

இருப்பதை எல்லாம் கண்ணெதிரே அழியவிட்டு கிடைக்காத ஒன்றுக் காக கெஞ்சிக் கூத்தாடிக் கொண் டிருப்பதுதான் தமிழனின் தலையெழுத்து போலிருக்கிறது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் குமரி மாவட்டத்தில் உள்ள, 1300 ஆண்டுகள் பழமையான இரணியல் அரண்மனையின் இப் போதைய அவலநிலை.
திறந்தவெளி மதுக்கூடமாய்..
வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் முழுவதுமாய் உருக்குலைந்த நிலையில் சற்றேறக்குறைய ஆறு ஏக்கரில் விரிகின்றது இரணியல் அரண்மனை. இடிந்து போன நிலையிலும் தொன்மை யையும், பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் இந்த அரண்மனையானது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எஞ்சி இருக்கும் மிச்சம் சொச்ச நுணுக் கங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரண்மனையில் மேல் பகுதியில் வேயப்பட்டிருந்த ஓடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதனை தாங்கிப் பிடித்த கம்புகளையும் ஒரு பக்கம் கரையான் அரித்துவிட்டது.
உள்ளே செல்ல, செல்ல அடர் கானகத்தில் நடப்பதைப் போன்ற ஒரு அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அரிய வகை பூச்சிகளும், சில விஷ ஜந்துக்களும் கூட நம்மைக் கடந்து செல்கின்றன. அரண் மனையின் பெரும் பகுதியை காற்றும், மழையும் போட்டி போட்டுக் கொண்டு உருக்குலைந்துள் ளன. அந்த வளாகத்தில் இருந்த கலை நயம் மிக்க பொருள்களையும் சமூக விரோதிகள் களவாடிச் சென்றுவிட்டார் கள். இப்போது அந்த அரண்மனை வளாகம் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிவிட்டதற்கான தடயங்களை பார்க்க முடிகிறது. இத்தனை அவமானங்களை யும் தாங்கிக் கொண்டு நிற்கிறது ஒரு காலத்தில் கம்பீரமாய் வில்கொடி பறந்த இரணியல் அரண்மனை.
முடங்கிப்போன அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை யில் இருந்து ஆறே கிலோ மீட்டரில் உள்ளது இரணியல் அரண்மனை. இதை பழமை மாறாமல் புனரமைக்க 3.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக 2014-ல் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அரண்மனை அந்தோ பரிதாபகதியில் கிடக்கிறது. வழக்கமாக இது போன்ற பாரம்பரிய பெருமைமிக்க நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறைதான் பராமரிக்கும். ஆனால், இரணியல் அரண்மனை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவே மிகப்பெரிய முரண் என்கின்றனர் தொல்பொருள் ஆர்வலர்கள்.
அரண்மனையின் அருமைகள்
அரண்மனை குறித்து உள்ளூர்க் காரர்கள் ஆதங்கத்துடன் இப்படி விவரிக்கின்றனர். ‘’முந்தைய காலத்தில் திருவனந்தபுரம் முதல் ஆரல்வாய்மொழி வரை இருந்த தேசத்தை ‘வேநாடு’ன்னு சொல்லுவாங்க. அதன் தலைநகரமா இரணியல் தான் இருந்துச்சு. சேரமான் பெருமாள் கி.பி. 776 வரை வேநாட்டை ஆட்சி செஞ்சாரு.
இந்த அரண்மனையின் பள்ளிய றையில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்ட ஒரே பளிங்கு கல்லால் ஆன படுக்கை இருக்கு. இதில்தான் மன்னர் படுப்பாரு. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்ட வர்மா ஆட்சி செஞ் சாரு. அவரது காலத்துக்கு பின்னாடி தான் தலைநகரத்தை பத்மநாபபுரத்துக்கு மாத்தீட்டாங்க.
இங்கு மன்னராக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் பள்ளியறையில் சேர மானின் உடை வாளை வைத்து, ‘எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டு மக்களை காப்பாத்துவேன்’னு சத்தியம் செய்வார்கள். இதுக்கு ‘வாள் வச்ச சத்தியம்’ன்னு பேரு. குமரி மாவட் டம் கேரளாவோடு இருந்த வரைக்கும், கேரள தேவசம்போர்டு இந்த அரண்மனை யையும், பத்மநாபபுரம் அரண்மனைக்கு இணையாக பராமரிச்சாங்க. தமிழக அரசு கட்டுப்பாட்டுக்கு வந்ததும் இந்த அரண்மனையையும், அதன் பக்கத்தில் இருந்த மார்த்தாண்டேஸ்வரர் கோயி லையும் இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்புல ஒப்படைச் சாங்க. அதிலிருந்தே எல்லாம் பாழாப் போயிருச்சு.
