Published : 08 Feb 2014 15:50 pm

Updated : 06 Jun 2017 19:19 pm

 

Published : 08 Feb 2014 03:50 PM
Last Updated : 06 Jun 2017 07:19 PM

மருத்துவ குணம் மிக்க `தவுண்’: தென்காசி பகுதியில் விற்பனை மும்முரம்

பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுண், தென்காசி பகுதியில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.

கர்ப்பகதருகு

மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.

பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது, அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்ண சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். வீடுகள் வேயவும், படுக்கவும், உட்காரவும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பனை ஓலை பயன்படுகிறது.

கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள் குளுமையான காற்று தருபவை.

இயற்கை கள்

பனைமர பாளையிலிருந்து பதநீர் கிடைக்கிறது. அதில் சுண்ணாம்பு கலக்காமல் விட்டால், அது சுவையானதாகவும், இயற்கையான, ‘கள்’ என்ற பானம் கிடைக்கும். பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.

பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுண்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

அளவில்லா மருத்துவ குணங்கள்

பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

மனிதரின் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும் இம்மரங்கள் துணையாக இருந்தன. பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உரித்து எடுக்கப்படும் நார் கயிறாக பயன்பட்டது.

வீடுகளில் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பற்ற வைக்க, பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், காய்ந்த ஓலைகளும் தேவைப்பட்டன. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயன்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

பனைமரங்கள் வெட்டி அழிக்கப்படு வதுடன் பனைத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருகாலத்தில் பிரதான தொழிலாக இருந்த பனைத்தொழில் இப்போது மெல்லமெல்ல தேய்ந் து கொண்டிருக்கிறது. பனைமரத்தி லிருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு, பதநீர் ஆகியவை சாலையோரங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

60 நாள் மட்டும்

ஆனால், பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். இப்போதைய தலைமுறையினருக்கு தவுணை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மருத்துவ குணமிக்க இந்த தவுண் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றை குற்றாலம் அருகேயுள்ள மத்தளம்பாறை என்ற இடத்தை சேர்ந்த பனைத்தொழிலாளி மு. ஐயப்பன் (27) தலைமையிலான இளைஞர் குழுவினர் விற்பனை செய்கிறார்கள். இது குறித்து ஐயப்பன் கூறியதாவது:

மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்கிறோம். இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுணை ரூ.60-க்கு விற்பனை செய்கிறோம்.

டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுணையும் கூடவே விற்பனை செய்கிறோம். இதனால், பெரிய அளவுக்கு லாபம் இல்லை. முதலுக்கு மோசமில்லாமல் தவுண் விற்பனை நடக்கிறது என்றார் அவர்
தவுண்பன மரம்இயற்கை உணவுகர்ப்பகதருகு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x