குமரி மக்களை மிரட்டும் `ராணித்தோட்டம்’: பராமரிப்பில்லாத பஸ்களை மட்டுமே கொண்ட அரசு பணிமனை

குமரி மக்களை மிரட்டும் `ராணித்தோட்டம்’: பராமரிப்பில்லாத பஸ்களை மட்டுமே கொண்ட அரசு பணிமனை
Updated on
2 min read

அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் தலைமைப் பணிமனை ராணித் தோட்டத்தில் இயங்குகிறது. மிகச்சிறந்த பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் பணிபுரிந்த தொழிற்கூடம் இது. பஸ் கட்டமைப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, தோற்றத் திலும், உறுதியிலும் மிகச் சிறந்த பஸ்களை உருவாக்கி, தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்று, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே ராணியாக திகழ்ந்தது ராணித்தோட்டம் பணிமனை. இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்.

உருக்குலைந்த பஸ்கள்

இப்போதெல்லாம், வெளி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஓடி, உருக்குலைந்த பஸ்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன. அவையும், முறையாக பராமரிக்கப்படாமலும், தரமான உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்படாமலும், பிடிமானம் இல்லாத தேய்ந்த டயர்களுடனும், சீரான பி.டி.ஐ. செக் அப், பிரேக் கண்டிஷன் இல்லாமலும் இயக்கப்படுகின்றன. இதிலும் முக்கியமாக, பணிமனையில் தொழில் நுட்ப உதவியாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

உதவியாளர் பற்றாக்குறை

போக்குவரத்துத் துறையில் போதிய தொழில்நுட்ப உதவியாளர் பணியாளர்களை, அரசு நியமனம் செய்யவில்லை. தரமான உதிரிப் பாகங்கள் மற்றும் டயர்கள் அரசு சார்பில் வழங்கப்படுவது இல்லை. பஸ்கள் பராமரிப்பின்மையால், நடுவழியில் பழுதாகி நிற்கின்றன.

உலுக்கிய விபத்து

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை நீடித்த போதும், கடந்த வாரம், மார்த்தாண்டம்- பத்துகாணி சென்ற, தடம் எண்- 86 பஸ், பிரேக் இணைப்பு துண்டித்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பஸ்ஸுக்குள் இருந்து வெளியே விழுந்த, 7ம் வகுப்பு மாணவி அஸ்வதி பலியான சம்பவம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பலியானதற்கு பராமரிப்பு இல்லாத பஸ் இயக்கப்பட்டதே காரணம் என பல்வேறு தரப்பிலும், கண்டனக் கணைகள், ராணித்தோட்டத்தை நோக்கி பாய ஆரம்பித்து உள்ளன.

எம்.எல்.ஏ. விஜயதரணி கூறுகையில், “பஸ்ஸில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகளை பணிமனையின் உயர் அதிகாரிகளிடம், ஓட்டுனர், நடத்துனர்கள் கூறிய பின்பும், `பஸ்களை சமாளித்து ஓட்டுங்கள்’ என்று, அதிகாரிகள் சர்வ சாதாரணமாக கூறியதன் விளைவுதான் மாணவியின் உயிர் பலி.

குமரியில் தகுதியற்ற பஸ்களின் இயக்கத்தை தடை செய்து, புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும். விபத்துக்கு காரணமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என, பலமுறை கூறிய போதும், தமிழக அரசு செவிசாய்க்க மறுத்து மெத்தனமாக இருந்ததன் விளைவுதான் இந்த மாணவியின் உயிர் பலி” என கூறி உள்ளார்.

உத்தரவாதம் இல்லை

காங்கிரஸ் விவசாயப் பிரிவுத் தலைவர் ஆர்.எஸ்.ராஜன், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்ற டிப்போக்களில் இருந்து ஒதுக்கப்பட்டவையாகவும், பழையதாகவும் இருக்கின்றன. இதனால், பயணிகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.

மோசமான பஸ்களை, மிக மோசமான சாலைகளில் இயக்கி வருகிறார்கள். இதன் எதிரொலியாக பல லட்சங்கள் லாபத்தில் ஓடிய, நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழகம், இப்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உடைந்து போன இருக்கைகள், நீண்டு நிற்கும் ஆணிகள், பஸ் முழுவதும் ஒட்டுப் போட்ட தரைப்பகுதி… இதெல்லாம்தான், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பஸ்களின் அடையாளம். கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பிடிகம்பி இருக்காது. அப்படியே இருந்தாலும் சுற்றிச்சுற்றி வெல்டிங் செய்யப்பட்டிருக்கும்.

இரவு நேரத்தில் உள் விளக்கும், வெளி விளக்கும் எரியாது. பஸ் பயணத்தில் குடை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது”என்றார்.

கவனிக்கப்படுமா?

கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தாமஸ், “குமரி மாவட்டத்தில் ஓடும் பஸ்கள் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அடிக்கடி பழுதாகி சாலை ஓரங்களில் நின்று விடுகின்றன. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியாமல் மன உளைச்சல் அடைகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

பஸ் கட்டணமாக, 4 கிலோ மீட்டர் வரை, ரூ. 3 தான் வசூல் செய்ய வேண்டும் என அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் டி.எஸ்.எஸ்., பி.பி. என பல பெயர்களை மாற்றி, கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. ஒரே தூரத்தில் பயணிக்க பலவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

மோட்டார் வாகனச் சட்டத்தையே மதிக்காத போக்குவரத்துத் துறை, பயணிகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும்?” என்றார்.

புதிய பஸ்கள் ஒதுக்கப்படுமா?

இவ்விவகாரம் பற்றி போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்களை ஒதுக்குகிறேன் என்ற போர்வையில், மற்ற மாவட்டங்களில் ஓடிய பஸ்களை அரசு அனுப்பி வைக்கிறது. அவை மிகவும் பழுதடைந்து இருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்றனர்.

நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பதிவு எண் `டி.என்.74 என்’ என்பதாகும். ஆனால், மாவட்டத்தில் இந்தப் பதிவு எண் கொண்ட வாகனங்களை பார்ப்பதே அரிது. தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டை உடைசல் பஸ்கள், பல்வேறு பதிவு எண்களைத் தாங்கி, கன்னியாகுமரியை மிரட்டி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in