கேரளத்தின் அக்கறையும் தமிழகத்தின் அசட்டையும்
மார்த்தாண்டேஸ்வரர் கோயிலும் சேர மன்னர்கள் காலத்தில் உருவானது தான். அரண்மனையில் முன்பு பல அரியவகை சிற்பங்கள், தானியங்களை சேமித்து வைக்கும் குதில், குலுக்கை உள்ளிட்ட பாரம்பரிய பெருமைமிக்க பொருள்கள் நிறைய இருந்துச்சு. அது எதையுமே இப்ப காணோம். எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டாங்க. அன்றைய காலத்தில் அழகாக வடிவமைத்திருந்த நாட்டிய அரங்கம், மன்னரின் ஆலோசனைக் கூடம் எல்லாம் இப்போது இடிந்து கட்டாந்தரையாக உள்ளது.
பத்மநாபபுரம் அரண்மனையை பழமை மாறாமல் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு எடுத்து வருகிறது. ஆனால், இரணியல் அரண்மனை தான் கேட்பார் பார்ப்பார் இல்லாமல் கிடக்கிறது’’ என்கிறார்கள் இரணியல் மக்கள்.
அரண்மனை முழுவதும் வியாபித் திருந்த கைவேலைபாடுகள் நிறைந்த நுண்கலையை வெளிப்படுத்தும் பல பொம்மைகள் இப்போது அவை இருந் ததற்கான சுவடையும் தொலைத்து நிற்கின்றன. அரண்மனை குளம்கூட பாழ்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது.
மீண்டும் போராட்டம் நடத்துவேன்
இது குறித்து இந்த அரண்மனையை உள்ளடக்கிய குளச்சல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கூறுகை யில், “கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை யில் நான் கோரிக்கை வைத்ததால் தான் அரண்மனையை புனரமைக்க 3.85 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட பிறகும் அரண்மனையை சீர்செய்வதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை அதிகாரிகள். அரண் மனையை புனரமைக்க வலியுறுத்தி அண்மையில் மீண்டும் போராட்டம் நடத்தினேன்.
நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லி என்னை சமாதானம் செய்தார்கள். அப்படியும் வேலை ஆகவில்லை. இந்த அரண்மனையை புதுப்பித்து தேவையான அடிப்படை வசதிகளைச் செய்தால் இந்தப் பகுதியை சுற்றுலா தலமாக மாற்றி அதன் மூலம் வருவாயை பெருக்கலாம். இனியும் இரணியல் அரண்மனை சீரமைப்பு விவகாரத்தில் அரசு மெத்தனம் காட்டினால் தொடர் போராட்டங்களை நடத்தி அரண்மனையை சீரமைக்க வைப்பேன்.’’ என்றார்.
கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதியிடம் இரணியல் அரண்மனை குறித்து கேட்டபோது,
“புனரமைப்பு பணிகளை செய்வது தொடர்பாக நீண்ட காலமாக தகுதியான ஒப்பந்ததாரர்கள் கிடைக்கவில்லை. கடந்த மாத இறுதியில் கோரப்பட்ட மறு ஒப்பந்தப்புள்ளிக்கு நான்கு பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவற்றை அரசுக்கு அனுப்ப உள்ளோம். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் துவங்கும். எப்படியும் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் புனரமைப்பு வேலைகள் துவங்கி விடும்.”என்றார்.
இரணியல் மன்னர்களால் கட்டி, வழி படப்பட்ட மார்த்தாண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கிற்கு தயாராகி வரும் இந்த நேரத்திலாவது இரணியல் அரண் மனையை புதுப்பிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.
பளிங்குக்கல் படுக்கை
காணாமல் போன காணி மக்கள் சடங்கு
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேச்சிப்பாறையை ஒட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் காணி மக்கள் கார்த்திகை மாதத்தில் இரணியல் அரண்மனைக்கு வந்து, விசேஷ வழிபாடு நடத்திக் கொண்டாடிச் சென்றிருக்கிறார்கள். அரண்மனை கவனிப்பாறின்றி பாழடைந்து கிடப்பதால் இப்போது அந்த வழக்கமும் மறைந்துவிட்டது. எனினும், இப்போதும் ஒருசிலர் அரண்மனையின் பள்ளியறையில் உள்ள மன்னரின் கட்டிலுக்கு விளக்கு ஏற்றி அதனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
படங்கள்: என்.ராஜேஷ்