நாமக்கல்: சூடுபிடித்தது மணப்பள்ளி அரிவாள் விற்பனை!

நாமக்கல்: சூடுபிடித்தது மணப்பள்ளி அரிவாள் விற்பனை!
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள், கரும்பு அறுவடை துவங்கியுள்ளதால், புகழ்பெற்ற மணப்பள்ளி அரிவாள் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரிக் கரையோரக் கிராமங்களான ப.வேலூர், மோக னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. வேளாண்மை மற்றும் விவ சாயம் சார்ந்த தொழில்கள் மூலம், லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மோகனூர் அருகேயுள்ள மணப்பள்ளியில், பயிர் அறுவடைக்குப் பயன்படுத்தப்படும் அரிவாள் தயாரிப்பு பிரசித்திப் பெற்று விளங்குகிறது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் அரிவாள்கள் ஆண்டுக்கணக்கில் உறுதியாக இருக்கும் தன்மை கொண்டதால், புகழ்பெற்ற திருப்பாச்சேத்தி வீச்சரிவாளுக்கு அடுத்தபடியாக, மணப்பள்ளி அரிவாள்கள் புகழ் வாய்ந்தவையாக உள்ளன. பல்வேறு அளவுகளில் அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு, அவற்றின் அளவுக்குத் தகுந்தாற்போல் ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஆர்டரின் பேரிலும் அரிவாள்கள் தயார் செய்யப்படுகின்றன.

தற்போது விவசாயப் பணிகள் மும்முரமாக நடப்பதால், அரிவாள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதுகுறித்து, மணப்பள்ளியைச் சேர்ந்த அரிவாள் தயாரிப்பு பட்டறை உரிமையாளர் கதிர்வேல் கூறியது:

தமிழகத்தில் திருப்பாச்சேத்தி அரிவாளுக்கு அடுத்தபடியாக, மணப்பள்ளி அரிவாள் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மாவட்டங்களில் வேளாண்மை பிரதானத் தொழிலாகத் திகழ்வதால், அரிவாள் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால்,மணப்பள்ளியில் பல தலைமுறைகளாக அரிவாள் தயாரிப்புத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. மரம் வெட்டும் அரிவாள், கதிர் அரிவாள் என பல வகைகளில், பல வகைகளில் அரிவாள் தயார் செய்யப்படுகிறது.

அதன் அளவுக்குத் தகுந்தாற்போல் விலையை நிர்ணயிக்கிறது. உறுதியான எஃகு இரும்பால் அரிவாள் தயார் செய்யப்படுவதால், பல ஆண்டுகள் வரை நன்கு பயன்படும். அறுவடைக் காலங்களில் கதிர் அரிவாள் விற்பனை அதிகமாக இருக்கும்.பொங்கல் பண்டிகை நெருங்குவதால், மஞ்சள்,கரும்பு அறுவடை பரவலாகத் தொடங்கியுள்ளது. இதனால், கதிர் அரிவாளின் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in