Last Updated : 31 Jan, 2017 10:40 AM

 

Published : 31 Jan 2017 10:40 AM
Last Updated : 31 Jan 2017 10:40 AM

மாநில உரிமைகளுக்கான உணர்வு மங்கிவிடவில்லை!

'காட்டுக்குயில் பாட்டைக் காது கொடுத்துக் கேட்பதற்குக் கானகத்தில் யாரும் இல்லாதபோது, தன் தொண்டை வறண்டு புண்ணாகும் வரை அது எதற்காகப் பாட வேண்டும்?' என்று கூறி பொதுவாழ்விலிருந்து விலகியவர் தமிழருவி மணியன். மனம் மாறி மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

1. மாணவர் போராட்டம் பற்றி...

'மாணவர்களும் இளைஞர்களும் சுயநலத்திலேயே சுருங்கிவிட்டவர்கள், சினிமா நடிகர்களை ஆராதிப்பதும், கட் அவுட் வைப்பதுமாக இருப்பவர்கள், இவர்களுக்கு வேற எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது' என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை முறியடித்த போராட்டம் இது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைவிட இன்னும் முனைப்பாக மாணவர்களின் உணர்வு வெளிப்பட்டது. மிக ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கான அடையாளமாக இதைப் பார்க்கிறேன்.

2. மீண்டும் அரசியல் பிரவேசம் ஏன்?

தமிழக மக்களின் அடிமனங்களில் ஊழலற்ற பொதுவாழ்வு, அதற்கான தாகம், மாநில உரிமைகளுக்காகப் போராடக்கூடிய உணர்வு இவை எல்லாம் இன்னும் மங்கிவிடவில்லை என்பதை இப்போராட்டத்தின் வாயிலாகப் புரிந்துகொண்டேன். இந்த உணர்வு மங்கிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில், மீண்டும் பொதுவாழ்வுக்குத் திரும்பியிருக்கிறேன்.

3. உங்கள் இலக்கு?

காந்திய மக்கள் இயக்கத்தின் இலக்குகள் மதுவற்ற மாநிலமும் ஊழலற்ற நிர்வாகமும். இந்த இரண்டை நோக்கித் தமிழ் மக்களை இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என் வேள்வியாக இருந்தது. சமூகநலன் சார்ந்து புறப்பட்டிருக்கிற இந்த மாணவர்களையும், இளைஞர்களையும், பொதுமக்களையும் இந்த இலக்குகளை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பக்குவமான நிலை இப்போது இருப்பதாக நம்புகிறேன். அரசியல்வாதிகளுக்கு தார்மிக அச்சமும் இல்லை, சமூக அச்சமும் இல்லை.

ஒவ்வொரு தவறான அரசியல்வாதிகளின் வீட்டு வாசலிலும் ஒரு ஆயிரம் பேர் திரண்டு, அவர் தவறான வழியில் சேர்த்துவைத்திருக்கக்கூடிய சொத்தை அரசு மீட்க வேண்டும் என்பது போன்ற போராட்ட வடிவத்தை முன்னெடுக்கத் தொடங்கினால்தான் அரசியல்வாதிகளுக்கு அச்சம் வரும். மாணவர்களின் இந்த தன்னெழுச்சியை என்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகவோ, அல்லது காந்திய மக்கள் இயக்க வளர்ச்சிக்கோ பயன்படுத்திக்கொள்ளும் ஆசை எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இந்தப் போராட்டங்களை எல்லாம் நெறிப்படுத்தி, தலைமையேற்று விளம்பரமடைய வேண்டும் என்ற தாகமும் எனக்குக் கிடையாது. அவர்கள் சரியான பாதையில் கொண்டு செல்லப்பட வேண்டும். அப்படிச் செல்லக்கூடிய மனிதர்களின் கடைசி வரிசையில் நானும் என் இயக்கமும் நடப்போம்.

4. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள்…

ஒரு கம்பீரமான முதல்வராக பன்னீர்செல்வம் இன்னமும் வெளிப்படவில்லை. பொதுச்செயலாளர் சசிகலாவும் சரி, அவருடைய அமைச்சரவை சகாக்களும் சரி, ஓ.பி.எஸ்.ஐ சுயமாக, முதல்வருக்குரிய கம்பீரத்துடன் பணியாற்ற அனுமதிக்கவில்லை.

வழிநெடுகிலும் எனக்கு பேனர் வைக்காதீர்கள் என்று சொல்வது, முதல்வரின் காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றது, மக்கள் பிரச்சினைக்காக முதல்வரைப் போய் ஈகோ பார்க்காமல் சென்று சந்தித்தது, சட்டசபைச் செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஸ்டாலின் பக்குவப்பட்டிருக்கிறார்.

5. இளையோர் வாசிப்புக்காகச் சில புத்தகங்கள்...

பிளாட்டோவின் 'குடியரசு', ராமசந்திர குஹாவின் 'காந்திக்குப் பிறகு இந்திய வரலாறு', ஜெயமோகனின் 'இன்றைய காந்தி', நேருவின் 'உலக சரித்திரம்', தனஞ்செய் கீர் எழுதிய 'அம்பேத்கர் வரலாறு'(தமிழில் முகிலன்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x