

தருமபுரியில் பழங்களை பழுக்க வைக்க தொடர்ந்து ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயத்துக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.
முன்பெல்லாம் அனைத்து பழங்களும் இயற்கையான முறையிலேயே பழுக்க விடப்பட்டன. விவசாயிகளும், வியாபாரிகளும் பழங்கள் பழுக்கும் வரை காத் திருந்து, பின்னரே விற்பனைக்குக் கொண்டு வருவர். காய் பதத்தில் விற்பனைக்கு வந்தாலும், அவற்றை வாங்கிச் செல்வோர் நன்கு பழுக்கும் வரை வைத்திருந்து, பின்னரே பழங்களைச் சாப்பி டுவர். ஆனால், தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் 50 சதவிகிதத்துக்கும்மேல் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான்.
இயற்கை முறை
முன்பு வைக்கோல் அல்லது தவிடு ஆகியவற்றுக்குள் காய் களை புதைத்து வைத்து பழுக்கச் செய்வர். ஆனால், வர்த்தகம் அதிகரித்த நிலையில், அறுவடையான உடனேயே பழங்களை மொத்தமாக பழுக்க வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
துவக்கத்தில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், ஒரு அறையில் காய்களை குவித்து வைத்து, ஊதுபத்தியை கொளுத்தி வைத்து அறையைப் பூட்டி விடுவர். ஊதுபத்தியிலிருந்து எழும் புகை மண்டலம் அறை முழுவதும் தேங்கி, சில நாட்களில் காய்கள் பழுத்து விடும். இதேபோல், ஒரு குழியில் காய்களை அடுக்கி வைத்து, இலை, தழைகளைப் போட்டு மூடி அதன்மேல் மண்ணைக் குவித்து வைப்பர். மிதமான வெப்பத்தால் சில நாட்களில் காய்கள் பழுத்துவிடும்.
ரசாயனப் பயன்பாடு
ஆனால், தற்போது பழங்களை மொத்தமாக பழுக்கச் செய்து, உடனடியாக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக கார்பைடு, எத்திலீன் உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி, பழங்களை பழுக்க விடுகின்றனர்.
ரசாயனக் கலவையை நீரில் கரைத்து, அதில் காய்களை சில நிமிடங்கள் நனைத்தபின் ஓர் அறையில் குவித்து வைத்து, அறையைப் பூட்டிவிடுகின்றனர். ஒரே நாளில் காய்கள் பழுத்து விடுகின்றன. இதுபோன்ற செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்ணும்போது வயிறு உபாதைகளில் தொடங்கி புற்றுநோய் வரையிலான பல்வேறு நோய்களைச் சந்திக்கும் நிலை உருவாகிறது. இந்த வகையில் வாழை, மா, பப்பாளி, ஆரஞ்சு, சப்போட்டா உள்ளிட்டவை பழுக்க விடப்படுகிறது.
வேறுபாடு என்ன?
இயற்கை முறையில் பழுக்கும் பழங்கள் உள்ளிருந்து வெளிப்புறத்தை நோக்கி பழுக்கும். ஆனால் ரசாயன உதவியுடன் பழுக்க விடும் பழங்கள் வெளியில் இருந்து உள்நோக்கி பழுக்கும். பழத்தை உண்ணும் போது, பழுத்த சதைகளின் உள்ளே ஆங்காங்கே முடிச்சுகள் போன்ற சிறு திண்டுகளை உணர முடியும்.
இதுபோன்ற அவலங்கள் தொடர்வதற்கு, சுகாதாரத் துறை அதிகாரிகளின் தொடர் அலட்சியமும், லஞ்சமுமே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழகம் முழுவதுமே செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் ஆரோக்கியம் தொடர்பான இந்தப் பிரச்சினையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.