Published : 20 Nov 2013 06:51 PM
Last Updated : 20 Nov 2013 06:51 PM

உதகை: அரசியலால் வீணாகும் குடிநீர்!

பொய்த்துப் போன பருவ மழை, நீரில்லாத அணைகள், தத்தளிக்கும் குன்னூர் மக்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் குன்னூரில் தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாகி விட்டது.

வர்த்தக நகரமான குன்னூரில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்துக்கான ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணையாகும். இந்த அணை 43.6 அடி கொள்ளளவு கொண்டது. கோடை மழை மற்றும் வட கிழக்குப் பருவ மழை பொய்த்த காரணத்தால் ரேலியா அணையின் நீர்மட்டம் தற்போது 15 அடிகளாக மட்டுமே உள்ளது. 9.6 அடி கொள்ளவு கொண்ட பந்துமி அணையும் வறண்டது. இதனை நகராட்சி நிர்வாகம் தூர் வாரியுள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாதம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குன்னூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலால் முடங்கிய திட்டம்

ஜிம்கானா பகுதியிலிருந்து வெளியேறும் நீர் ஆப்பிள் பீ பகுதியில் சேமிப்புத் தொட்டியில் சேமித்தால், நகரப் பகுதிகளில் உள்ள 6 வார்டுகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திட்டம் அரசியலால் நிறைவேறாமல் உள்ளது. நீரோடை, கன்டொன்மெண்ட் வாரியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இதனால் வாரியத்தின் அனுமதி பெற வேண்டும்.

கடந்த காலத்தில் நகராட்சியில் தி.மு.க., தலைவரும், கன்டொன்மெண்ட்டில் அ.தி.மு.க., துணைத் தலைவரும் இருந்ததால், திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பின்னர், குன்னூர் நகராட்சியில் அ.தி.மு.க., நிர்வாகம் பதவியேற்றது. கன்டொன்மெண்ட்டிலும் அ.தி.மு.க., பிரதிநிதிகள் இருந்தனர். மக்கள் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், இதற்காக எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கன்டொன்மெண்ட் வாரிய துணைத் தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த வினோத்குமார் தேர்வு செய்யப்பட்டதால், மீண்டும் அரசியல் மேலோங்கியுள்ளது.

கன்டொன்மெண்ட் வாரியம் இந்த நீரோடையில் கடந்தாண்டு தடுப்பணை கட்டி நீரை தேக்கி தங்கள் பகுதிக்கு வினியோகித்து வருகிறது. இதிலிருந்த வெளியேறும் குடிநீர் குன்னூரின் பிரதான ஆற்றில் வீணாகக் கலக்கிறது.

‘நீரோடையில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக குன்னூர் நகராட்சி நிர்வாகத்துக்கும் கன்டொன்மெண்ட் நிர்வாகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் தடுப்பணை கட்டுவது தொடர்பாக குன்னூர் நகராட்சி சார்பில் இது வரை யாரும் பேசவில்லை,’ என கன்டொன்மெண்ட் வாரிய துணைத் தலைவர் வினோத்குமார் தெரிவித்தார்.

நீரோடையிலிருந்து தண்ணீர் கொண்டு வர முடியாததால் ஆப்பிள் பீ பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் 2006-07ம் ஆண்டில் கட்டப்பட்ட தொட்டி ஒரு சொட்டி தண்ணீர் கூட சேமிக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கிறது.

சகதி நிறைந்த ஹைபீல்டு தடுப்பணை

நகராட்சிக்கு உட்பட 8,9,10,11,12 ஆகிய வார்டுகளுக்கு ஹைபீல்டு பகுதியிலிருந்து வரும் நீரோடையை மறித்து தடுப்பணை கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கி வினியோகிக்கப்படுகிறது. இந்த தடுப்பணை பராமரிப்பு இல்லாமல் சகதி நிரம்பியுள்ளதால், தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாகிறது. இதனால் நகரப் பகுதிக்கு தண்ணீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x