நாமக்கல்: குட்டை போன்ற காவிரி ஆற்றில் எளிதில் சிக்கும் பெரிய மீன்கள்: சுவை மிகுதியால் இறைச்சிப் பிரியர்கள் ஆர்வம்

நாமக்கல்: குட்டை போன்ற காவிரி ஆற்றில் எளிதில் சிக்கும் பெரிய மீன்கள்: சுவை மிகுதியால் இறைச்சிப் பிரியர்கள் ஆர்வம்
Updated on
1 min read

காவிரியில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுவதால் அதிக எடையுள்ள மீன்கள் எளிதில் வலையில் பிடிபடுகின்றன. சுவை மிகுந்திருப்பதால் அவற்றை இறைச்சிப் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நுழையும் காவிரி ஆறு பள்ளிபாளையம், ப.வேலூர், மோகனூர் ஆகிய இடங்களில் பரந்து விரிந்து செல்கிறது. காவிரியை மையப்படுத்தி பல பகுதியில் மீன்பிடித் தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு பிடிக்கப்படும் மீன்கள், மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் பிடிபடும் மீன்கள் சுவை மிகுந்திருப்பதால் அவற்றுக்கு இறைச்சிப் பிரியர்கள் மத்தியில் மிக அதிகமான வரவேற்பு காணப்படுகிறது.

குட்டை போல் ஓடும் காவிரி ஆறு

பரந்து விரிந்து சென்ற காவிரியில் தற்போது வெறும் மணல் திட்டுகள் மட்டும் அங்காங்கே காட்சியளிக்கிறது. ஆற்றில் சிறு ஓடை போல் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. தவிர, ஆற்றில் குட்டை போல் ஆங்காங்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அப்பகுதியில் மீனவர்கள் வலையை வீசும் போது, கணிசமான அளவில் மீன்கள் சிக்குகிறது. உடனடியாக அங்கேயே வைத்து, அவற்றை சுத்தம் செய்து மீன்களை விற்பனை செய்கின்றனர். அவற்றை இறைச்சிப் பிரியர்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

உடனுக்குடன் விற்பனை

இதுகுறித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் கூறுகையில், ''காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரையையும் தொட்டபடி செல்லும் சமயத்தில் மீ்ன்கள் எளிதில் சிக்காது. வலையை வீசி மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடுவதால் மீன்கள் எளிதில் பிடிபடுகின்றன.

அதிக எடையுள்ள மீன்களும் தற்போது வலையில் சிக்குகின்றன. உயிருடன் பிடித்து உடனடியாக சுத்தம் செய்து தருவதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மீன் ரககங்களுக்கு தகுந்தாற்போல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in