

தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல்வர் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இம்மாதம் 21-ம் தேதி காலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலிலும் அன்று மாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
மார்ச் 21-ம் தேதி சிவகாசியில் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் அறிவித்த நாளிலிருந்து அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.
சிவகாசி குறுக்குத் தெருவிலுள்ள மைதானத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா நடத்துவதாக முதலில் திட்டமிடப்பட்டது. அங்கேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, அருகிலேயே விழா மேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டன. முதல்வர் வந்து இறங்குவதற்கான ஹெலிகாப்டர் இறங்குதளமும் சுமார் ரூ.7 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், வாகனங்கள் வந்து செல்வதற்கும் அந்த இடம் போதாது என்பதாலும், பாதுகாப்பு குறைவு என்றும் போலீஸாரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, சிவகாசி குறுக்குச் சந்தில் விழா நடத்தும் திட்டம் கடந்த 3 நாள்களுக்கு முன் கைவிடப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதோடு கைவிடப்பட்டது.
இந்நிலையில், திருத்தங்கல் காவல் நிலையச் சாலையில் கல்குவாரி அமைந்துள்ள அண்ணாமலையார் நகரில் விழா மேடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழா மேடை அருகிலேயே பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. மேலும், புதர் மண்டிக் கிடந்த அப்பகுதி முழுவதும் புல்டோசர் இயந்திரங்கள் மூலம் கடந்த 3 நாள்களாக சுத்தம் செய்யும் பணி இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, விழா நடைபெறும் திடலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, புதிதாக மின் இணைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் சாலையிலிருந்து விழா நடைபெறும் அண்ணாமலையார் நகர் வரையுள்ள சாலை நெடுஞ்சாலைத் துறையினரால் வேகவேகமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சாலையோரத்திலுள்ள மரங்களில் வெள்ளை மற்றும் கருப்பு வர்ணம் பூசும் பணியும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், முதல்வரை வரவேற்கும் வகையில் வைப்பதற்காக நூற்றுக்கணக்கான பிளக்ஸ் போர்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மாவட்டச் செயலரும் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கேயே அமர்ந்து பார்வையிட்டு வருகிறார்.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், முதல்வர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்காக மட்டும் அதைவிட அதிகமான தொகை செலவு செய்யப்பட்டு வருவதாகவும், அமைச்சரின் சொந்த ஊர் என்பதால் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.