்த பாலாற்றில் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக நீர் வரத்து இல்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கீழே சென்றுவிட்டது. போதிய மழை இல்லாததால் இருக்கின்ற நிலத்தடி நீரும் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு எதிர்காலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் காவிரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.1,295 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் மேட்டூர் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு 2 கட்டங்களாக சுத்திகரிப்பு செய்து வேலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும். இந்த மெகா குடிநீர் திட்டத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்துவருகின்றன.

இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு, தினமும் 750 உள் நோயாளிகள், 2 ஆயிரம் புறநோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர, இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் 800 மாணவர்கள், நர்சிங் கல்லூரியில் 160 மாணவிகள் படித்துவருகின்றனர். தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குத் தேவையான குடிநீர் நாகநதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் இதுவரை சப்ளை செய்யப்பட்டு வந்தன. நாகநதி பகுதியில் கடந்த ஓராண்டாக நிலவும் நிலத்தடி நீர் பாதிப்பு காரணமாக மருத்துவக் கல்லூரிக்கு சப்ளையான தண்ணீரின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி சில நாட்கள் மூடப்பட்டன.

தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் தற்போது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு மட்டும் சப்ளை செய்யப்படுகிறது.

21 ஆழ்துளைக் கிணறுகள் காலி

மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான தண்ணீர் தேவை தற்போது 25 சதவீதமே பூர்த்தியாகிறது. மருத்துவமனை வளாகத்தில் மொத்தம் 26 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 5-ல் மட்டும் தண்ணீர் சப்ளை ஆகிறது. இந்த தண்ணீர் மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் சப்ளை செய்ய வேண்டும் என்பது இயலாத காரியம். அங்குள்ள கழிவறைகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

மருத்துவமனை அமைந்துள்ள பென்னாத்தூர் பேரூராட்சியாலும் இந்த குடிநீர் பிரச்னையைப் போக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குடிநீர் பிரச்சினையைப் போக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் காவிரி குடிநீர் திட்டத்தில் பென்னாத்தூர் பேரூராட்சியைச் சேர்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் சப்ளை செய்தால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். காவிரி குடிநீர் திட்டத்தை மருத்துவக் கல்லூரிவரை விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். எப்போதும் தண்ணீர் பிரச்சினையே இருக்காது என்றனர்.

எம்.எல்.ஏ.வின் பதில்

வேலூர் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சிக்கித்தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவமனையின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும். எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரவேண்டும்.

மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரத்திற்கு முன்பாக உள்ள கட்டுப்படி கிராமம்வரை காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை விரிவுபடுத்தி மருத்துவக் கல்லூரியுடன் இணைக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். போர்க்கால அடிப்படையில் இதனை நிறைவேற்ற விரைவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன் என அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ., கலையரசு (பாமக) தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x