Last Updated : 18 Apr, 2017 08:53 AM

 

Published : 18 Apr 2017 08:53 AM
Last Updated : 18 Apr 2017 08:53 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: மக்கள் போராடினால் மது ஒழிந்துவிடும்!- வழக்கறிஞர் பாலு

மதுக் கடைகளை மூடியே ஆகவேண்டும் என்று தீவிரமாக இயங்குபவர் பாமக வழக்கறிஞர் பாலு. நெடுஞ்சாலையை மாவட்டச் சாலையாக மாற்றுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டபோதே அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத் தடுத்து நிறுத்தியவர். அவருடன் ஒரு பேட்டி.

மக்கள் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முன்பு நடந்த போராட்டங்களைக்கூட உணர்ச்சிப் போராட்டம் என்று சொல்லிவிடலாம். இப்போது அப்படி அல்ல. மக்கள் வீதிக்கு வந்து போராடினால், சட்டப்படி அந்த மதுக் கடைகளை நிச்சயம் அகற்ற முடியும். அதற்கான வாய்ப்பை நீதிமன்றமே உருவாக்கித் தந்திருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பு விவரங்களைச் சொல்லுங்கள்…

நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தள்ளிதான் கடையோ, மதுபானக் கூடமோ இருக்க வேண்டும். கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய நிரந்தர கட்டிடத் தில்தான் அவை நடத்தப்பட வேண்டும். உள்ளே மது அருந்துகிற காட்சி அப்பகுதியில் குடியிருக்கிற மக்கள் அல்லது அவ்வழியாகச் செல்லும் பயணிகள் கண்களில் படவே கூடாது. புதிய கடைக்கு இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது டாஸ்மாக்கின் பொறுப்பே தவிர, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை யினரின் வேலையல்ல. டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு செய்துள்ள இடத்தைப் பார்வையிட்டு, நடைமுறையில் உள்ள சட்டம், டாஸ்மாக் விதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறைவு செய்கிறதா என்று சான்றளிக்க வேண்டியதுதான் வருவாய்த் துறையினரின் பொறுப்பு. எனவே, அவர்களும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மதுக் கடைகள் மூடப்பட்டதால், அருகில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறதே?

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதியில், தினமும் இருவேளை மது அருந்திய பலர் கடந்த 12 நாட்களாக மது அருந்தவில்லை என்று அவர்களது குடும்பத்தினரே என்னிடம் தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டத்தில், மதுக் கடை மூடப்பட்ட ராமதேவன்நல்லூர் கிராமத்தில் ஊர் மக்களே சர்வே எடுத்திருக்கிறார்கள். தினசரி குடிப்பவர்களில் 85% பேர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகக் குடிக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது. எஞ்சியுள்ள 15% பேருக்கு கிராமத்தின் சார்பிலேயே ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். மக்கள் மீது அக்கறையிருந்தால் தமிழக அரசே இதைச் செய்திருக்க வேண்டும்.

அரசு செய்ய வேண்டியது என்ன?

முன்னணி நடிகர்கள், பிரபலங்களைக் கொண்டு, ‘மதுப் பழக்கத்தைக் கைவிட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற விளம்பரங்களை வெளியிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்களைத் தொடங்க வேண்டும். சிலர் பெட்டி பெட்டியாக வாங்கிச்சென்று கிராமங்களில் விற்பனை செய்கிறார்கள். இதைத் தடுக்க அனைத்து கடை, பார்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

2006 தேர்தலின்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி இருக்கிறது என்று முதன்முதலில் பாமக குற்றம்சாட்டியது. இப்போது அதையே காங்கிரஸ் சொல்லியிருக்கிறதே?

வெறும் குற்றச்சாட்டை மட்டும் பாமக வைக்கவில்லை. மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தைக்கொண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்பு அதை நிரூபித்தும் காட்டினோம். உடனே அவர்கள், தங்கள் பாதுகாப்பில் இருந்த ஒரு இயந்திரத்தைத் தந்து தங்கள் முன்னிலையில் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சொன்னார்கள். ‘அதை எங்களிடம் கொடுங்கள், சில நாட்களில் அதைப் போலவே ஒன்றைத் தயாரிக்க முடியும் என்று காட்டுகிறோம்’ என்றோம். தர மறுத்துவிட்டார்கள். அப்போது நாட்டை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் இப்போது அதே கோரிக்கையுடன் ஜனாதிபதியைச் சந்தித்து முறையிடுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x