Last Updated : 10 Feb, 2017 09:58 AM

 

Published : 10 Feb 2017 09:58 AM
Last Updated : 10 Feb 2017 09:58 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: மாப்ள பன்னீர்செல்வம்தான்!- துரைமுருகன் கலகல பேட்டி

தமிழகமே அல்லோகலப்பட்டுக்கிடக்கிறது. வழக்கம்போல் செம ஜாலியாக இருக்கிறார் திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன். எந்தக் கேள்வியைக் கேட்டாலும், நக்கலும் நையாண்டியுமாக பதில் தந்துப் புரையேற வைக்கிறார் மனிதர். வெறும் சிரிப்பு மட்டுமல்ல, விஷயமும் இருக்கிறது. அவரது பேட்டி:

தமிழக அரசியல் சூழல் பற்றி...

பாட்டாவே பாடிடுறேனே... “நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு... நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு...”

யாரை முதல்வராக்கப் போகிறீர்கள் பன்னீரையா? ஸ்டாலினையா?

கல்யாணப் பந்தல் ரெடி. மாப்ள யாருன்னு தமிழ்நாடே கவனிக்குது. ‘மாப்ளை’யே மாப்ளையாக இருக்கப் போறாரா? இல்ல ‘பொண்ணு’ மாப்ளையாகப் போகுதாங்கிறது தான் பிரச்சினை. எங்களுக்கு இன்விடேஷன் வெச்சா, வழக்கம்போலப் போய் கல்யாணத்தைப் பாப்போம். அவ்வளவு தான். மாப்ள ஓ.பி.எஸ்.தான்கிறது என் கணிப்பு.

ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும்போதே, 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும்னு சொன்னீங்களே எப்பிடி?

தம்பி நான் 60 வருஷமா அரசியல்ல இருக்கிறேன். நேரு இறந்ததும், காங்கிரஸ் இண்டிகேட்டு, சிண்டிகேட்டுன்னு உடைஞ்சுது. கம்யூனிஸ்ட்டும் ரெண்டாச்சு. எம்ஜிஆர் மறைஞ்சதும் ஜானகி அணி, ஜெ அணி, எம்ஜிஆர் கழகம் அது இதுன்னு ஒரு நூறு கட்சி உருவாச்சு. அப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் நடக்கும்னு கணிச்சேன். நடக்குது. அதேசமயம், எங்க கட்சியைப் பாருங்க…கல்லுல இருந்து கூட நார் உரிக்கலாம். கழகத்துல இருந்து யாரையும் கிளப்பிக்கிட்டுப் போக முடியாது. நம்மாளுங்க மந்தையும் கெடையாது, லாரியிலேயும் ஏத்த முடியாது.

டீக்கடையில வேலைபார்க்கிற கஞ்சாக் கருப்பை, முதலாளின்னு சொல்லி வேலைக்கே கேட்டுவைக்கிற ‘பருத்திவீரன்’ சினிமாக் காட்சியை மீம் ஆக்கி. ‘நீ நடத்து சித்தப்பு’ன்னு உங்களைப் பத்தி கமெண்ட் சமூக வலைதளங்கள்ல ஓடுதே பாத்தீங்களா?

(ரொம்ப நேரம் சிரிக்கிறார்.) என்னையையே கலாய்ச்சாலும், நல்லாயிருந்தா சிரிப்பேன் தம்பி. நம்மால சிரிக்காம எல்லாம் இருக்க முடியாது. சிரிக்கவே கூடாதுன்னு 'சின்ன' மம்மி சொல்றாங்க. அடுத்தவாட்டி ஜைனத் துறவிங்க மாதிரி, வாயில துணியைக் கட்டிக்கிட்டுத்தான் சட்டசபைக்குப் போகணும் போல (மறுபடியும் சிரிக்கிறார்). சட்டசபையில பன்னீரைப் பார்த்து நான் என்ன சொன்னேன்? “உங்களுக்கு எங்களால பிரச்சினை இல்ல, பின்னாடி ஜாக்கிரதை”ன்னு சொன்னேன். திரும்பிப் பார்த்து விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்டவரு நேரா சமாதிக்கே போயிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி நாட்டையே ஆண்ட மன்னன், சுடுகாட்டுக்குப்போய் உட்கார்ந்தது அரிச்சந்திரனுக்கு அப்புறம், நம்ம பன்னீர்செல்வம்தான். அவரு அழுத்தமான ஆளு. நல்லா யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கார்.

கவர்னர் திடீர் திடீர்னு மாயமாகுறாரே? நீங்க கவர்னரா இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?

‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் எதுக்கு?’ன்னு கேட்டவங்க நாங்க. நம்ம கவர்னருக்கு வேகம் பத்தாது தம்பி. நான் கவர்னரா இருந்திருந்தா, சட்டசபையையே கலைச்சிட்டு, புதுசா தேர்தல் வெச்சிருப்பேன். அப்புறம் என்ன… கழக ஆட்சிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x