

தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் சிறை, இளம் குற்றவாளிகளுக்கான ஒரு சிறை மற்றும் மாவட்ட சிறைகள் உள்பட மொத்தம் 136 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் 22 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். தற்போது 14 ஆயிரம் கைதிகள் வரை உள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 1995-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். அதற்குப் பிறகு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தமிழக சிறைகளில் 4 நாளுக்கு ஒரு கைதி மரணம் அடைகிறார். இவர்களுக்கு ‘மரண’ தண்டனை விதித்தது யாரோ?
தமிழக சிறைகளில் 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 1,095 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நோய் ஏற்பட்டு, சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்ததாகவே கூறப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே போலீஸ் தாக்குவதால் காயம் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். இந்த இரண்டுமே இயற்கையான மரணம் இல்லை என்பது மட்டும் உண்மை.
கைதிகளுக்கு நோய் ஏற்படுவதற்கு சிறைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதும் கைதிகளை அடைக்கும்போது சட்ட விதிகளை கடைப்பிடிக்காததுமே முதன்மைக் காரணங்களாக உள்ளன.
ஒரு சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என இரண்டு பிரிவில் கைதிகள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் உத்தரவால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஆனால், அதன் பிறகு சட்டமும், நீதியும் சிறைகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
முழு பரிசோதனை
ஒரு கைதியை சிறையில் அடைப்பதற்கு முன்பு அவரை சிறை மருத்துவர் முழுமையாக பரிசோதித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும். கைதிக்கு சிறு காயம் இருந்தால்கூட அவரை சிறைக்குள் கொண்டுவர சட்டம் அனுமதிக்கவில்லை. மருத்துவ சிகிச்சை அளித்து காயம் குணமான பிறகே அவரை சிறையில் அடைக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் நடப்பதில்லை.
சிறைகளில் தினமும் காலை 6 மணிக்கு கைதிகளின் அறைக் கதவுகள் திறக்கப்படும். அப்போது எல்லோரும் படபடக்க முண்டியடித்து ஓடுவார்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்க அல்ல. வயிற்றை பிடித்துக் கொண்டு அவர்கள் ஓடுவது கழிவறைக்குத்தான்.
100 பேர், 200 பேர் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டாலும் அங்கு இருப்பது என்னவோ 6, 7 கழிவறைகள்தான். ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.
மற்றவர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் அந்த கழிவறையின் நிலைமை படுமோசமாகி விடும். அதன் பிறகு வரும் ஒவ்வொருவருக்கும் தொற்று நோய் உறுதி.
மன உளைச்சல்
சிறைகளில் மரணம் அடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்று தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அரசு பதில் அளித்துள்ளது. தீவிர மன உளைச்சல், ஆஸ்துமா, அதிக மன அழுத்தம், அல்சர், தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகளால்தான் கைதிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
கைதிகள் மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கும் வழக்கறிஞர் கே.கேசவன் கூறியதாவது:
சிறைகள் சட்டத்துக்கு அப்பாற்பட்ட இடமாக உள்ளன. பணக்கார கைதிகள் சில நாட்களில் வெளியே வந்து விடுகின்றனர். வழக்குக்கு செலவு செய்ய முடியாதவர்கள்தான் சிறைகளில் உள்ளனர்.
சிறையில் 2 டாக்டர்கள் 24 மணி நேரமும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு சிறை வளாகத்திலேயே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அங்கு இருக்காமல் வெளியே தங்கியுள்ளனர். பகலிலும் 2 மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றனர். தகுந்த மருத்துவ சிகிச்சையை விரைவாக சிறை நிர்வாகம் வழங்கினால், 4 நாட்களுக்கு ஒரு கைதி மரணம் அடைய வேண்டிய அவசியம் இருக்காது.
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 1,095 கைதிகளின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவில்லை. இது மனித உரிமையை மீறிய செயலாகும். அவர்களின் மரணத்துக்கு உள்துறை செயலாளரும், சிறைத்துறை உயர் அதிகாரிகளும்தான் பொறுப்பு. இதுபோன்ற மரணம் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கைதிகளுக்கு சுத்தமான உணவு வழங்கப்படுவதில்லை. அவர்களின் உடல்நிலை குறித்த ரெக்கார்டுகள் பராமரிப்பது முக்கியம்.
சிறைகளில் 24 மணி நேரமும் கைதிகளுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கையாக அல்லாமல் கைதிகள் மரணமடைவது குறித்து சிறை
உயர் அதிகாரிகள் மீது மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கேசவன் கூறினார்.