

கடல் சீற்றத்தைக் காரணம் காட்டி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். இதில், அரசியல் சாயம் பூசப்படுவதாக, முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் குற்றம்சாட்டுகிறார்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிசயித்து பார்க்கும் விஷயம் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். சீறும் கடல் அலைகளுக்கு மத்தியில், கம்பீரமாக காட்சி தரும் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் முக்கிய அடையாளம்.
கடல் நடுவே, 133 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசிக்க, உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், கடல் நீர் மட்டம் குறைகிறது என்று காரணம் கூறி, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திட்டமிட்டு புறக்கணிப்பா?:
திருவள்ளுவர் சிலை, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவப்பட்டதால், அ.தி.மு.க. அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்.
அவர் கூறுகையில், ‘கன்னியாகுமரி கடலின் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை, 2000-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். வள்ளுவரின் புகழை உலகமெல்லாம் பரப்பும் நோக்கத்தில் தான், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே இந்த சிலை அமைக்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. அரசு, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவிய சிலை என்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. வள்ளுவருக்கே தி.மு.க. சாயம் பூசி விட்டார்களோ, என்னவோ தெரியவில்லை.
சுற்றுலா கொள்ளை:
பூம்புகார் படகுப் போக்குவரத்து கழகம் சார்பில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 34 வசூலிக்கின்றனர். ஆனால், திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு அழைத்துச் செல்வதில்லை. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில், ஒரு தரமான நூலகமும் தி.மு.க. ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது. அப்போது அமைக்கப்பட்ட குடிநீர் வசதி, கேன்டீன் வசதியும் இப்போது செயல்பாட்டில் இல்லை. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.
கூட்டம் தான் தீர்மானிக்கிறது:
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு 3 படகுகள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். கன்னியாகுமரியில் சீசன் நாட்களில் பத்தாயிரம் பேரும், சாதாரண நாட்களில் 2,000 பேரும் வருகின்றனர்.
படகில் ஒரு முறைக்கு 150 பயணிகள் வரை ஏற்றி செல்லப்படுகின்றனர். மொத்தம் 3 படகுகளே இருப்பதால், இரு இடங்களுக்கும் அழைத்து செல்வதால் நேரம் விரயம் ஆகும். கன்னியாகுமரியில் குவியும் கூட்டமே வள்ளுவர் சிலையின் படகு போக்குவரத்தை தீர்மானிக்கிறது என்றார்.
கடலின் நடுவே கம்பீரமாக இருக்கும் வள்ளுவர் சிலையை 3ஆண்டுக்கு ஒருமுறை உப்பு காற்றில் இருந்து பராமரிக்க ரசாயன கலவை பூச வேண்டும். அ.தி.மு.க. அரசு ரசாயனக் கலவை பூசவில்லை என்று சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்துக்கும் நாள் குறித்தார். அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க. அரசு வள்ளுவர் சிலையை பராமரிக்க டெண்டர் வெளியிட்டு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சுழலில் திருவள்ளுவரை சிக்க வைக்கக் கூடாது என்பதே, தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு, அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது. அரசியலில் அவரையும் சிக்க வைத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் கூறுகையில், “திருவள்ளுவரை பெரிதும் மதிக்கிறோம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் வீணான குற்றச்சாட்டு. பருவநிலை மாறுபாட்டின் காரணமாகவே படகை இயக்க முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன்” என்றார்.